உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சிறந்த ஆரோக்கியமும் உடல் வலுவும் மன பலமும் பெற சிறந்த சத்தான உணவுகள் அவசியமாகும்.நீங்கள் வசிக்கும் இடத்தில் உள்ளூரில் மற்றும் வெளியூரில் விளைவித்த புத்தம் புதிய காய்கறிகள், பால், பழங்கள், இறைச்சிகள் என்று பல வகையான உணவுகள் எளிதில் கிடைக்கின்றன.
நீங்கள் அன்றாட உணவில் சாப்பிடும் அரிசி, கோதுமை, காய்கறிகளில் உடலுக்கு வேண்டிய புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் போதிய அளவில் இருப்பதில்லை. எனவே, அதனை பெற, சில வகை உணவுகள், கால்நடை வளர்ப்பான கோழி இறைச்சி, முட்டை மற்றும் இதர இறைச்சிகள், கடல் உணவுகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முட்டையை எந்த விதத்திலும் உட்கொள்ளலாம்.
முட்டையை உடைத்து அப்படியே சாப்பிடலாம்.அப்படிச் சாப்பிடுவதை விரும்பாவிட்டால், அதை வறுத்து அல்லது வேக வைத்து சாப்பிடலாம்.ஆம்லேட்டாக ஊற்றி அல்லது கறியாக சமைத்து சாப்பிடலாம். கேக்குகள், பணியார வகைகள், ஐஸ் க்ரீம்கள் முதலியவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.புட்டு போன்ற பலகார வகைகளில் இதைச் சேர்த்தால் அவற்றின் ருசி நன்றாகயிருக்கும்.
முட்டைகளை நல்ல முறையில் சமைப்பது முக்கியம்
முட்டையை நீங்கள் சமைக்க விரும்பினால் நடுத்தர, மிதமான அளவில் வேக வைக்க வேண்டும்.அதிக அளவில் வைத்துச் சமைத்தால், அது தோலைப் போல கெட்டியாகி விடும்.சூடான பாலில் முட்டையைச் சேர்க்க வேண்டுமெனில் முட்டையை உடைத்து சிறிது சிறிதாக பாலில் கலக்க வேண்டும்.
கா. ராகவேந்திரன்