முடி வளரும் விதம்

Spread the love

முடி வளர்ச்சிக்கு காரணம் ஆண் ஹார்மோன்களான ஆன்ட்ரோஜென் டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) மற்றும் டைஹைட்ரோடெஸ்டோஸ் ஸ்டெரோன் (Dihydrotestosterone) ஆகும். ஆண் ஹார்மோன்களுக்கும் பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்கலாம். இந்த ஹார்மோன்கள் ஆண்கள், பெண்கள் இருவரிடத்திலும் உள்ளவை. அளவு தான் மாறுபடும்.

முடி வளர்ச்சி தொடர்ச்சியாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட மாதிரியாகத் தான் வளரும். முடி உறை (Follicle) கள் வரிசையாக முடியை உண்டாக்கும். வளர்ச்சி ஒரு சுழற்சியாக நடைபெறும்.

மூன்று கட்டங்களாக முடி வளர்ச்சி நடக்கும். இவை முறையே வளர்பருவம் (அனாஜென்), ஓய்வுப் பருவம் (டெலோஜென்), முடி ‘இறக்கும்’ பருவம் (கெட்டாஜென்), என்று மாறி, மாறி நடந்து வரும்.

முடிவளர் பருவத்தில் தலைமுடி 2 லிருந்து 6 அல்லது 8 வருடங்கள் வளரும். புருவங்களும், கண், இமை முடிகளும் 1 லிருந்து 6 மாதங்களில் வளர்ந்து விடும். ஒரு நாளில் 0.3 முதல் 0.5 மி.மீ. நீளத்திற்கு முடி வளரும் மாதத்தில் 1.25 செ.மீ. முதல் 2.5 செ.மீ. வரை வளரும்.

அடுத்த பருவம் ஓய்வெடுத்து கொள்ளுதல். இதற்கு பிறகு மூன்றாவது கட்டத்தில் முடிகள் உதிர ஆரம்பிக்கும். ஒரு நாளில் 100 தலைமுடிகள், ஓய்வின் முடிவை அடைந்து உதிர்ந்துவிடும். உதிர்ந்த மயிர்க்கால்களில் மறுபடியும் முடி தோன்றி வளரும். ஓய்வுப் பருவம் தொடங்குமுன், மயிர்கால்களுக்கு இரத்த ‘சப்ளை’ நின்று விடும். முடி சுருங்கி, 5-6 வாரத்தில் உதிர்ந்து விடும்.

இந்த சுழற்சி இயல்பாக நடப்பது ஹார்மோன்களின் கையில் இருக்கிறது. சரியான அளவில் ஹார்மோன்கள் சுரந்தால், முடி செழித்து, ஆரோக்கியமாக வளரும்.

நம் தலை முடியில் 90 சதவிகிதம் வளர்பருவத்திலும், 10 சதவிகிதம் உதிரும் பருவத்திலும் இருக்கும். எனவே தினசரி 10-20 முடிகள் உதிர்ந்து கொண்டிருக்கும்.

ஆண்களும், பெண்களும் பருவமடையும் காலத்தில், பிறப்புறுப்புக்கள் மற்றும் அக்குளில் கருமையாக முடி வளரும். ஆண்களுக்கு முகத்தில், மார்பில் முடி வளர ஆரம்பிக்கும். ஆண், பெண் இரு பாலருக்கும், பிறப்புறுப்புக்கள் மற்றும் அக்குளில் முடி வளர காரணம் டெஸ்டோஸ்டிரோன். ஆண்களுக்கு முகத்தில் தாடி வளர காரணம் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன்.

தலை முடியைப்பற்றிய சில விவரங்கள்

·         முடிவளர்ச்சி ஒரு சுழற்சியாக நடக்கிறது. ஒவ்வொரு சுழற்சியிலும் முடியின் உறை (Hair Follicle) யில் வளர்ச்சி ஏற்படும் நிலை, வளர்ச்சி நின்று “ஓய்வெடுக்கும்” நிலை, முடி இறக்கும் நிலை என்று மூன்று நிலைகள் நடந்து கொண்டிருக்கும். வளரும் நிலையின் கால அளவு தான் ஒருவரின் தலைமுடி நீளத்தை நிர்ணயிக்கிறது. முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்காது. 5 முதல் 6 மாதம் ஓய்வில் இருக்கும்!

·         ஒரு மாதத்தில் தலைமுடி 1.25 – 2.5 செ.மீ. வளரும். தலையில் இருக்கும் முடியின் ஆயுள் காலம்  அதிகபட்சமாக 94 வாரங்கள்.

·         வெயில் காலத்தில் முடிவளர்ச்சி அதிகமிருக்கும்.

·         ஆரோக்கிய உணவு, முடிக்கும் ஆரோக்கியத்தை தரும். வயது, ஆரோக்கியம், சூழ்நிலை இவைகள் முடிவளர்ச்சியை பாதிப்பவை.

·         ஆண்களை விட பெண்களுக்குத்தான் கூந்தல் அதிகம் வளரும். கூந்தலை வெட்டாமலேயே விட்டால் 23 லிருந்து 28 அங்குலம் வளரும்.

·        பெண்களுக்கு கூந்தல் 16 வயதிலிருந்து 25 வயது வரை மிக வேகமாக வளரும்.

ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார் எழுதிய முடி கொட்டுவதை தடுக்க என்ற புத்தகத்திலிருந்து.

ஆயுர்வேதம்.காம்


Spread the love