வென்னீர் வைத்தியம்

Spread the love

தலைவலியா? வென்னீர் மூலம் இயற்கை சிகிச்சை எளிதில் குணப்படுத்தும் ஆச்சர்யம்

மனிதனின் உடலில் ஏற்படும் நோய்களை பெரும்பாலும் குணப்படுத்துவது இரத்தம் தான் என்று தெரிந்து கொள்ளுங்கள். மனித உடலில், இரத்தமானது உடல் உஷ்ணத்தை ஒரே நிலையில், நிதானமாக வைத்து நோய்க் கிருமிகளை அழித்து நோயுற்ற அல்லது காயமடைந்த பகுதிகளைச் சரி செய்கிறது.

ஆகவே நோய் கண்ட இடத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் உண்டாகும் படி செய்தல் வேண்டும். உடம்பின் பல உறுப்புகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை வென்னீரையும், குளிர்ந்த நீரையும் உபயோகித்து, நாம் அதிகரிக்கச் செய்யலாம். வென்னீரையும், குளிர்ந்த நீரையும் மாற்றி, மாற்றி உபயோகிப்பதால், நாம் ஒரு உறுப்புக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை நன்றாக அதிகப்படுத்தக் கூடும்.

இரண்டு நிமிட நேரம் வென்னீரைக் கொண்டு சிகிச்சை செய்யும் பொழுது, வென்னீர் படும் இடத்திலுள்ள இரத்தக் குழாய்கள் விரிகின்றன. இரத்தக் குழாய்கள் விரிந்ததும், உடம்பின் பிற உறுப்புகளில் உள்ள இரத்தம் அந்த பகுதியில் நிரப்ப அங்கு ஓடி வருகிறது. அதன் பிறகு பத்து அல்லது இருபது நொடிகளுக்கு குளிர்ந்த நீரை உபயோகித்தால், இரத்தக் குழாய்கள் சுருங்கி, தம்மிடம் உள்ள இரத்தத்தைப் பிற உறுப்புகளில் உள்ள குழாய்களுக்குச் செலுத்துகின்றன.

இப்படி வென்னீரையும், குளிர்ந்த நீரையும் மாற்றி, மாற்றிப் பலமுறை உபயோகிப்பதால் இரத்தம் முன்னும் பின்னும் இறைக்கப்படுகிறது. இதன் காரணமாக நோய் ஏற்பட்டுள்ள உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் அதிகம் ஏற்படுகிறது.

தலைவலியைக் குணப்படுத்த சூடான பாதக் குளியல்

வீட்டில் நாம் மேற்கூறிய வென்னீர் பாதக் குளியல் செய்வதற்கு உஷ்ணமானி, ஆழமான வாளி ஒன்று, குளிர்ந்த ஈரத் துண்டு வென்னீரைக் கொண்டு பாதக் குளியல் செய்ய வேண்டிய வாளியில், வென்னீரானது, கணுக்கால்களுக்கு மேலே வர வேண்டும். ஆரம்பிக்கும் போது நீரில் உஷ்ண நிலை 105 டிகிரியாக தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

பாதங்கள் உஷ்ணத்தின் அளவை நன்றாக அறியக் கூடியவை. வென்னீரில் பாதங்களை அழுத்தியதும், பாதங்கள் பொறுக்கும் படியான சூடு உண்டாகு மட்டும் சிறிது சிறிதாக சுடும் வென்னீரைச் சேர்த்து, நீரின் சூட்டை அதிகப்படுத்திக் கொண்டே போக வேண்டும். இந்தக் குளியாலனது ஐந்து நிமிஷத்துக்கு குறையாமலும், இருபது நிமிஷத்திற்கு அதிகப்படாமலும் இருக்க வேண்டும்.

இவ்வாறு வென்னீர்க் குளியல் செய்யும் போது, குளிர்ந்த நீரிலே, நனைத்து, நன்றாகப் பிழியப்பட்ட ஒரு ஈரத் துண்டை, நோயாளியின் தலையைச் சுற்றிக் கட்டி வைக்க வேண்டும். இந்த ஈரத் துண்டை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். தலைவலியும், தலைச் சுழற்சியும் (கிறுகிறுப்பு) உண்டாகாதபடி இந்த ஈரத் துணி காக்கும்.

இவ்வாறாக வென்னீர் பாதக் குளியலை 15 அல்லது 20 நிமிடங்களுக்கு நடத்தி வந்தால், உடம்பு நன்றாக வியர்க்கும். உடம்பு இன்னும் நன்றாக வியர்க்க வேண்டுமென்றிருந்தால், நோயாளி உடம்பைப் போர்வையின் உதவி கொண்டு நன்றாகப் போர்த்தி, அவரது பாதங்கள் வென்னீரிலே அழுந்தியிருக்கும் போது அவருக்கு குடிப்பதற்கு வென்னீரை அல்லது உஷ்ணமான எலுமிச்சைப் பழச் சாறையாவது கொடுக்க வேண்டும்.

பிறகு வியர்வை நன்றாக உண்டாகும்படி அவரைப் படுக்க வைத்து நன்றாகப் போர்த்த வேண்டும். வென்னீர் பாதக் குளியல் தலைவலியைப் போக்குவதில் மிகச் சிறந்த சிகிச்சை முறையாகும். பொதுவாக காய்ச்சல் ஆரம்பிக்கும் போதும், உடலில் எரிச்சல் உண்டாகும் போதும் இதே சிகிச்சையை செய்யலாம். ஒன்று அல்லது இரண்டு மேஜைக் கரண்டி அளவு கடுகு அரைத்து பாதமிருக்கும் வென்னீரிலே கொட்டிக் கலக்கினால் பாதக் குளியலின் பயன் இன்னும் அதிகமாகும்.

ராகவேந்திரன்


Spread the love