கொடிபோல் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் நம் வாழ்க்கை முறையின் காரணமாக நம்மால் அப்படி உடலை பராமரிக்க முடிவதில்லை. ஏன்னென்றால், நாம் உண்ணும் உணவு தான் காரணம்.
இனி நம் உணவு முறைகளை மாற்றி நம் உடலை கொடிப்போல வைத்து கொள்வோம்.
சிறுதானியங்கள்
நம் முன்னோர்கள் சிறுதானியங்களை உண்டு வாழ்ந்து வந்துள்ளனர், அதனால் தான் அவர்களுக்கு எந்த நோயும் வராமல் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து வந்தனர்.
தினம் ஒரு சிறு தானியம் என்று சாப்பிட்டு வந்தால் உடல் எடை படிப்படியாக குறைவதை நீங்கள் உணர்வீர்கள்.
· திணை
· சாமை
· வரகு
· கம்பு
· கேழ்வரகு
· குதிரைவாலி
இவை அனைத்துமே சிறு தானிய வகைகள் ஆகும்.
கொள்ளு
“கொழுத்தவனுக்கு கொள்ளு
இளைத்தவனுக்கு எள்ளு”
என்று மூதாதையர்கள் கூறியுள்ளனர். உடலில் உள்ள கொழுப்பினை நீக்க கொள்ளு மிகவும் உதவுகிறது. வாரத்திற்கு ஒரு முறை கொள்ளை உணவில் சேர்த்து கொண்டால் உடல் எடை குறைந்து கொடி போன்று மாறிவிடலாம்.
கொள்ளு ரசம்:
தேவையான பொருட்கள்
கொள்ளு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1௦ இலைகள்
சின்ன வெங்காயம் – 8 (நறுக்கியது)
பூண்டு – 3 பல் (நறுக்கியது)
கடுகு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கொள்ளை குக்கரில் 3 விசில் வரும் வரை வைத்து வேக வைத்து கொள்ளவும். பின்பு, வேகவைத்த கொள்ளு, காய்ந்த மிளகாய், மல்லி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை வதக்கி அரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின் இறக்கினால் சுவையான சத்தான ரசம் தயார்.
இட்லி
மிக சத்தான சிற்றுண்டி என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது இட்லியை தான். ஆவியில் செய்த அனைத்துமே நம் உடலுக்கு நல்லது தான். ஆவியில் செய்த உணவை உண்ணுவதால் நம் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.
வெஜிடபிள் இட்லி
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – கால் கிலோ
உளுத்தம் பருப்பு 1௦௦ கிராம்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
துருவிய கேரட் – ஒரு கப்
முட்டை கோஸ் – ஒரு கப்
குடமிளகாய் (நறுக்கிய) – 1
நெய் – 4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகிய மூன்றையும் தனிதனியாக ஊற வைத்து கிரைண்டரில் அரைக்கவும். அரைத்த மாவை சேர்த்து அதனுடன் உப்பை கலக்கவும்.
கடாயில் நெய் விட்டு காய்கறிகளை வதக்கி இட்லி மாவுடன் சேர்த்து கலக்கவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து இறக்கினால் சுவையான இட்லி தயார்.
தயிர்
தயிரில் உள்ள கோடிகணக்கான பாக்டீரியாக்கள் நம் உடலுக்கு நன்மை செய்கிறது. சிறிது தயிர் சாதம் சாப்பிட்டாலே போதும் நம் வயிறு கம்மென்று அமைதியாகி விடும். தயிர் சாப்பிட்டால் உடல் எடை போடும் என்று கூறுவார்கள். ஆனால், தயிரில் உள்ள புரதசத்துக்கள் காரணமாக உடல் எடை குறையவும் வாய்ப்பு உள்ளது.
எவ்வளவு, எப்படி சாப்பிடுகிறோம்? என்பதை பொறுத்தே உடல் எடை அதிகரிக்கும்.
சிலர் பாத்திரம் நிறைய சாப்பாட்டை போட்டு அதில் தயிர் ஊற்றி சாப்பிடுவார்கள், அவ்வாறு சாப்பிடுவதன் மூலம் கூட உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால் நம் வீட்டிலேயே தயிர் தயாரித்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காது.