கொள்ளு சமையல்
உடலில் உள்ள வாதத்தை குறைக்கவும். வயிற்றின் செயல்பாட்டினை அதிகப்படுத்தவும். உடல் பருமன் குறையவும் கொள்ளு பயன்படுத்தப்படுகின்றது. கொள்ளை தினசரி ஏதாவது ஒரு விதத்தில் தொடர்ந்து 30 நாட்கள் உபயோகித்து வர வாத நாடி குறையும். உடல் வலி நீங்கும். உடல் எடை குறையும். ஜீரண சக்தி சீராகும் வயிற்று வலி நீங்கும் கொள்ளை அப்படியேயும் உபயோகிக்கலாம். முளைக்கட்டியும் உபேயாகிக் கலாம்.
கொள்ளு (காணம்) முளைக்கட்டும் முறை
சுமார் 10 மணி நேரம் நீரில் ஊற விட்ட பின்பு கொள்ளை எடுத்து நன்றாக கழுவி, வடித்து துளையிட்ட பிளாஸ்டிக் பாத்திரத்திலோ அல்லது வடிகட்டியிலோ போட்டு இன்னொரு பாத்திரத்தில் மூடி வைத்து விட்டால் அடுத்த நாள் காலை அனைத்து கொள்ளுமே முளை விட்டு விடும். (தேவையெனில் இரவில் சிறிது நீர் தெளிக்கலாம்).
கொள்ளு சூப்
தேவையான பொருட்கள்
முளைத்த கொள்ளு – 50 கிராம்
தக்காளி 2
கேரட் 1
அரிசி கழுவிய நீர் 2 கப்
கொத்தமல்லி சிறிது
உப்பு -தேவைக்கேற்ப
மிளகுபொடி – தேவையான அளவு
செய்முறை
முளைத்த கொள்ளை 2 கப் அரிசி கழுவிய நீரிலோ அல்லது தண்ணீரிலோ போட்டு, தக்காளியையும், கேரட்டையும் சிறு துண்டுகளாக வெட்டி போட்டு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்த பின்னர், வடிகட்டி காய்களையும், கொள்ளையும் பிரித்து எடுத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொதித்த சூப் நீருடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். கொத்தமல்லியை சேர்த்து கொதிக்க வைக்கவும். கொத்தமல்லியை சிறு துண்டுகளாக வெட்டி அத்துடன் உப்பு, மிளகுப்பொடி சேர்த்தால் கொள்ளு சூப் ரெடி. மசாலா விருப்பமுள்ளவர்கள் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா போன்றவற்றையும் சேர்த்து வாணலியில் இட்டு சிறு தீயில் பொன் வறுவலாக வறுத்து பின்னர் மேற்படி சூப்பை தயாரிக்கலாம். கொள்ளுடன் நல்லெண்ணெய் சேர்ப்பது மிக மிக நல்லது.
கொள்ளுப் பொடி
தேவையான பொருட்கள்
கொள்ளு 2 கப்
பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
மிளகாய் 15
பூண்டு 5 பல்
சீரகம் 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்
செய்முறை
பூண்டை தட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கொள்ளைப் போட்டு நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். மீதியுள்ள எண்ணெயில் பெருங்காயம், மிளகாய், பூண்டு, சீரகம், உப்பு முதலியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடைசியாக எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். (தேவையென்றால் நைசாக அரைத்துக் கொள்ளவும்).
கொள்ளு ரசம்
தேவையான பொருட்கள்
கொள்ளு – 2 டேபிள் ஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சம் பழ அளவு
மிளகுத்தூள் 1 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
தக்காளி 1
பூண்டு 2 பல்
மிளகாய் வற்றல் 2
கடுகு 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை,
கொத்தமல்லி – சிறிது
செய்முறை
கொள்ளை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். வேக வைத்து, கொள்ளை மசித்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் போட்டு தாளித்து, பின் தட்டிய பூண்டைப் போட்டு வதக்கி, பின் தக்காளி போட்டு வதக்கவும். பின்னர் வேக வைத்து மசித்த கொள்ளு, புளித்தண்ணீர், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு கொதிக்க விட வேண்டும். கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.