தேன்

Spread the love

செந்தமிழ் நாடு என்னும் போதினிலே

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”

என்றார் பாரதியார். தேன் காதில் பாய்வதை விட வாயில் தானே பாய வேண்டும்? இல்லை, தேன் என்ற வார்த்தையை கேட்டாலே போதும். உடலும் உள்ளமும் இனிப்பு நிறைந்து விடும். அமெரிக்க தம்பதிகள், காதலர்கள் ஒருவரையொருவர் “ஹானி” (தேனே) என்று கூப்பிட்டுக் கொள்வது சகஜம். உலகிலேயே தேன் உற்பத்தியில் அமெரிக்கா இரண்டாவது இடம் வகிப்பதால், அமெரிக்கர்களுக்கு தேனின் இனிமை மிகவும் பழக்கம், பிடித்தது. தேன் இனிமை நிறைந்த பொருள் மட்டுமல்ல, ஒரு முழுமையான உணவு. உணவு மட்டுமல்ல, மருத்துவ குணங்களும் நிறைந்தது.

தேனின் சரித்திரம் மிகவும் தொன்மையானது. ஒரு வேளை மனிதனுக்கு முதலில் தெரிந்த இனிப்பு தேன் தான். இயற்கை மனிதனுக்கு கொடுத்த வரப்பிரசாதங்களில் ஒன்று தேன். நமது சமய நூல்களிலும், இலக்கியங்களிலும் தேனைப் பற்றி குறிப்புகள் ஏராளம். தேனடையிலிருந்து தேனை சேகரிக்கும் வேலை பத்தாயிரம் வருடம் பழமையான தொழிலாகும்.

காட்டு மலர்களில் இருந்தும், தோட்ட மலர்களில் இருந்தும் சேகரிக்கப்படும் ஒரு இனிமையான பொருள் தேனீக்களால் தேனாக மாற்றப்படுகிறது. மாற்றப்பட்டு தேனடையில் தேனீக்களால் சேகரித்து வைக்கப்படுகிறது. ஒரு பவுண்டு (0.454 கிலோகிராம்) தேனை தயாரிக்க தேனீக்கள் 37 லட்சம் தடவை பயணித்து 60 ஆயிரம் பூக்களிலிருந்து அமிர்தத்தை (பூக்களிலுள்ள மது) சேகரிக்கின்றன! இதனால் பூச் செடிகளும்  பயனடைகின்றன. ஏனென்றால் தேனீக்களால் மகரந்த சேர்க்கை நிகழ்கிறது. பூச்செடிகளின் இனப்பெருக்கத்திற்கு காரணமாகின்றது.

தானாகவே தேனடையில் இருந்து ஒழுகும் தேன் மிகச் சிறந்ததாகவும், கைப்படாத புதிய தேனாகவும் கருதப்படுகிறது. இந்த காலத்தில் தேனீக்கள் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. தேனடைகள் உண்டாக பெட்டிகள் தயாரித்து தோட்டங்களில் வைக்கப்படுகின்றன. தேன் தயாரிப்பு தொழில் வர்த்தக ரீதியாக பெரிய அளவில் நடத்தப்படுகின்றது.

பூக்களில் இருந்து கிடைக்கும் மது 50 லிருந்து 90% நீர், 10 லிருந்து 50% சுக்ரோஸ் அல்லது வேறு வகை சர்க்கரை, மற்றும் 1 லிருந்து 4% வாசனை பொருட்களும், தாதுப் பொருட்களும், வர்ணமூட்டும் பொருட்களும் நிறைந்திருக்கும். தேனீக்கள் பூக்களின் மதுவிலுள்ள தண்ணீர் அளவை 14 லிருந்து 19% குறைக்கின்றன. தவிர தேனீக்கள் ஒரு பிரத்யேக என்சைம்மால் மது – சுக்ரோஸ் இவற்றை லெவுலோஸ் (Levulose) மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் (Dextrose) மாற்றுகின்றன. இந்த லெவுலோஸ் நாம் உபயோகிக்கும் கரும்பு – சர்க்கரையை விட இனிப்பு மிகுந்தது. இதானல் தான் தேனை உட்கொண்டால் உடனடி சக்தி கிடைக்கும். கரும்பு சர்க்கரையை விட தேன் நல்லது – காரணம் தேனில் ஊட்டச்சத்துக்கள் அதிகம், கலோரிகளும், கார்போஹைட்ரேட்டுகளும் குறைவு.

தேனில் உள்ளவை  

தேசிய உணவுச் சத்து ஸ்தாபனம், (National Institute of Nutrition, ICMR India) அறிவிக்கும் தேனில் உள்ள சத்துக்கள்:- 100 கிராம் தேனில் – ஈரம் – 20.6 கி., புரதம் – 0.3 கி., கொழுப்பு – 0. கி., தாதுப்பொருட்கள் – 0.2 கி., நார்ச்சத்து – 0. கி., கார்போஹைட்ரேட்ஸ் – 79.5 கி., கால்சியம் – 5. மி.கி., பாஸ்பரஸ் – 16 மி.கி, மற்றும் அயச்சத்து – 0.696 மி.கி.

தேனின் கலோரிகள் 319 கிலோ கலோரிகள்.

தேனின் கார்போஹைட்ரேட்டுகளில் உள்ளவை

ஃப்ரூக்டோஸ் (லெவுலோஸ் – திரவ ரூபத்தில்) – 38.5%, குளூக்கோஸ் – 31.0%, சுக்ரோஸ் – 1%, இதர சர்க்கரைகள் (மால்டோஸ் போன்றவை) – 9%.

இவை தவிர தேனில் மெழுகு, எளிதில் ஆவியாகும் ஒரு எண்ணெய், ஒரு வித பசை, (Mucilage) வர்ணமூட்டும் பொருள், மகரந்தத் தூள், என்சைம்கள் போன்றவை உள்ளன. ஸ்டார்ச்சையும், சர்க்கரையையும் புளிக்க வைக்கும் திறன் உள்ள ஒரு உமிழ்நீர் போன்ற பொருளையும், பிரத்யேக புரதத்தையும் தேன் தன்னிடத்தே கொண்டது. தேனில் விட்டமின்களும், தாதுப்பொருட்களும் மிகச் சிறிதளவே உள்ளன. தேனில் உள்ள டெக்ஸ்ட்ரோஸ், லெவுலோசும் ஒற்றைச் சர்க்கரை இனத்தை (Monosaccharides) சேர்ந்தவை, எளிதில் ஜீரணமாகும் பொருட்கள்.தேன் தண்ணீரை விட 36% அதிக அடர்த்தி உடையது.

தேனின் பெயர்கள்

சமஸ்கிருதம் – மது, மக்சீகா, ஹிந்தி – மதா, மத், ஆங்கிலம் – Honey

தாவரவியல் பெயர் – Mel

தேனீயின் பெயர்கள்

விலங்கியல் பெயர் – Apis Mellifica,

குடும்பம் – Apidae, Class – Hymenoptera.

தேன் சேகரிக்கும் தேனீக்கள் உலகெங்கும் காணப்படுகின்றன. அவை மருத்துவ உபயோகத்திற்கு இரண்டு பொருள்களை தயாரிக்கின்றன.

தேனடையில் சேகரிக்கும் தேன்

தேனடை மெழுகு

தேனின் பொது குணங்கள்

தேன் தங்க நிறம் கொண்ட, கெட்டியான திரவம் ஆகும். சாக்ரைன் என்ற இனிப்பு பொருள் கலந்தது. இந்த சாக்ரைன் சர்க்கரையை விட நானூறு மடங்கு இனிமையானது. தேன் நல்ல நறுமணமுடையது. சிறிது நாள் வைத்திருந்தால் படிகங்கள் உண்டாகும். ஆயுர்வேதத்தில் தேனுக்கு யோக வாகிஎன்ற பெயரும் உண்டு. இதன் பொருள் மற்ற மூலிகைகளுடன் உபயோகிக்கும் பொழுது தேன் நன்றாக திசுக்களில் பரவும் என்பதாகும்.

தேனின் பிரிவுகள்

சரகஸம்ஹிதையின் படி

மக்ஸிகா – பெரிய தேனீக்களால் சேகரிக்கப்படுவது – எண்ணெய்யை போல் நிறமுடையது.

பிரம்மரா – தேனீக்களால் தயாரிக்கப்படுவது – வெண்ணிறம் உடையது.

பவுடிகா – மஞ்சள் நிற தேனீக்களால் தயாரிக்கப்படுவது – நெய் போன்ற நிறமுடையது.

சௌதரா – சிறிய தேனீக்களால் தயாரிக்கப்படுவது – பொன்னிறம் உடையது. மேலே உள்ள நான்கு பிரிவுகளும் குளிர்ச்சி உடையவை, கனமானவை,

இனிப்பானவை. தேன் வாதத்தை கண்டிக்கும், பித்த, கப கோளாறுகளை நீக்கும். இருமலை குறைக்கும். சூடு உடம்பு உள்ளவர்களுக்கு தேன் உகந்தது அல்ல.

மக்சிகா ரக தேனே மிகச் சிறந்தது.

சுஸ்ருதா சம்ஹிதையின் படி

மக்ஸிகா – பெரிய தேனீக்களால் சேகரிக்கப்படுவது – வாத, கப கோளாறுகள், இருமல், காமாலை மற்றும் ஷயரோகத்திற்கு மருந்து.

பிரம்மரா –  கருப்பு தேனீக்களால் தயாரிக்கப்படுவது – இருமல், ஜுரம், மூக்கில் இரத்தம் வடிதல், கபம் இவற்றுக்கு மருந்து.

பவுடிகா – சிறிய பவுடிகா எனப்படும் தேனீக்களால் தயாரிக்கப்படுவது – வாதத்தை அதிகரிக்கும், கீழ்வாதத்தை உண்டாக்கும். நெஞ்செரிச்சலை உண்டாக்கும். கொழுப்பை குறைக்கும்

சௌதரா – சிறிய மஞ்சள் பழுப்பு நிற தேனீக்களால் தயாரிக்கப்படுவது – மக்ஸிகா தேனின் குணமுடையது, கண் நோய்களுக்கு மருந்து.

சாத்ரா – மஞ்சள், பழுப்பு குளவிகளால் தயாரிக்கப்படுவது – தேனடை குடை வடிவில் இருக்கும் – உதிரப்போக்கு, எக்ஸிமா, வெண்குஷ்டம், கீழ்வாதம் இவற்றுக்கு மருந்து.

அர்கா / ஆதாரியா – காட்டு மலர்களில் இருந்து மஞ்சள் தேனீக்கள் தயாரிப்பது – கண்நோய்கள், மூலம், காலரா, இருமல், காமாலை, அல்சர்கள் இவற்றுக்கு மருந்து.

ஔதாலகா – கரையான்களால் தயாரிக்கப்படுவது – தோல் வியாதிகளுக்கு நல்லது.

தாலா – பூக்களில் இருக்கும் மது – ஜீரணசக்தியை அதிகரிக்கும். கபத்தையும், வாந்தியையும் குறைக்கும்.

மேற்சொன்ன எட்டு பிரிவுகளில் முதல் நான்கு மட்டுமே முக்கியமானவை. முதலில் சொல்லப்பட்ட மக்ஸிகா தேனே சிறந்தது. மருந்துகளில் உபயோகப்படுத்தப்பட்டது.

நவீன பிரிவுகள் (தயாரிக்கும் முறைகளின் படி)

தேனடையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தேன்- இது தான் கடைகளில் கிடைக்கும் வர்த்தக தேன் – அதிகம் பயன்படுவது.

தேனடை தேன்– இந்த தேன் தேனடையிலேயே விட்டுவிடுவது. முன்பெல்லாம் தேனடை துண்டுகளுடன் மர சட்டங்களில் கொடுக்கப்பட்டு வந்தது.  இப்பொழுது பிளாஸ்டிக் சட்டங்களில் கொடுக்கப்படுகின்றன.

பதப்படுத்தப்படாத தேன் (Raw Honey)- இந்த முறையில் தேனடையில் இருந்து சூடுப்படுத்தபடாமல் தேன் பிரித்தெடுக்கப்பட்டு வடிகட்டி எடுக்கப்படுகிறது. இதில் மகரந்தக் தூள்களும், மெழுகு துகள்களும் இருக்கும். இந்த வகை தேன் ஒவ்வாமை நோயுள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். அதனால் ஒவ்வாமை நோயாளிகள் இந்த வகை தேனை மிகுதியாக பயன்படுத்துகின்றனர்.

வெட்டப்பட்ட பருத்த துண்டுகளுடைய தேன் (Chunk Honey)- இதில் தேனடை துண்டுகளும், தேனும் கலந்திருக்கும். வாய் அகலமான ஜாடிகளில் திரவத் தேனும், தேன் நிறைந்த பெரிய துண்டுகளும் இருக்கும்.

வடிகட்டிய தேன்– இந்த வகை தேன் வலையில் வடிகட்டப்பட்டது. தேனடை மெழுகு போன்றவை எடுக்கப்படும். ஆனால் மகரந்த துகள்கள், தாதுப்பொருட்கள், என்சைம்கள் அப்படியே இருக்கும்.

நன்கு வடிகட்டிய தேன்– இந்த முறையில் அதிக அழுத்தத்தை உபயோகப்படுத்தி எல்லா வகை கசடுகளும் நீக்கப்படும். இந்தத் தேன் பரிசுத்தமானது. நீண்ட நாள் இருக்கும்.

இவை தவிர அதிகம் பயன்படாத பல பிரிவுகள் உள்ளன. தேனில் உள்ள பொருட்களின் தன்மை எந்த பூக்களிலிருந்து தேன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை பொருத்தது. விதவிதமான பூக்கள், விதவிதமான தேனை உண்டாக்கும். வர்த்தக ரீதியாக தயாரிக்கப்படும் தேன் இரண்டு மூன்று ரகத் தேன்களின் கலவையாகும். இதனால் தேனின் அடர்த்தி சுவை மாறலாம். தவிர பூகோள ரீதியாக பூக்களின் செடிகள் இருக்கும் இடத்தையும் பொறுத்து தான் தேனின் குணம் மாறுகிறது.

பூக்களின் படி தேனின் பிரிவுகள்

ஒரு பூவின் தேன் (Monofloral)- வர்த்தக ரீதியாக தயாரிக்கப்படும் பொழுது, செயற்கை தேனடை பெட்டிகள் ஒரே ரக பூக்களிலிருக்கும் தோட்டத்தில் வைக்கப்படுகின்றன. இதனால் தேனீக்களுக்கு ஒரே ஒரு ரக பூக்களிலிருந்து தான் மதுவை சேகரிக்க முடியும். இது ஒரு கடினமான முயற்சி ஆகும்.

பல பூக்களின் தேன் (Polyfloral)- இது பல பூக்களின் மதுவிலிருந்து தயாரிக்கப்படுவது.

மருத்துவ பயன்கள்

காயங்கள் ஆற – தேன் காயங்கள் சீக்கிரம் ஆற உதவும். தேன் காயத்தை சீல்‘ (Seal) செய்து விடும். குணப்படுத்தும் திசுவை ஊக்குவிக்கும். புதிய ரத்தத் தந்துகிகளை அடிபட்ட பிரதேசத்தில் உண்டாக்கும். கொல்லேஜன் நார்களையும் (Collagen Fibres) தேன் உண்டாக்கும். இதனால் காயம் சீக்கிரம் ஆறிவிடுகிறது. தழும்பும் உண்டாவதில்லை. தவிர தேனில் ஒரு பிரத்யேக என்சைம் உள்ளது. இதில் ஆக்ஸிஜனை ஹைட்ரஜன் பெராக்சைட்டாக மாற்றுகிறது. இந்த ஹைட்ரஜன் பெராக்சைட் சிறந்த கிருமி நாசினி. காயத்தில் தீய பேக்டீரியா வளராமல் தடுக்கிறது. காயத்தில் பிளாஸ்திரியை போட்டால் அதை பிரித்தெடுப்பது கடினம் – வலி ஏற்படும். தேனில் இந்த பிரச்சனைகள் இல்லை. தேனை எளிதாக துடைத்து எடுக்கலாம். தீப்புண்களுக்கும் தேன் மிகவும் நல்லது. மஞ்சள் பொடியுடன் சேர்த்து உபயோகிக்கலாம். தீப்பட்ட புண்கள் சீக்கிரம் ஆறுவதற்கு தேன் உதவுகிறது.

தேன் உடலுக்கு உடனடி சக்தியை கொடுக்கும். காரணம் அதிலுள்ள சர்க்கரைகள் மிக எளிதில் ஜீரணமாகி சக்தியாக மாறும். களப்பை போக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சிறந்தது. வயதானவர்களுக்கு எளிதில் செரிக்கும் சத்தான உணவு தேனாகும்.

தேனை தொடர்ந்து உபயோகித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். பேக்டீரியா, வைரஸ் தாக்குதலில் இருந்து உடல் பாதுகாக்கப்படும். தேன் ரத்தத்தில் வெள்ளை அணுக்களை ஊக்குவிக்கும், பலப்படுத்தும்.

தேன் தண்ணீரை உறிஞ்சும் சக்தி உடையது. இதனால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவர்களின் பிரச்சனை தீர்க்கும் மருந்தாகும். பெரியவர்கள் கூடி அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால் தேனை எடுத்துக் கொள்ளலாம். ஒரு மேஜைக்கரண்டி படுப்பதற்கு முன் எடுத்துக் கொள்வது பெரியவர்களுக்கு ஏற்ற அளவாகும்.

தேன் சாந்தப்படுத்தும் குணங்கள் உடையது. அதிக உணர்ச்சி வசப்படும் நபர்களுக்கு நல்லது. அமைதியை உண்டாக்கும். தினமும் இரண்டு தேக்கரண்டி தேனை தண்ணீருடன் சேர்த்து குடிக்க நல்ல தூக்கம் வரும்.

அஜீரணம், வயிற்றுவலி, இவற்றை குணப்படுத்தும். Peristalsis எனப்படும் வயிற்றின் தசை அசைவுகளை ஊக்குவித்து ஜீரணசக்தியை மேம்படுத்தும். சரியான அளவில் தேனை உட்கொண்டால், பலவீனமான ஜீரண சக்தி உடையவர்களுக்கு ஜீரண சக்தி அதிகப்படுத்தி பசியை தூண்டும். வயிற்றில் வாயுவை குறைக்கும். தண்ணீருடன் சேர்த்து கொடுத்தால் வயிற்று வலியையும் உடலின் நீர்மச்சத்து குறைவையும் சரிப்படுத்தும்.

தேன் ஒரு சிறந்த இருமல் மருந்து. ஜலதோஷத்தையும் போக்கும். ஒரு நாளில் இரண்டு, மூன்று வேளை தேன் கொடுக்கலாம்.

மூட்டுவலிகள் (Arthritis), பேதி, அதிக உடல் பருமன், சிறுநீரக பாதை தொற்றுக்கள் இவற்றிற்கெல்லாம் தேன் இதர மூலிகைகளுடன் கலந்து கொடுக்க நல்ல நிவாரணம் அளிக்கும்.

ஊட்டச் சத்து குறைந்தவர்களுக்கும் அதனால் இதய பலவீனம் உடையவர்களுக்கும் தேன் நல்ல பலமளிக்கும் மருந்து. இதயத்திற்கு சக்தி அளிக்கும். தேன் ஒரு நல்ல ஆன்டி ஆக்ஸிடன்ட் (Anti – Oxidant) புற்றுநோயையும், இதய நோய்களையும் தடுக்கும்.

குண்டான மனிதர்களுக்கு ஊளைச் சதையை குறைக்கும் மருந்து தேனாகும். காலையில் வெறும் வயிற்றில் நீருடன் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாய்ப்புண்களுக்கு தேன் நல்ல மருந்து. பாலுடன் சேர்த்து குடித்தால் தேன் உடல் சூட்டை குறைக்கும்.

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தேன் உதவும். கொடுக்க வேண்டிய அளவு – 230 கிராம் உணவுக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கொடுக்க வேண்டும்.

தசை சுளுக்கு, வலி இவற்றிற்கு இரண்டு தேக்கரண்டி தேன் கொடுக்கலாம்.

மற்ற பொருட்களுடன் கலந்து, தேனின் மருத்துவ குணங்கள்

ஜலதோஷத்திற்கும், இருமலுக்கும் – தேன் + எலுமிச்சை சாறு சம அளவில் சிறிது சூடுபடுத்தி கொடுக்கவும்.

அரைத்தேக்கரண்டி கருமிளகு பொடி + கால் தேக்கரண்டி வால்மிளகு பொடி+ ஒரு தேக்கரண்டி தேன் – தொண்டைப்புண்ணை ஆற்றும்.

சுக்கு பொடி அரைத்தேக்கரண்டி + இரண்டு அல்லது மூன்று கருமிளகு + இரண்டு அல்லது மூன்று கிராம்பு + இரண்டு அல்லது மூன்று   ஏலக்காய் +அரைத்தேக்கரண்டி ஜீரகம் + ஒரு தேக்கரண்டி தேன் – இவற்றை பால் சேர்க்காத டீ டிக்காக்சனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுக்கவும். இருமலும் ஜலதோஷமும் விலகும்.

தேன் இரண்டு தேக்கரண்டி + இஞ்சிச் சாறு இரண்டு தேக்கரண்டி- இதை அடிக்கடி குடித்து வரவும்.

மூட்டுவியாதிகளுக்கு (Arthritis)- ஒரு பாகம் தேன் + இரண்டு பாகம் நீர் + ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி – இவற்றை களிம்பாக செய்து கொண்டு, அந்த களிம்பை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். தினமும் இரண்டு வேளை உள்ளுக்கு – ஒரு கப் வெந்நீர் + இரண்டு ஸ்பூன் தேன் + ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி எடுத்து வரவும்.

தீக்காயங்களுக்கு- தேன் + மஞ்சள் பொடி

பேதிக்கு- ஜாதிக்காய் பொடி + தேன்

அஜீரணத்திற்கு- சில இலவங்கப்பட்டைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். சிறிது தேனையும் ஒரு சிட்டிகை மிளகு பொடி சேர்க்கவும். உணவிற்கு பின் இதை எடுத்துக் கொள்ளவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க- தேன் + இலவங்கப்பட்டை

குண்டான உடல் இளைக்க- ரத்தம் சுத்தமாக – தேன் + தண்ணீரில் கொதிக்க வைத்த இலவங்கப்பட்டை பொடி இவற்றை அதிகாலையில் வெறும் வயிற்றில் தவிர இரவிலும் எடுத்துக் கொள்ளவும். இன்னொரு முறை – வெதுவெதுப்பான நீர் ஒரு கப் + தேன் இரண்டு தேக்கரண்டி + எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி.

கண் பார்வை மேம்பட- ஒரு கப் கேரட் ஜுஸ் + தேன் இரண்டு தேக்கரண்டி.

பொதுவான ஆரோக்கியத்திற்கு- தினமும் ஒரு தேக்கரண்டி தேன்.

தினமும் வேளைக்கு செல்லும் முன் ஒரு மேஜைக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும். இதனால் டென்ஷன், ஸ்ட்ரெஸ் குறையும். உங்களை தேன் அமைதிப்படுத்தும்.

சுலபமாக மலம் கழிய- ஒரு கப் வெதுவெதுப்பான நீர் + இரண்டு தேக்கரண்டி தேன் + ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு.

இதய நோயாளிகளுக்கு- தினமும் படுக்கும் முன் தேன் +  எலுமிச்சை சாறு நீருடன் எடுத்துக் கொள்ளவும். அல்லது உணவின் போது தேனை தினமும் எடுத்துக் கொள்ளவும்.

மேனி அழகுக்கு

முக அழகிற்கு பாதாம் பருப்பின் பொடியுடன் தேனை குழைத்து முகத்தில் தடவி கொள்ளவும். சிறிது நேரம் கழித்து கழுவவும்.

தினசரி ஒரு தேக்கரண்டி தேனுடன் சிறிது பால் பவுடரை கலக்கவும் முகத்தில் தடவிக் கொள்ளவும்.

தலைமுடியை கண்டிஷன் செய்ய:- அரை கப் தேனுடன் கால் கப் ஆலிவ் எண்ணெய்யை கலக்கவும். தலையில் தடவி 30 நிமிடம் விடவும். பிறகு ஷாம்பூ போட்டு அலசவும்.

உலர்ந்த, வயதான சருமத்திற்கு தேன் இரண்டு மேஜைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி பால் கலந்து முகம் கழுத்துகளில் தடவவும். 10 நிமிடம் விடவும். வெந்நீரில் கழுவவும்.

உடல் லோஷன் தேன் ஒரு தேக்கரண்டி + தாவர எண்ணெய் ஒரு தேக்கரண்டி + எலுமிச்சை சாறு கால் தேக்கரண்டி இவற்றை கலந்து உடலில் உலர்ந்த பகுதிகளில் தடவவும். அல்லது உடல் முழுவதும் தடவிக் கொள்ளலாம். 10 நிமிடம் கழித்து கழுவவும்.

பழைய தேனும், புதிய தேனும்

புதிதாக தயாரிக்கப்பட்ட தேன் உடல் எடையை கூட்டும். ஆனால் பல நாள் வைக்கப்பட்ட பழைய தேன் உடல் எடையை குறைக்கும்.

தேனின் தயாரிப்புகள்

இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு தேன் நிறைந்த ஜாடியில் இந்தத் இஞ்சித் துண்டுகளை போட்டு வெயிலில் வைக்கவும். இதை தினசரி உபயோகித்து வந்தால் ஜீரணம் மேம்படும், பசி உண்டாகும், தலைச்சுற்றல் நீங்கும்.

தண்ணீர் கலக்காமல் இஞ்சிச் சாறை எடுத்துக் கொள்ளவும். இதை தேனுடன் சேர்த்து சிறு தீயில் சூடாக்கி இஞ்சி முரபா தயாரிக்கலாம். இது வாய்வு, அஜீரணம், பசியின்மை இவற்றுக்கு நல்ல மருந்து.

இதே போல நெல்லிக்காய் துண்டுகளை தேனுடன் பயன்படுத்தலாம். இது ஒரு நல்ல டானிக். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

தேனடை மெழுகின் உபயோகங்கள்

தேனடை மெழுகு விஞ்ஞான ரீதியில் செரா (Cera) இதற்கு பல

உபயோகங்கள் உண்டு. இந்த மெழுகு இரண்டு வகைப்படும். ஒன்று செரா ப்ளவா (Ceraflava) – மஞ்சள் மெழுகு மற்றொன்று செரா ஆல்பா (Ceraalba) – வெள்ளை மெழுகு.

தேனடை மெழுகு மகரந்த துகள்களிலும், செடியின் இலைகளிலும் அதுவும் குறிப்பாக வாக்ஸ் மிரிட்டில் (Wax myrtle) செடிகளில் இருக்கிறது. அது தேனீக்களால் சேகரிக்கப்பட்டு அடை கட்ட உபயோகிக்கப்படுகிறது.

மஞ்சள் மெழுகு தேனை எடுத்த பின் தேனடையை கசக்கி, வெந்நீரில் உருக்கி குளிர வைத்து எடுக்கப்படுகிறது. இந்த வேலை பல தடவை செய்யப்படுவதால் மெழுகு சுத்தமடைகிறது. பிறகு அச்சில் வார்க்கப்படுகிறது. இது வெண்ணெய்யை விட கடினமானது. தேனின் வாடை இருக்கும். இதில் ஹைட்ரோ கார்பன்கள், செரோலின், செரினோ, செரிட்டிக் அமிலம், மிரிசின் போன்றவை உள்ளன.

தேனடை மெழுகு மிருதுவானது, மென்மையானது. பல ஆயின்மென்ட்டுகளில் (Ointments) அடிப்படை பொருளாக (ஙிணீsமீ) பயன்படுகிறது. இதன் இதர உபயோகங்கள் 

சம அளவு தேனடை மெழுகு + சம அளவு குக்குலு + சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி உருக்கி கொப்புளங்களில் தடவலாம்.

இந்த மெழுகு சருமத்திற்கு மிகவும் நல்லது. சருமம் உலர்வதை தடுக்கும். மெழுகை உருக்கி அத்துடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து துணியில் ஒத்தடம் கொடுக்க உடல் வலி நீங்கும்.

ஒரு பாகம் மெழுகை ஆறு பாகம் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து பாத வெடிப்புகளில் தடவலாம். நல்ல குணம் தெரியும்.

இந்த மெழுகை சிறு துண்டுகளாக்கி நெருப்பில் போட்டு அதன் புகையை நுகர்ந்தால் ஜலதோஷம், சைனஸ் நீங்கும். கடையில் கிடைக்கும் பிண்ட தைலத்துடன் இந்த மெழுகை சேர்த்து காலில் தடவினால் வீக்கம், மூட்டுவலி, ரூமாடிக் வலி மற்றும் விறைப்புத் தன்மை நீங்கும்.

வெண் மெழுகு (Ceraalba)

இது மஞ்சள் மெழுகை  வெளியில் ஈரம், காற்று, வெளிச்சம் படும்படியாக  வைத்தால் நாளடைவில் வெண்மையாகி கிடைக்கும். யுனானி மருத்துவர்கள் இதை மருதாணி, பன்னீருடன் கலந்து பௌத்திரத்திற்கு மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

தேனை உபயோகிக்கும் முறை

தேனை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டாம். வைத்தால் அதன்உணவுச் சத்துக்கள் குறைந்து விடலாம். தேனை நன்றாக மூடிய ஜாடிகளில் உலர்ந்த இடத்தில் வைக்கவும். தேன் நீண்ட நாள் இருக்கும் பொருள் ஆனதால் ஒரு நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து, கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் வைக்கவும்.

தேன் நீண்ட நாள் வைக்க உகந்தது. நீண்ட நாள் ஆனாலும் அது உண்ணுவதற்கு உகந்தது. எளிதில் ஜீரணமாகும். அது தேனடையில் இருக்கும் வரை தேன் மெழுகால் சீல்செய்யப்படுவதால் நீண்ட நாள் கெடவே கெடாது. தேனடையில் இருந்து எடுத்த பின் அதன் தரம் குறைய வாய்ப்புகள் உண்டு. அதனால் அதை பொருத்தமான பாத்திரங்களில் வைக்கவும். உலோக பாத்திரங்களில் வைக்க கூடாது வைத்தால் ஆக்சிடேஷனால் (Oxidation) அதன் ஊட்டச்சத்துக்கள் குறைவது மட்டுமன்றி தேன் விசமாகவும் மாறலாம். கண்ணாடி ஜாடிகள் தான் தேனை பாதுகாக்க சிறந்தவை. அவற்றிற்கு அடுத்த படி பீங்கான் ஜாடிகள். தேன் ஜாடிகளை வேறு உணவுப் பொருள்களுடன் வைக்க வேண்டாம்.

சரியாக பாதுகாக்கப்பட்ட தேன் குறைந்த பட்சம் இரண்டு வருடம் வரை கெடாமல் இருக்கும். இரண்டு வருடங்களுக்குள் உபயோகப்படுத்துவது நல்லது. வெயில் நாட்களில் தேனை உட்கொள்வதை தவிர்க்கவும். சூடான / வெதுவெதுப்பான தேனை உட்கொள்ள வேண்டாம். கீரை, தக்காளி, மணத்தக்காளி இவற்றுடன் தேனை உட்கொள்ள வேண்டாம்.

தேன் இனிப்பாக இருக்கிறதென்று அதிகமாக அளவுக்கு மீறி  உட்கொள்ள வேண்டாம். சம அளவில் கலந்த நெய்யையும், தேனையும் சாப்பிடக் கூடாது.தேனை சூடான மசாலா நிறைந்த உணவுகள், மது வகைகள், மழை நீர், நெய் மற்றும் கடுகெண்ணையுடன் கலந்து உட்கொள்ளக் கூடாது.

தேனும், நீரிழிவும்

ஆயுர்வேதத்தின் படி தேன் இனிப்பாக இருந்தாலும் அதை நீரிழிவு நோயாளிகளும், குண்டானவர்களும் உட்கொள்ளலாம். ஒரே ஒரு நிபந்தனை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும். இதற்காக சொல்லப்படும் காரணம் தேனில் வெல்லுலோஸ் (Velulose) இருப்பதால், தேன் நீரிழிவு வியாதியை அதிகரிக்காது. ஆனால் இது இன்றும் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனவே நீரிழிவு நோயாளிகள் தேனை தவிர்ப்பது நல்லது. தேனின் கிளைசெமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) 31 லிருந்து 78 வரை, அதன் ரகத்தை பொறுத்து இருக்கும்.

தேனடையிலேயே இருக்கும் தேனின் உபயோகம்

முன்பு சொன்னபடி தேனடையிலேயே விடப்படும் தேனுக்கு சில நல்ல மருத்துவ குணங்கள் உண்டு. சுவாச கோளாறுகளால் அவதிப்படும் நபர்கள் தேனடை துண்டை கடித்து மென்று தேனை உறிஞ்சி சாப்பிட்டால் நல்லது என்று வைத்தியர்கள் சொல்கிறார்கள். இதில் சுவாச கோளாறுகளை எதிர்க்கும் சக்தியை அதிகப்படுத்துகிறது. சைனஸ் நோயாளிகள் தேனிருக்கும் தேனடை துண்டுகளை வாயில் 15 நிமிடம் கடித்து வைத்திருக்கும் படி சொல்லப்படுகிறார்கள். இதை ஒரு நாளிலிருந்து 6 மணி நேரம் வரை திருப்பி திருப்பி செய்ய வேண்டும். இதனால் அடைபட்ட மூக்கு திறக்கப்பட்டு சைனஸ் கோளாறும் வலியும் விலகுகின்றன.

தேனும் போடுலிசமும் (Botulism)

போடுலிசம் என்பது ஒரு பாக்டீரியாவால் உண்டாகும் தீவிரமான உணவு விஷமாகும் நோய். இந்த பாக்டீரியாவின் பெயர் ” Clostridium Botulinum “. இந்த பாக்டீரியா வீட்டு சமையலில் உபயோகப்படுத்தப்படும் தேனின் மூலமாக மட்டும் பரவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 1 வயதிற்கு உட்பட்ட சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அவற்றால் இந்த நோயை எதிர்த்து போராட முடியாது. அதற்கு வேண்டிய சக்தி 1 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் இல்லை. இதனால் தான் 1 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கவே கூடாது.

தேனை உற்பத்தி செய்யும் தேசங்கள்

உலகிலேயே அதிகமாக தேனை உற்பத்தி செய்யும் நாடு சீனா. அதன் பிறகு அமெரிக்கா துருக்கி, மெக்ஸிகோ, கார்சிகா (பிரான்ஸ்).

நல்ல சுத்தமான தேனை கண்டுபிடிக்கும் முறை

தேன் சிறிது விலையுயர்ந்த பொருள் மட்டுமில்லாமல் அதிகமாக பயன்படும் உணவுப் பொருள். அதனால் தேனில் கலப்படம் செய்வது மிக அதிகம். சுத்தமான தேனை கண்டுபிடிக்க தேனில் ஒரு துளியை ஒரு டம்ளர் தண்ணீரில் விடவும். தேன் நேராக டம்ளரின் அடிமட்டத்திற்கு இறங்கினால் அது நல்ல தேன்.

ஒரு பருத்தி விளக்கு திரியை தேனில் தோய்த்து, விளக்கேற்றவும். அது நன்றாக எரிந்தால் தேன் சுத்தமானது. விட்டு விட்டு வெடிக்கும் சத்தத்துடன் எரிந்தால் அது கலப்படத் தேன்.

சுத்தமான தேன் தண்ணீரில் கரையாது. ஆனால் கலப்படமான தேன் தண்ணீரில் கரையும். ஒரு ஸ்பூன் தேனை எடுத்து தண்ணீரில் கலக்கி பார்க்கவும். கரைந்தால் அது கலப்படத் தேன்.

ஒரு மேஜைக்கரண்டி தேனை எடுத்து காய்ச்சவும். சுத்தமான தேன் உருகும். குளிர்வித்தால் பழைய மாதிரி தேனாகும். கலப்படத் தேன் காய்ச்சி குளிர்வித்தால் கெட்டியாகி விடும். வெல்லத்துடன் கலப்படம் செய்திருந்தால் இது நன்கு புலப்படும்.

ஒரு கத்தியிலிருந்து நல்ல தேனை சொட்ட விட்டால் அது நேராக ஒரே அருவியாக விழும். விழுந்து தனித் துளிகளாக இருக்கும்.


Spread the love