இந்தியாவில் தேன் விற்பனை சில கசப்பான உண்மைகள்

Spread the love

தேன் என்ற வார்த்தையை கேட்டாலே போதும். உடலும், உள்ளமும் இனிப்பால் நிரம்பி விடும். ஆயுர்வேதம் மதிக்கும் உணவுப் பொருட்களில் தேன் முக்கியமானது. ஆரோக்கியமான உணவு. ஆனால் எப்போதுமே சுத்தமான, தேன் கிடைப்பது கடினம் தான். இதனால் அதிக விலையாக இருந்தாலும் பிரசித்தி பெற்ற கம்பெனிகள் தயாரிப்புகளையே வாங்க நேருகிறது. ஆனால் இவை தயாரிக்கும் தேன் கூட தூய்மையானதல்ல என்று பத்திரிகைகளில் படித்த போது, நம் எல்லோருக்கும் அதிர்ச்சி தான். பத்திரிகைகளில் வந்த செய்தியை கீழே தருகிறோம்.

இனிப்பல்ல: இந்திய தேனில் ஆன்டி பயாடிக்

தூய்மை உத்திரவாதம் செய்யப்பட்ட அந்த ஸ்பூன் இனிப்பில், ஒரு ரகசிய கசப்பு ஒளிர்ந்திருக்கிறது. பிரபல வியாபார ஸ்தாபனங்கள் இந்தியாவில் விற்கும் தேனுடன், தீங்கு விளைவிக்கும் ஆன்டி – பயாடிக்குகள் சேர்க்கப்படுகின்றன. இதை தெரிவிப்பது விஞ்ஞானம், சூழ்நிலை மையம் மேற்கொண்ட ஆய்வு.

இந்த மையத்தின் சுற்றுப்புற சூழ்நிலை மாசுகளை கண்காணிக்கும் பரிசோதனை கூடம், டில்லியில் விற்கப்படும் 12 முன்னணி கம்பெனிகள் தயாரித்த தேன்களை பரிசோதித்தது. இவற்றில் தாபரி, இமாலாயா, பதஞ்சலி, பைதீயநாத் மற்றும் காதி போன்ற இந்திய ஸ்தாபனங்களும், இரண்டு ஸ்விட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய கம்பெனிகளும் அடங்கும். பரிசோதித்த 12 மாதிரிகளில் (Samples) 11 ல் தீமை பயக்கும் ஆறு ஆன்டி பயாடிக்குகள் இருந்தது. ஒரு இந்திய தயாரிப்பு, ஹித்காரி தேன் மாத்திரம் சுத்தமானதாக இருந்தது.

இந்த கலப்படம் எங்கே ஆரம்பிக்கிறது? அதிகரித்து வரும் வியாபார இலக்குகளை சமாளிக்க, தேனீக்களுக்கு வியாதி வராமல் தவிர்க்கவும், அவற்றின் வளர்ச்சிக்கும், அதிக தேன் உற்பத்தி செய்யவும் ஆன்டி – பயாடிக் தரப்படுகிறது. இந்த ஆன்டி – பையாடிக்குகள் உங்களின் தினசரி தேவைக்கு ஒரு தேக்கரண்டி தேனில் சேரும் போது, அதை குடித்த உங்களுக்கு, ரத்தம், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மற்றும் பற்கள் பாதிப்புகள் ஏற்படக் கூடும். இன்னொரு விஷயம் – இந்த தேனை குடித்து வரும் உங்கள் உடலில் ஆன்டி – பயாடிக் சேர்ந்தால், நிஜமாக நீங்கள் நோய் வாய்ப்படும் போது, டாக்டர்கள் கொடுக்கப்படும் ஆன்டி – பயாடிக்குகள் பணி செய்யாது.

பல வளர்ந்த தேசங்கள் தேனில் ஆன்டி – பயாடிக் சேர்ப்பதை தடை செய்கின்றன. இந்த நாடுகளுக்கு தேனை ஏற்றுமதி செய்யும் இந்திய ஸ்தாபனங்கள் இந்தக் கட்டுப்பாடுகளை மீளமுடியாது. இருந்தாலும் இரட்டை முகம் படைத்த இந்திய கம்பெனிகள் கலப்பட தேனைத் இந்தியாவுக்கு தள்ளிவிடுகின்றனர். ஏனென்றால் இந்தியாவில் தேனில் ஆன்டி – பயாடிக் கலப்பதை தடை செய்ய எந்த கட்டுப்பாடும் இல்லை.

டாபர் தேன்

இந்த ஸ்தாபனம் இந்திய தேன் மார்க்கெட்டில் 75 சதவிகித்தை கைப்பற்றி உள்ளது. ஏற்றுமதி செய்யக் கூடிய தேனில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 9 மடங்கு அதிகமாக ஆக்சி டெட்ரா சைக்ளின் (Oxytetracycline) என்ற ஆன்டி – பயாடிக் டாபர் தேனில் இருந்தது. தவிர தேனில் கலக்கக் கூடாதென்று முற்றிலும் தடைசெய்யப்பட்ட வேறு இரண்டு மருந்துகளும் டாபர் தேனில் காணப்பட்டன. இந்த சாம்பிளை அமெரிக்கா அல்லது ஐரோப்பிய தேசங்களுக்கு அனுப்பியிருந்தால் கண்டிப்பாக திருப்பி அனுப்பப்பட்டிருக்கும்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் டாபர் ஸ்தாபனம் இதே காரணத்திற்காக நேபாளில் சர்ச்சைக்கு உள்ளானது. நேபாளின் முன்னணி பத்திரிகைகள் டாபர் தேன் தரத்தில் குறைந்தது என்று அதில் தீங்களிக்கும் ரசாயன பொருட்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டிருந்தன. இதை டாபர் கம்பெனி இந்திய பொருட்களுக்கு எதிராக நேபாள் நடத்தும் பொய் பிரச்சாரம் என்று சொல்லி மறுத்திருந்தது. இந்த தடவை டாபர் கம்பெனிக்கு எதிராக இந்தியாவிலேயே புகார்கள் எழுந்திருக்கின்றன.

நாரிம்பெக்ஸ் என்ற சுவிட்சர்லாந்து கம்பெனி தயாரித்த தேனில் தான் அதிகமாக பரிசோதிக்கப்பட்ட 6 ஆன்டி – பயாடிக்குகளில் 5 காணப்பட்டன. இந்த  கம்பெனியின் தேனில் தான் மிக அதிக அளவில் ஆம்பிசிலின் (Ampicillin) மற்றும் எரித்ரோமைசின் (Erythromycin) ஆகியவை காணப்பட்டன. இந்த இரண்டு ஆன்டி – பையாடிக்குகளும் எந்த தேசத்திலும் தேனீகளுக்கு தருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த தேனை சுவிட்சர்லாந்தில் விற்பதே சட்டபடி குற்றம். அதே போல ஆஸ்திரேலிய கம்பெனி தயாரித்த தேன் 40 தேசங்களுக்கு விற்கப்படுகின்றது. ஆனால் ஆஸ்திரோலியாவில் இந்த தேனை சட்டப்படி விற்க முடியாது.

விஞ்ஞானம் மற்றும் சூழ்நிலை மையத்தின் டைரக்டரான சுனிதாநாராயண் கூறுவது: – இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாதது வெளிநாடு கம்பெனிகள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றன. நமது அரசாங்கமே, நமது மக்களின் ஆரோக்கியத்தைப்பற்றி கவலைப்படாத போது இதர கம்பெனிகள் எதற்காக கவலைப்பட வேண்டும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தேனுக்கு நாம் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம். ஆனால் இந்தியாவிலேயே விற்கப்படும். சுதேசி தேன்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

மேற்சொன்னவை பத்திரிகையில் வந்தவை. நீங்கள் வாங்கும் தேன் சுத்தமானதா என்று கண்டுபிடிக்க இதோ சில வழிகள் 

தேனில் ஒரு துளியை ஒரு டம்ளர் தண்ணீரில் விடவும். தேன் நேராக டம்ளரின் அடிமட்டத்திற்கு இறங்கினால் அது நல்ல தேன்.

ஒரு பருத்தி விளக்கு திரியை தேனில் தோய்த்து, விளக்கேற்றவும். அது நன்றாக எரிந்தால் தேன் சுத்தமானது. விட்டு விட்டு வெடிக்கும் சத்தத்துடன் எரிந்தால் அது கலப்படத் தேன்.

சுத்தமான தேன் தண்ணீரில் கரையாது. ஆனால் கலப்படமான தேன் தண்ணீரில் கரையும். ஒரு ஸ்பூன் தேனை எடுத்து தண்ணீரில் கலக்கி பார்க்கவும். கரைந்தால் அது கலப்படத் தேன்.

ஒரு மேஜைக்கரண்டி தேனை எடுத்து காய்ச்சவும். சுத்தமான தேன் உருகும். குளிர்வித்தால் பழைய மாதிரி தேனாகும். கலப்படத் தேன் காய்ச்சி குளிர்வித்தால் கெட்டியாகி விடும். வெல்லத்துடன் கலப்படம் செய்திருந்தால் இது நன்கு புலப்படும்.

ஒரு கத்தியிலிருந்து நல்ல தேனை சொட்ட விட்டால் அது நேராக ஒரே அருவியாக விழும். விழுந்து தனித் துளிகளாக இருக்கும்.


Spread the love