சத்தமிடாமல் முத்தமிடலாம். ஆனால் சத்தமில்லாமல் ஏப்பம் இல்லை. பித்தத்தால் இந்த ஏப்பம் வருகிறது. பணக்காரர்களுக்கு புளியேப்பம் (புளித்த ஏப்பம்), ஏழைகளுக்கு பசியேப்பம் என்று சொன்னாலும் ஏப்பம் என்பது பொதுவான நோய்தான். ஊரைக் கொள்ளையடித்து.. ஊழல் செய்து விடும் ஏப்பம் மனம் சார்ந்த நோய். சாதாரண புளித்த ஏப்பம் என்பது உடல் சார்ந்த நோய். உணவுக் குழாய்க்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள தடுப்பானில் வரும் பிரச்சனையால் இப்படி ஏற்படுகிறது. உணவுக் குழாயின் கீழ் உள்ள வளையமானது மிகவும் நெகிழ்ந்து போய் இருக்கும் நிலையில் இப்படி நடக்கும்.
இந்தத் தடுப்பான் பித்தம் மேலே வருவதைத் தடுக்கிறது. வயிற்றின் மேல் பகுதியை இறுக மூடி வைக்கிறது. இது சரியாக மூடும்போது பித்த ஏப்பம் வருவதில்லை. சில நேரங்களில் இப்படி மூடாமல் போனால் பித்தம் மேலே வருகிறது. வாயில் பித்தம் ஊறுதல், கசப்பு, வயிறு எரிச்சல், எச்சில் ஊறுதல், வாந்தி எடுக்கும் உணர்வு, நெஞ்சு வலி, இருமல் போன்றவை காணப்படும்.
நிறைய குழந்தைகளுக்கு இந்த நோய் உள்ளது. சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே இது காணப்படுகிறது. நெஞ்சு வலி, வயிறு எரிச்சல், விழுங்குவதற்குச் சிரமம் போன்றவை இதன் அறிகுறிகள். பித்தத்தால் வயிற்றுப் புண்ணும் ஏற்படும்.
பித்தத்துக்கு ஆயுர்வேதத்தில் நல்ல மருந்துகள் உண்டு. சிற்றமிர்து சேர்ந்த குடூச்சியாதி கஷாயம், நன்னாரி கஷாயம் ஆகியவற்றை முதலில் கொடுப்பார்கள்.
பிறகு பேதிக்கு மருந்து கொடுப்பார்கள். கல்யாணக் குடம், திரிவிருத் லேகியம் ஆகியவற்றையும் குறிபபிட்ட அளவில் தருவார்கள். அதற்குப் பிறகு இந்துகாந்த கிருதம், டாடி மாதி கிருதம் போன்ற நெய் மருந்துகளை நோயாளியின் நிலை அறிந்து தருவார்கள். மருத்துவ ஆலோசனை தேவை.
இந்தப் பிரச்னை உள்ளவர்கள் காபி, டீ, கூல் ட்ரிங்ஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மது குடிப்பது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்களுக்கு உடனே ‘குட்பை’ சொல்ல வேண்டும். அதிகக் காரமான உணவு வகைகளையும், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளையும் அறவே தவிர்க்க வேண்டும்.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகள், இறைச்சி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.
வெந்தயப் பொடியை மோரில் கலந்து சாப்பிடலாம். வெந்தயக் கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்துக் கூட்டு செய்தும் சாப்பிடலாம். சாம்பார் செய்யும்போது வெந்தயத்தையும், துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைத்துக் கடைந்து சாப்பிடலாம். உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்துக் கஷாயம் செய்து குடிக்கலாம்.
கேரட் ஜூஸைக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பால், முட்டையின் வெள்ளைக்கரு, வெண்ணெய் போன்றவற்றைத் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. அத்திக்காயுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் புளித்த ஏப்பம் குறையும். மணத்தக்காளி கீரையுடன் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிடலாம். மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண் மட்டுமல்லாமல் வாய்ப்புண்ணும் குணமாகும். 5 அல்லது 6 பூண்டை ஒரு டம்ளர் பசும்பாலில் போட்டு நன்றாகக் காய்ச்சி வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
உடலின் எல்லா நோய்களுக்கும் காரணம் உணவுப் பழக்கம்தான். சரியான, சத்தான இயற்கை உணவுகளை சாப்பிட்டால் பித்தம் மட்டுமல்ல எல்லா நோய்களையும் சத்தமில்லாமல் தடுக்கலாம்..