ஒரு வருடத்தில் உள்ள 12 மாதங்களில் கொடிது ‘மே‘ மாதம். குறிப்பாக கடலோரப் பகுதியில் வாழும் மக்களுக்கு சுட்டெரிக்கும் வெய்யிலுடன், புழுக்கத்தையும் உண்டாக்கும் மாதம்.
நம்மை சுற்றி இருக்கும் சீதோஷ்ணத்துக்கு தகுந்தவாறு ஒரளவு நமது உடலே ‘அட்ஜெஸ்ட்‘ செய்து கொள்ளும். வெய்யில் அதிகமானால் உடல் வியர்த்துக் கொட்டி உஷ்ணத்தை வெளியேற்றும். வெய்யில் கிட்டத்தட்ட 37 டிகிரி செல்சியஸ் அளவை அடைந்தால் உடலில் வியர்வை பெருக ஆரம்பிக்கும். தோலில் பெருகிய வியர்வை ஆவியாகி விடும்.
இந்த உஷ்ண குறைவு செயல்பாட்டை பாதிப்பது காற்றில் உள்ள ஈரப்பசை. கோடையில் கடலோர பகுதிகளில் உள்ள காற்று மண்டலத்தில், கடலின் சமீபத்தால், ஈரப்பதம் (Humidity) அதிகம் இருக்கும். இதனால் வியர்வை ஆவியாகாது. உடலின் உஷ்ணம் அதிகமாக ஆரம்பிக்கிறது. உடல் சூடும் குறையாது, வியர்வையே பெருகிக் கொண்டேயிருக்கும். “அப்பா, என்ன புழுக்கம்” என்கிறோம். இந்த புழுக்கத்தின் தாக்கம் எரிச்சலையும், அரிப்பையும், அவதியையும் உண்டாக்கும். டில்லியிலும் சென்னையிலும் ஒரே அளவு உஷ்ணம் என்று வைத்துக் கொள்வோம். டில்லியில் காயப்போட்ட துணி சென்னையில் காயப்போட்ட துணியை விட சீக்கிரம் உலரும். டில்லியில் பயன்படுத்தும் ஏழைகளின் ஏ.சி. ஆன ‘கூலர்‘ (Air Cooler) சென்னையில் உதவாது. காரணம் அது ஈரப்பதத்தை இன்னும் அதிகரிக்கும்.
ஈரப்பத புழுக்கம் அதிகமானால் ரத்தம் உடலின் சூட்டை வெளியேற்ற முடியாமல் தவிக்கும். உஷ்ணம் உள்ளேயே தங்கிவிடுவதால், ஜுரம் ஏற்படும். ரத்தச்சுழற்சி பாதிக்கப்பட்டால், மூளை, இதயம், தசைகளுக்கு ரத்தம் சரிவர பாயாது; இதனால் களைப்பும் தள்ளாமையும் ஏற்படும்.
காற்றினுள் ஈரப்பதம் இன்னொரு கெடுதீயையும் உண்டாக்குகிறது. பாக்டீரியா, வைரஸ், காளான், பூஞ்சனம் இவையெல்லாம் உருவாக உதவுகிறது. வுவர் ஜல்லடைகளில், கழிப்பறைகளில் – வீட்டில் ஈரமாக இருக்கும் இடங்களிலெல்லாம் கிருமிகள் வளருகின்றன. இவை ஆஸ்த்துமாவை தூண்டும். இதர சுவாச கோளாறுகளையும் உண்டாக்கும்.
ஆயுர்வேதத்தின் படி கோடையை தொடரும் மழைக்காலத்தில் இன்னும் ஈரப்பதம் அதிகமாகும். கோடையினால் தளிர்ந்து போன ஜீரணசக்தி, மழைக்காலத்தில் மேலும் பலவீனமடையும். மூன்று தோஷங்களும் கோடை, மழைக்காலங்களில் பாதிப்படைகின்றன.
பூஞ்சன தொற்று (Fungus Infections)
இது பொதுவாக கால் விரல்களின் இடுக்குகள், கால் நகங்கள், பாதங்களில் ஏற்படும். உடலின் இதர பாகங்களிலும் பரவும். தொடையும் அடிவயிறும் சேரும் பாகங்களிலும் காணப்படும்.
வீட்டு வைத்தியம்
- சமையல் சோடா (Baking Soda) கலந்த நீரில் 30 நிமிடம் கால்களை அமிழ்த்தி வைக்கவும்.
- கால்களை சரிவர பராமரிக்க வேண்டும். குளித்த பின், பருத்தி துவாலையால் ஈரம் போக துடைக்க வேண்டும். ஈரத்தை உறிஞ்சும் பருத்தி ‘சாக்ஸுகளை‘ பயன்படுத்தவும். சாக்ஸுகளை வெந்நீரில் தோய்க்கவும். காற்றோட்டமுள்ள காலணிகளை அணியவும்.
- மஞ்சள், வேம்பு, எள் – இவற்றை சேர்த்தரைத்த களிம்பை பயன்படுத்தலாம்.
- கால் விரல்களை ‘லிஸ்டரின்‘ – வாய் சுத்தம் செய்யும் திரவத்தில் அமிழ்த்தி வைக்கலாம்.
- பருத்தி உருண்டைகளால் Tea Tree Oil கலந்த லாவண்டர் எண்ணையை விரல் நகங்களில் தடவலாம். கற்றாழை சாறு, வினிகர் இவற்றையும் தடவலாம்.
- 8 (அ) 10 இலவங்கப்பட்டை குச்சிகளை 4 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பிறகு 45 நிமிடம் ஊற வைக்கவும். இந்த நீரில் கால்களை அமிழ்த்தி வைக்க பயன்படுத்தவும்.
- தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக உண்ணவும். பாதிக்கப்பட்ட இடத்தில் பூண்டை நசுக்கி தேய்க்கலாம். தேய்த்து 1/2 மணி நேரம் விட்டு விடவும். தினமும் 2 வாரங்கள் இந்த பூண்டு சிகிச்சையை செய்யவும். எரிச்சல் இருந்தால் தண்ணீர் சேர்த்த பூண்டு சாற்றை பயன்படுத்தவும். வெங்காயத்தையும் பூண்டு போல் உபயோகிக்கலாம்.
- ஆயுர்வேத மருந்துகளை மகா மரிச்சியாதி தைலம், தத்ருக்னாலேபம், கந்தக ரசாயனம் நல்ல பயனை தரும்.
களைப்பு, ஆயாசம்
ஈரப்பசை நிறைந்த சீதோஷ்ண நிலையிலும், புழுக்கத்தாலும் தூக்கம் சரியாக வராது. நீர்மச்சத்துகளின் குறைவும் பலவீனத்தை உண்டாக்கும். இதனால் வழக்கத்தை விட களைப்பும், தள்ளாமையும் அதிகம் ஏற்படும்.
· உடலை குளிர்விக்க நன்னாரி போன்றவற்றின் சர்பத்தை குடிக்க வேண்டும். எலுமிச்சை பழ ஜுஸும் நல்லது.
· அதிமதுரம் ஆயாசத்தை குறைக்கும். தினம் 2.5 கிராம் அதிமதுர வேரை எடுத்துக் கொள்ளலாம்.
· இலவங்கப்பட்டை பொடியை நீங்கள் உண்ணும் காலை உணவில் – உப்புமா, சூப், இட்லி முதலியன தூவிக் கொண்டு உண்ணலாம்.
· காய்கறி ரசங்கள், பழரசங்கள், மோர், லஸ்ஸி முதலியன களைப்பை நீக்கும்.
· அஸ்வகந்தா சூரணம் களைப்பை போக்கும் ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.
· பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, கல்கண்டு, சோம்பு – இவற்றில் தலா 1/2 கப் எடுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் தனித்தனியே பொடி செய்து கொள்ளவும். கருமிளகு 20 துகள் (Grain) எடுத்து, பொடித்து, மெல்லிய மஸ்லின் துணியில் சலித்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது இந்த பொடியை மூன்று ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து எடுத்துக் கொள்ளவும்.
அஜீரணம்
கோடை வெப்பத்தினால் உடலின் ஜீரண சக்தி பலவீனமடையும். கோடை – மழைக்கால சந்திப்பினால் திரிதோஷ பாதிப்புகள் ஏற்படும்.
· அஜீரணத்திற்கு சிறந்த மருந்து பெருங்காயம். ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடியை உருக்கிய, சூடான நெய்யுடன் சிறிது சாதத்தில் சேர்த்து பிசைந்து உண்ணவும். வழக்கமாக சாப்பிடுவதற்கு முன்பு இந்த பெருங்காய – நெய் சாதத்தை சாப்பிடவும். பெருங்காய பொடியை மோரில் சேர்த்து குடிக்கலாம்.
· கொத்தமல்லி விதை (தனியா) யுடன் சுக்கை சேர்த்து கஷாயம் தயாரித்து பருகி வர அஜீரணம் விலகும்.
· வெய்யில் – புழுக்கமான காலங்களில் லகுவான உணவுகளை உட்கொள்ளவும்.
· இஞ்சிச்சாறு சேர்த்த எலுமிச்சை சாறு பசியை உண்டாக்கும்.