கறுப்பும், சிவப்பும்

Spread the love

டி.வி. யை ஆன்செய்து எந்த சேனலை வேண்டுமானாலும் பாருங்கள். எல்லா சேனலிலும் வரும் முக்கிய விளம்பரம் கறுத்த முகத்தை சிவப்பாக்குவது பற்றித் தான். மேனியை 7 நாட்களில் சிவப்பாக்கும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி ஏமாறுபவர்கள் ஏராளம். எந்த க்ரீமும், சோப்பும், நமது ஒரிஜினல்தோல் கலரை மாற்ற முடியாது என்பது தான் நிதரிசனமான உண்மை. சிவப்பு நிறம் வேண்டுமானால் வெய்யில், மற்றும் சில சர்ம பாதிப்பினால் கறுப்பாகுமே தவிர, கறுத்த நிறம் அல்லது மாநிறம் சிவப்பாவது கடினம். உங்கள் சருமத்தின் அசல்‘ (Original) வண்ணம் சிவப்பாக இருந்து வெய்யில் போன்ற காரணங்களால் கறுத்துப் போனால், அதை, அசல் வண்ணத்தை ஒரளவு திரும்பப் பெறலாம். மற்ற படி உங்களின் பிறவிக் கலரை மாற்ற இயலாது. அழகு நிலையங்களில் ப்ளீச்சிங் (Bleaching) செய்து கொண்டால்? என்று நீங்கள் கேட்கலாம். முகத்தின் கருமையை ஒரளவு ப்ளீச்சிங் நீக்கும். ஆனால் தற்காலிகமாகத்தான்.

சர்மத்திற்கு வண்ணத்தை தருவது, வர்ணமூட்டியான (Pigment), பழுப்பு நிற மெலானின்‘ (Melanin) தான். மெலானின் சில பிரத்யேக செல்களால் தயாரிக்கப்படுகிறது. இது தோலில், முடியில், கண் விழிகளிலும் காணப்படுகிறது. தோலில், மேல் பகுதியான எபிடெர்மிஸ் (Epidermis) மெலானோசைட்ஸ் (Melanocytes) செல்களால் மெலானின் தயாரிக்கப்பட்டு, இதர சர்ம செல்களுக்கு பரவுகிறது.

சிகப்பு / வெள்ளை நிறத்தோடு பிறக்கும் வெள்ளைக்காரர்களுக்கு மெலானின் மிக குறைவாக இருக்கும். பழுப்பு நிறத்தவர்களுக்கு நடுத்தர அளவிலும், மிகக் கறுத்த நிறமுள்ளவர்களுக்கு மிக அதிகமாகவும் மெலானின் இருக்கும்.

சூரிய ஒளி, மெலானோசைட்ஸ்களை தூண்டி, அதிக மெலானினை சுரக்க வைக்கிறது. இதனால் தான் வெய்யிலில் உடல் கருத்து விடுகிறது. இந்த பாதிப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது.

கருவளையங்கள்  

முகத்தில் அல்லது இதர சரும பிரதேசங்களில், கறுமையான ஒட்டுக்கள்‘ (Patches) உண்டாகலாம். இதை ஹைபர் – பிக்மென்டேஷன் (Hyper pigmentation) என்பார்கள். இந்த கருநிற திட்டுகளை சுற்றியுள்ள சர்மம் நார்மல்கலரில் இருக்கும். எல்லா இனத்தவர்களுக்கும் இத்தகைய கருந்திட்டுக்கள், வளையங்கள் ஏற்படுவது சகஜம். வெய்யிலால் மெலானின் அதிகமாவது முக்கிய காரணம்.

சில சந்தர்ப்பங்கள் – கர்ப்பமாதல், அடிசன் வியாதி (அட்ரீனல் சுரப்பி பாதிப்பு) இவைகளும் மெலானின் உற்பத்தியை தூண்டி விடும். சில மருந்துகளும் (ஆன்டி – பையாடிக்) கருமை திட்டுக்களை உண்டாக்கலாம்.

மெலாஸ்மா (Melasma)

இது Chloasma என்றும் சொல்லப்படும். உடலில், குறிப்பாக முகத்தில் ஏற்படும் பழுப்பு / கருநிற ஒட்டுக்கள் (Patches) இதன் அறிகுறிகள். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது தோன்றுவது சகஜம். கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களுக்கு இந்த கருமையான திட்டுக்கள் முகத்தில் தோன்றலாம். ஆண்களுக்குக் கூட ஏற்படலாம். ஆசிய இனத்தவருக்கு மெலாஸ்மாதோன்றுவது அதிகம்.

மெலஸ்மாவால் முகத்தில் இரு புறங்களிலும் ஒரு மாதிரியான கருமை திட்டுக்கள் தோன்றும். கன்னங்கள், நெற்றி, மேல் உதடு, மூக்கு – இந்த பிரதேசங்களில் தோன்றும். சிலருக்கு முகத்தின் ஒரு பக்கம் மட்டும் தோன்றலாம்.

இந்த கரு வளையங்களால் எரிச்சலோ, நமைச்சலோ ஏற்படாது. முகம் விகாரமாக தெரிவது தான் இதன் விளைவு. சூரிய ஒளியிலிருந்து காக்கும் கிரீம்கள், ஹைட்ரோ – குவின்னோன், ரெடினாயிக் அமிலம் உள்ள கிரீம்கள், மெலாஸ்மாவுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

முகப்பருக்களும் கருமை நிறத் திட்டுக்களை ஏற்படுத்தும். சிலருக்கு, குறிப்பாக பெண்களுக்கு சூரிய வெப்பம் சருமத்தை சீக்கிரமாக தாக்கி, கருமை நிறத்தை உண்டாக்கும்.

உடலின் மடிப்புகளில் (அக்குள், அடிவயிறும் தொடையும் சேரும் பாகம், கழுத்து) கருமையான “இடங்கள்” தென்பட்டால் அது Acanthosis nigricans ஆக இருக்கலாம். இந்த நிலைமை புற்று நோயை குறிக்கும். எனவே உடல் மடிப்புகளில் கரு நிற ஒட்டுக்கள் தோன்றினால் உடனே டாக்டரை அணுகவும்.

ஆயுர்வேதம்

ஆரோக்கிய சர்மம், சரியான லிவர் செயல்பாடுகள், நல்ல ஜீரண சக்தி, உணவுச்சத்துக்கள் சரிவர கிரகிக்கப்படுவது, கழிவுகள் சரிவர வெளியேறுவரை குறிக்கிறது என்கிறது ஆயுர்வேதம். உடலின் கண்ணாடி சர்மம். முகத்தை பாதுகாக்க, கருமை நிற திட்டுக்களை போக்க பல மூலிகை மருந்துகள் ஆயுர்வேதத்தில் உள்ளன.

மூலிகைகள்

  1. வேம்பு (AZardirachta India) – சர்மப் பாதுகாப்புக்காவும், பல தொற்று நோய்களை தடுப்பதாகும். தொன்று தொற்று பயன்படுத்தப்படுகிறது. கிருமி நாசினி.
  2. மஞ்சள் – சிறந்த கிருமி நாசினி. ஆன்டி – ஆக்ஸிடான்ட்.
  3. நாயுருவி (Achyranthes aspera) – சர்மத்தை காக்கும்.
  4. குப்பைமேனி (Acalypha Indica) – சொறி, சிரங்குகள் வராமல் தடுக்கும்.
  5. பூவரசு (Thespesia populnea) – சோரியாஸிஸ், சொறி சிரங்குகள் முதலிய சர்ம நோய்களை தவிர்க்கும்.
  6. கடுகரோகிணி (Picrorhiza kurroova) – சரும தோஷங்களை போக்கும். சர்மத்தின் நீர் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும்.
  7. வல்லாரை – ஞாபக சக்தியை அதிகரிக்கும் இந்த மூலிகை சர்ம நோய்களையும் தீர்க்கும்.
  8. கருப்பு தாமர் (Canarium strictum) – சர்ம நோய்களுக்கு நல்லது. நாட்பட்ட சரும பாதிப்புகளை போக்கும்.
  9. கோவைக்காய் – சர்ம பளபளப்பை அதிகரிக்கிறது.
  10. புங்கம் (Pongamia glabra) – சர்ம நோய்களுக்கு இதன் விதைகள் பலனளிக்கின்றன.
  11. கற்றாழை – இப்போது கற்றாழை இல்லாத மேனி அழகு சாதனங்கள் இல்லை. கற்றாழை சாற்றை முகத்தில் தடவி வர மாசு, மருக்கள், கருமை வளையங்கள் மறையும்.

கருமையான சர்மத்திற்கு

  1. ஆரஞ்சு பழத்தின் தோல், பப்பாளிப் பழத் தோல் – ஒவ்வொன்றிலும் 100 கிராம் எடுத்து, நிழலில் உலர வைத்து, பொடியாக்கிக் கொள்ளவும். இந்த பொடிகளை ரோஜா – பன்னீரில் குழைத்து முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 (அ) 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.
  2. மருதாணிவேர், வேப்ப இலைகள், வேப்ப விதைகள் – தலைக்கு 100 கிராம் எடுத்து நிழலில் நன்றாக உலர வைத்துக் கொள்ளவும். பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளவும். 1 தேக்கரண்டி அளவில் இந்த கலவைப் பொடியை எடுத்து தண்ணீரில் (ஒரு கப்) போட்டு ஓரிரவு ஊற வைக்கவும். மறுநாள் மேல் நிற்கும் தண்ணீரை எடுத்து விட்டு, கீழிருக்கும் மீதியை (களிம்பை) முகத்தில் உள்ள கருமை திட்டுக்களில் தடவிக் கொள்ளவும்.

Spread the love