சருமம் சிறக்க அருமையான வழிகள்

Spread the love

சருமம் சிறக்க அருமையான பல வழிகள் உள்ளன. அவற்றை பார்ப்போம்..

1. சருமம் முதிர்வதைத் தடுக்க பாதாம் மற்றும் ஆலிவ் எண்ணெய் சிறந்த தைல வகைகள் ஆகும். படுக்கும் முன்பு பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யினால் முகத்தை மசாஜ் செய்து கொள்ளவும். இரவில் மசாஜ் செய்தால் தான் சருமம் சுலபமாக எண்ணெய்களை உறிஞ்சும். சுருக்கங்கள், சருமம் உலர்ந்து போதல் முதலியவை குணம் பெற எண்ணெய் மசாஜ் மிகச் சிறந்த வைத்திய முறையாகும். நெய்யில் வைட்டமின் ‘இ’ பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் சத்தானது செல் பாதிப்புகளைத் தடுக்கிறது. தினசரி உணவில் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.

2. கற்றாழைச் சாற்றை தோலில் தடவலாம்.

3. அரைத் தேக்கரண்டி அளவு தேன் எடுத்துக் கொண்டு, ஓரிரு மேஜை கரண்டி ரோஜாப் பன்னீரைக் குழைத்து முகம், கழுத்து மற்றும் உடல் பாகங்களில் தடவவும். 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.

4. முகத்தை அடிக்கடி கழுவினால் ஈரப்பசை, நீங்கி விடும். இதனால் சுருக்கங்கள் நீங்கி சருமம் இளமைத் தோற்றம் தரும்.

5. சருமம் ஈரப்பசையுடன் இருக்க நிறைய தண்ணீர் குடித்தல் அவசியம்.

6. புகை பிடித்தால் சருமத்தின் முக்கிய பொருட்களான எலாஸ்டின், கொலாஜன் சீர்குலைக்கின்றன. அதனால் புகை பிடிப்பதை விட்டுவிடவும்;. துளசி இலையை நீரிலிட்டு பாதி அளவாக நீர் குறையும் வரை காய்ச்சவும். இந்த நீரை அருந்தவும். கொதிக்க வைத்த துளசி இலைகளை உண்ணலாம். துளசி இலையானது வயதைக் குறைக்கும் மருத்துவத் தன்மை உடையது.

7. பச்சைத் தேயிலை (Green Tea) அருந்தி வர வயது முதிர்வதைத் தடுக்கும்.

8. சருமம் பொலிவு பெற நல்ல தூக்கமும் அவசியம். பக்கவாட்டில் படுப்பதை விட, மல்லாந்து படுப்பதால் சுருக்கங்கள் வருவதை தவிர்க்கலாம்.

9. உணவில் காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

10. வைட்டமின் ‘ஏ’,‘சி’ அடங்கிய உணவுகளை சேர்த்துக் கொள்ளவும். அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகளின் படி சருமங்களில் சுருக்கம் விழாமலிருக்க வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது. பால், முட்டைகள்,ஈரல், முளைகட்டிய தானியங்கள், முளை, பச்சைக் காய்கறிகள் ( கேரட், பரங்கிக்காய், கீரைகள், பப்பாளி, மாம்பழம் முதலியன ) போன்றவைகளில் வைட்டமின் ‘ஏ’ உள்ளது. வைட்டமின் ‘சி’யானது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அதனால் சருமக் கோளாறுகளைத் தடுக்கிறது. வைட்டமின் ‘சி’ சத்தானது நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, கொய்யா போன்ற பழ வகைகளில் உள்ளது.

11. சிலிக்கான் குறைவினால் ஏற்படும் செரி, சிரங்குகளுக்கு உணவில் முளைக் கட்டிய தானியங்கள், பார்லி, தக்காளி, கீரை, அத்திப்பழம் உபயோகிக்கவும்.

12. சுருக்கம் நிறைந்த தோலுக்கு வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும். இது சோடியம் குறைபாட்டைப் போக்குவதால் சுருக்கங்கள் மறையும்.

13. தினசரி இரண்டு முறை குளிக்கவும். வியர்வை, அழுக்கு போகும்.

14. வியர்க்குரு வந்தால் நுங்கின் சதைப் பகுதியை நன்கு தேய்த்து, ஊறிய பின் குளிக்கவும். கற்றாழைச் சாற்றையும் தேய்க்கலாம்.

15. செம்பருத்தி இலைகளை நன்கு கசக்கி, உடலில் தேய்த்துக் குளித்து வர, வியர்வை நாற்றம் போகும்.

16. வாரம் ஒரு முறை நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.

17. தினசரி தேனை, தண்ணீருடன் குளித்து வர சருமம் மிருதுவாகி பளபளக்கும்.

18. சந்தனப் பொடி, பன்னீர், பால் மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல் செய்து உடல் முழுவதும் ( முகம் உட்பட ) பூசி 10,15 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். ஆலிவ் எண்ணெயும் சேர்த்துக் குளிக்கலாம். இதே போல் மஞ்சள், பாலோடு கலந்து உடலில் பூசி குளிக்கலாம். ரோஜா இதழ்களை அரைத்து பாலோடு கலந்தும் உபயோகிக்கலாம்.

19. உள்ளாடைகள் எப்போதும் தோலுடன் ஒட்டி இருப்பதால், உள்ளாடைகளைச் சுத்தமாக வைக்கவும். இரவில் தளர்வான உடைகளை அணியவும். பொதுவாக பருத்தியிலான உள்ளாடைகளே சிறந்தவை.

20. வயது அதிகரிக்க, அதிகரிக்க தோல் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப் போட முடியும். தோல் சுருக்கத்தை தவிர்க்கும் ரிபோபிலேவின் (Riboflavin) சத்துக்கள் உள்ள உணவை அதிகம் உட்கொண்டால் தோல் சுருக்கங்கள் விழாமல் தவிர்க்கலாம். தோலும் மிருதுவாக இருக்கும். இவை பால், வெண்ணெய், மீன், முட்டை,ஈரல்   ( லிவர் ), தானியங்களில் அதிகம் உள்ளது.

21. தோல் வியாதிகள் தொற்றுவதற்கு காரணமாக ஒரு சில விஷயங்கள் உள்ளன. மற்றவர்கள் பயன்படுத்திய உடல் துவாலை, சோப்பு வகைகளை நீங்கள் உபயோகிக்காதீர்கள். நீங்கள் உபயோகிப்பதையும் மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள்.

22. வாரம் இரண்டு, மூன்று முறை கேரட், வெள்ளை முள்ளங்கி இவற்றின் சாற்றை அருந்தி வர மேனி அழகு பெறும்.

23. தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து உடலில் தடவி, பயற்ற மாவு தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் அமையும்.

24. உடலில் சில பாகங்கள் சீக்கிரம் கறுத்து விடுவதுண்டு. உதாரணம், கழுத்து, முழங்கை. கறுத்துப் போன இடங்களில் எலுமிச்சைச் சாற்றைத் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.

25. மன அமைதி, ஓய்வு, ஆழ்ந்த தூக்கம் இவை உடல் புத்துணர்ச்சி பெறச் செய்கின்றன. சருமமும் ஆரோக்கிமாக ஒளிரும்.

26. வெயிலில் அலைவதினைத் தடுக்கவும். வெயிலில் செல்ல வேண்டிய அவசியம் இருப்பின் குடை, தொப்பி இவற்றைப் பயன்படுத்துவது அவசியம்.

27. வயதாவதினால் ஏற்படும் முகப்பாதிப்புகள் குறைப்பதற்கு தினமும் தேங்காய் பால், தேன், எண்ணெய் அல்லது ஏதாவது ஒரு மூலிகைத் தைலம் இவற்றை உடலில் தடவி வரலாம்.

28.  புதினா இலைகளை நீர்விட்டு அரைத்து களிம்பாக்கி, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து தேங்காய் எண்ணெயினால் வழித்து எடுக்கவும்.

29. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மஹாமாசாதி தைலத்தை தடவி மசாஜ் செய்து கொள்ளலாம்.

30. பிரம்மி (Centella Asiatica) மற்றும் நெல்லிக்காய் இவற்றை களிம்பாக செய்து கொண்டு, தேனில் குழைத்துத் தடவி 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.


Spread the love