ஆயுர்வேதத்தைப் பொருத்த வரையில் மனிதனின் சுவாச மண்டலம், மனநிலை, வளர்சிதை மாற்றம், கழிவுப்பொருட்களின் வெளியேற்றம் இவற்றால் பாதிக்கப்படுகிறது. மனதின் ‘டென்ஷன்கள்’ ஆஸ்த்துமாவை உண்டாக்கலாம். வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மலச்சிக்கலை உருவாக்கலாம். வளர்சிதை மாற்ற பாதிப்புகளை பிராண வாயு (சுவாசம்) கோளாறுகளாலும் ஏற்படலாம். கழிவுப் பொருள்களின் தேக்கம் நுரையீரலை பாதிக்கலாம்.
சுவாச மண்டல அவயங்கள்
மேல் சுவாச மண்டல உறுப்புகள் – நாசி (மூக்கு), தொண்டை, குரல் வளை, சைனஸ்கள்
கீழ் சுவாச மண்டல உறுப்புகள் – சுவாசக் குழல் (Trachea), பிராங்கைல் குழல்கள் (Bronchial tubes), நுரையீரல்கள்
சாதாரண சுவாச கோளாறுகள்
மேல் சுவாச மண்டல தொற்றுக்கள் (Infections) (ஜலதோஷம் முதலியன)
மூக்கு, பிராங்கைல் ஒவ்வாமை (அலர்ஜி – Allergy)
சைனுசைடீஸ்
பிராங்கைடீஸ் / ஆஸ்துமா
இந்த கோளாறுகளை அறிவிக்கும் சில அறிகுறிகள்
இருமல்
மூச்சுத்திணறல்
மார்வலி
கோழையில் ரத்தம்
சில வீட்டு வைத்தியம்
துளசி இலைகள், இஞ்சி, இரண்டு (அ) மூன்று கருமிளகு – இவற்றை தண்ணீரிலிட்டு கஷாயமாக்கி குடிக்கலாம். ஜுரம், இருமல், ஜலதோஷம் இவற்றுக்கு இந்த கஷாயம் நிவாரணமளிக்கும்.
கற்பூரவல்லி இலைகளை சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து எடுத்துக் கொண்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இருமலும் குறையும். பல ஒவ்வாமைகளை தடுக்கும்.
வெங்காயத்திலிருந்து எடுத்த சாறுடன் வெல்லம் கலந்து குடிக்க இருமல் நிற்கும். வெங்காயத்திற்கு பதில் பூண்டையும் உபயோகப்படுத்தலாம்.
யூகலிப்டஸ் எண்ணெய் (அ) கிராம்புத் தைலம் இவற்றை நீரிலிட்டு நீரை நன்றாகக் காய்ச்சி ஆவி பிடிக்கவும். சுவாச அடைப்புகள் நீங்கும்.
தேன் சேர்த்த இஞ்சி டீ, இருமலுக்கும், மூக்கடைப்புக்கும் நல்ல பலன் தரும்.
இரவில் படுக்கும் முன் மஞ்சள், இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து காய்ச்சிய பாலை குடிக்கவும். இதனால் இருமலும், மூக்கு சம்மந்தப்பட்ட அலர்ஜிகள் குறையும்.
பொதுவான உணவு நியமங்கள்
பல சுவாசக் கோளாறுகளுக்கு சுகாதாரமற்ற உணவுகள், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ந்த உணவுகள், எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகள் காரணமாகின்றன. மாசுபடிந்த சுற்றுப்புற சூழலின் தூசிகள், குளிர்காலம், அஸ்பஸ்டோஸ் போன்றவை, புகை முதலியன சுவாசக் கோளாறுகளை தூண்டும்.
சில குறிப்புகள்
இரவு உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். அதே போல ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.
ஜலதோஷத்தின் போது உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் தவிர்க்கவும். சிக்கன் (அ) இறைச்சி சூப் குடிப்பது நல்லது. நெல்லிக்காய், பூண்டு, மஞ்சள் பொடி உபயோகங்கள் நல்லது. வெங்காய சூப் நிவாரணம் தரும்.
இருமலுக்கும் அதைச் சார்ந்த சுவாச கோளாறுகளுக்கு கோதுமை, பயத்தம் பருப்பு, பழைய அரிசி, பார்லி, ஆட்டுப்பால், பசும்பால், நெய், மட்டன் (அ) மான் இறைச்சி சூப், உலர்திராட்சை, நெல்லி முதலியனவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
கத்தரிக்காய், பாகற்காய், கடுகு, வில்வப்பழம், குளிர்ந்த உணவுகள்.
சைனுசைட்டீஸ் (Sinusitis)
மூக்கைச் சுற்றியுள்ள ‘சைனஸ்கள்’ (வெற்றிட எலும்புக் குழிகள்) பிரதேசங்களில் ஏற்படும் தொற்று (Infections) சைனுசைட்டீஸ் எனப்படும். நாட்பட்ட, நீடித்த ஜலதோஷம் சைனுசைட்டீசை உண்டாக்கலாம்.
இதற்கு ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த உணவுகள், வருத்த உணவுகளை தவிர்க்கவும். தண்ணீர் நிறைய குடிக்கவும். துளசி, இஞ்சி, புதினா, இலவங்கம் கலந்த வெந்நீரை குடிக்கவும். பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். வாழைப்பழம், தக்காளி, குடைமிளகாய், கத்தரிக்காய் இவற்றை தவிர்க்கவும். நேரத்தில் உண்ணவும்.
அல்லல் தரும் ஆஸ்துமா
ஆஸ்த்மா ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் ஏற்படும் பாதிப்பு ஆஸ்த்மா. கிரேக்க மொழியில் ஆஸ்த்மா என்றால் ‘திணறுவது, தவிப்பது‘ என்று பொருள்.
சுவாசப் பாதையில் ஏற்படும் அடைப்பு / சுருங்குவது, மூச்சு விடுவதில் சிக்கல்களை உருவாக்கும். Bronchial Tube எனப்படும் மூச்சுக் காற்றுக் குழாய்கள் நுரையீரலுக்கு ஆக்சிஜனை எடுத்துக் சொல்லும் குழாய்கள். மூச்சுக் குழாய் தசைகளில் கசிவு ஏற்பட்டு வீங்கி விடும். உப்பிய தசைகள் மூச்சுக்குழாயை சுருக்கி அதன் துவாரத்தின் சுற்றளவை குறைக்கும். தவிர வழக்கத்திற்கு மாறாக Bronchial Tubes அதிக சளியை சுரக்கும். இந்த சளிகளும் கட்டிகள் போல கூடி மூச்சுக்குழாயின் பாதையை அடைக்கும். Wheezing (இழுப்பு) எனப்படும் ஒசையுடனும், சிரமத்துடன் மூச்சு விடுவது நேரும். இது தான் ஆஸ்த்மா. ஆஸ்த்மா Bronchial Asthma என்றும் சொல்லப்படுகிறது.
காரணங்கள்
சுவாசக் குழாய்கள் சுருங்குவதற்கு காரணங்களில் ஒன்று, குழாயின் சுவற்றில் உள்ள ‘லைனிங்‘ (Lining) தசைகளின் முகவாய்கள் (Receptors) ஏறுமாறாக, இயங்கி தசையை சுருங்க வைப்பது. குழாய் சுவற்றின் திசுக்களும் அழற்ச்சி, தொற்றினால் வீங்கி, சளியை சுரந்து பாதையை அடைக்கின்றன. குழாய் சுவர்களின் உட்படையின் (Lining) மேல் பாகம் சிதைந்து போகலாம். அதனால் சிதைந்த செல்களும் கூடி குழாயை சுருக்கும். சுவாசக் குழாயில் உள்ள மாஸ்ட் செல்கள் (Mast cells) தான் குழாய் சுருங்குவதை தூண்டிவிடுகின்றன என்று கருதப்படுகிறது.
ஏன் சுவாச குழாய்கள் சுருங்குகின்றன? இதற்கு ‘அலர்ஜி‘ – ஒவ்வாமை காரணம். அலர்ஜி ஏற்பட காரணமாக, தூசி, புகை, பெயிண்ட் வாசனை, குளிர்காற்று, பூவின் மகரந்த துகள்கள், கொசுவர்த்தி அருள்கள் பருவகால மாற்றங்கள், வீட்டில் வளர்க்கும் பூனை போன்ற பிராணிகள், மனச்சோர்வு / அழுத்தம், சில உணவுகள் என்று பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். குங்குமம், வாசனை திரவியங்கள், பஞ்சு, சுண்ணாம்பு, ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், உளுந்து, சன்செட்யெல்லோ (Sunset Yellow) எனும் வண்ணம் – இவைகளும் இந்த பட்டியலின் அடங்கும். உணவுகளால் ஆஸ்துமா ஏற்படுவது அபூர்வம்.
அலர்ஜியை உண்டாக்கும் பொருட்கள், சுவாசக்குழாய்கள் சுவர்களில் உள்ள மாஸ்ட் செல்களின் (Mast cells) மேற்பரப்பில் உள்ள இம்யூனோ குளோபின் ‘இ‘ எனும் ஆன்டி-பாடியுடன் இணைந்து, ஆஸ்துமாவை தூண்டிவிடும்.
வைரஸ் கிருமிகளும் ஆஸ்துமாவை உண்டாக்கலாம்.
உடற்பயிற்சி கூட ஆஸ்துமா உள்ளவர்களுக்கு, அதன் தாக்குதலை தோற்றுவிக்கலாம்.
சீதோஷ்ண நிலையின் திடீர் மாறுதல்கள் ஆஸ்துமாவை தூண்டலாம்.
கோபதாபங்கள், சோகம் – இதர காரணங்கள்
அறிகுறிகள்
ஆஸ்துமா தாக்குதல் எப்போது வரும். எவ்வளவு தடவை வரும், எவ்வளவு நேரம் இருக்கும் என்பது நபருக்கு நபர் மாறுபடும். முக்கிய அறிகுறி மூச்சுவிடுவதில் சிரமம், இழுப்பு (Wheezing) இவை முக்கிய அறிகுறிகள். ஓசையுடன் கூடிய இழுப்பு, நோயாளி மூச்சை வெளிவிடும் போது ஏற்படும். நெஞசில் கபம் கட்டும். முதல் தாக்குதல் நுரையிரல் இன்ஃபெக்க்ஷனுடன் (Infection) தொடங்கலாம். அடுத்து வரும் தாக்குதல்கள் இதே போன்ற தொற்றால் வரலாம். ஏன், சாதாரண ஜலதோஷம் கூட ஆஸ்துமாவை தூண்டும்.
சிலருக்கு தாக்குதுல் குறைவாக இருக்கும்.
இருமல் ஏற்படும் இரவில் அதிகமாகும். அடுக்குத் தும்பலும் ஏற்படலாம்.
வியர்வை அதிகமாக நோயாளியால் அதிகம் பேசமுடியாது.
ஆஸ்துமாவின் போது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் (குறிப்பாக ஈசினோஃபில்ஸ், ‘இம்யூனோகுளோபிலின் ‘இ‘) அதிகமாக காணப்படும்.
ஆஸ்துமாவிற்கு உணவுக்கட்டுப்பாடு
குளிர்ச்சியான ஐஸ்கிரீம், தயிர், மோர், எலுமிச்சை இவற்றை தவிர்க்கவும். அலர்ஜியை உண்டாக்கும் உணவுப்பொருட்களை கண்டறிந்து அவற்றை தவிர்க்கவும். முட்டை, கொய்யாப்பழம், வெள்ளரிக்காய், இவற்றையும் விலக்கவும். உப்பு குறைவாக உணவு நல்லது. உளுந்து, வாழைப்பழம், இனிப்பு இவைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை.
விட்டமின் ‘ H ‘ 6 உள்ள உணவுகள் ஆஸ்துமாவுக்கு நல்லது. முழுதானியங்கள், லிவர் (மாமிசம்) இறைச்சி, காய்கறிகள் இவற்றிலிருந்து இந்த விட்டமின் கிடைக்கும்.
குளிக்க மட்டுமல்ல, குடிப்பதற்கும் வெந்நீரை உபயோகிக்கவும்.
மலச்சிக்கல் இல்லாமல் பாதுகாத்துக்கொள்ளவும்.
அஜினமோடோ, உணவுக்கு சுவையும், வண்ணத்தை தரும் இராசயனப் பொருட்ளையும் தவிர்க்கவும்.
சில மருத்துவ சமையல் குறிப்புகள்
கற்பூரவல்லி சாறு
தேவை
கற்பூரவல்லி இலைகள் – 2
வெல்லம் – தேவையான அளவு
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
செய்முறை
கற்பூரவல்லி இலைகளை நன்றாகக் கழுவி நசுக்கி சாறு பிழிந்து கொள்ளவும். இதனுடன் வெல்லத்தை சேர்த்து எடுத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு இரு வேளை எடுத்துக் கொள்ளலாம். இருமல் குறையும். மார்பில் கபம் கட்டியிருப்பது நீங்கும். உடல் வலிகள் குறையும். இது குழந்தைகளுக்கும் ஏற்றது.
கற்பூரவல்லி பானம்
தேவை
கற்பூரவல்லி இலைகள் – 3
ஜீரகம் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 1/2 கப்
மோர் – 2 டம்ளர்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கற்பூரவல்லி இலைகளை மிக சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய்யில் ஜீரகத்தை போட்டு கற்பூரவல்லி இலைகளை நன்கு வதக்கவும். இத்துடன் மோரையும், உப்பையும் சேர்த்து கிளறவும். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இருமலும், ஜலதோஷமும் விலகும்.
துளசி சாறு
தேவை
துளசி இலைகள் – 20
கருமிளகு – 2
தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை
துளசி இலைகளை கழுவி சாறு எடுக்கவும். இத்துடன் மிளகுப்பொடி, தேனைச் சேர்த்து எடுத்துக் கொள்ளவும். இதை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம். இது இருமல், ஜலதோஷம் மற்றும் ஜுரத்திற்கு நல்ல நிவாரணத்தை அளிக்கும்.