மூலிகைகளின் அரசி என்னும் பெயர் உள்ள மூலிகை எது தெரியுமா? துளசியைத் தான் அவ்வாறு கூறுகிறோம். மனிதன் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை நோயே தாக்காத அளவுக்கு வலிமை தரும் ஒரு மூலிகை இது ஒன்றுதான். நோய் வருமுன் நம்மைக் காக்கும். நோய் வந்து இருந்தாலும் அதனை குணப்படுத்தி, இனிவரும் காலத்தில் நோய் வராத அளவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் துளசிக்கு உள்ளது. மனிதனின் வாழ்க்கை சூழல், சுற்றுப் புறச்சூழல் மாற்றம் காரணமாக, தினம் தோறும் புதுப்புது காய்ச்சல் தோன்றுகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மலேரியாக் காயச்சல், மூளைக் காய்ச்சல் என்று எவ்விதமான காய்ச்சலையும் துளசி ஒன்றே குணப்படுத்திவிடும். ஜப்பான் நாட்டு மருத்துவர்கள் வைரஸ் காய்ச்சல், என்செபலாடிடிஸ் என்னும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு துளசியைப் பயன்படுத்தி குணப்படுத்தி இருக்கின்றனர். சித்த மருத்துவத்தில் மலேரியாக் காய்ச்சலை குணப்படுத்த 10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 தண்ணீர் தம்ளர் விட்டு அதனை அரை டம்ளராக வரும் வரை சுண்டக் காய்ச்சி அருந்த வேண்டும். அதன் பிறகு சிறிது எலுமிச்சை சாறை அருந்தி கம்பளி போர்வை கொண்டு உடல் முழுக்க மூடிக் கொண்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இளமை வேண்டுமா? துளசி நீர் அருந்துங்க
இளமையுடன் திகழ துளசி நீர் பயன்படுகிறது. சுத்தமான செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி ஊற வைத்து பின்பு அந்த நீரை வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ச்சியாக அருந்தி வர வேண்டும். இதன் மூலம் நாம் தோல் சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படுவதைக் காணலாம். மேலும் எந்த நோயும் நம்மைத் தாக்காது. பார்வைக் குறைபாடு குணமாகும்.
துளசியின் மகத்துவம்
நந்தவனத்தில் எத்தனை செடிகள் இருந்தாலும் அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரே ஒரு துளசிச் செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனமாகி விடும் என்று வேதம் கூறுகிறது. துளசியில் 300 வகைக்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. முக்கியமான 4 வகைகள் ராம துளசி, கிருஷ்ண துளசி, வான துளசி, கற்பூர துளசி என்று ஆயுர்வேத மருத்துவ நு£லில் கூறப்பட்டுள்ளது. துளசி மூலிகைத் தேனீராகவும், அருந்தப்படுகிறது. கற்பூர துளசியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியா கிருமி, பூச்சிகளுக்கு எதிராக பயன்படுகிறது. கழிப்பறைச் சுத்தப்படுத்தும் சாதனங்களில் கற்பூர துளசி எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட நாள் நுரையீரல் கோளாறைக் குணப்படுத்த இராம துளசி பயன்படுகிறது. துளசி இலைச் சாறானது, சளி, காய்ச்சல் இளைப்பு, இருமலுக்கு நிவாரணம் தருகிறது. காது வலி நீங்க துளசி எண்ணெய் பயன்படுகிறது.
துளசி உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி விடுவதுடன் உடலில் உள் வெப்பத்தையும் குணப்படுத்தும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குறைய துளசிச் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்து வர குணமாகும். இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் மற்றும் சில வேதிப் பொருட்கள் துளசியில் உள்ளன.
முகப்பரு, சொறி, சிரங்கு மறைய
எலுமிச்சைச் சாறில் துளசி இலையை சேர்த்து மை போல அரைத்து தோல் நோய்களுக்குப் போடலாம். துளசி இலையுடன் அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வருவதால் முகப்பரு நீங்கும்.
இரத்த அழுத்தம் குறைய
துளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவில் எடுத்துக் கொள்ளவும். அந்த சாற்றில் 50 மி.லி. அளவு எடுத்துக் கொண்டு 2 சிட்டிகை சீரகப் பொடி சேர்த்து காலை, மாலை என தினசரி இருவேளையென தொடர்ச்சியாக 48 நாட்கள் சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் குறையும்.
உடல் எடையைக் குறைக்க துளசி உதவுகிறது
நம்மில் பெரும்பாலானவர்கள் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று கடுமையாக உடற்பயிற்சிகள், ஜாக்கிங், ஓட்டப் பயிற்சிகள், நடைப் பயிற்சி என்று உடலை வருத்திக் கொண்டாலும் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்று வருந்துகிறார்கள். இன்னும் தொப்பை, இடுப்புச் சதை குறையவே இல்லை என்று வருத்தப்படும் அவர்கள் துளசிச் சாற்றையும், எலுமிச்சைச் சாற்றையும் கலந்து உணவுக்குப் பின்பு அருந்தி வந்தால் உடல் குறையத் தொடங்கும்.
தினசரி சிறிதளவு துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதியும் குணப்படும். இரத்தச் சர்க்கரை அளவைக் குறைப்பதில் துளசி அருமருந்தாக உள்ளது.
பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடை கிரகித்து ஆக்ஸிஜனாக வெளியேற்றுகிறது என்பதை நாம் படித்திருக்கிறோம். ஆனால், துளசியில் ஒரு வித்தியாசம் உள்ளது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் காற்று மண்டலத்தில் உள்ள புகை கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான காற்று நமக்கு கிடைக்கிறது. துளசி அதிகம் வளரும் இடங்களில் கொசுக்கள் வராது என்பதை அறிந்திருக்கிறீர்களா?