தீபாவளி, பொங்கல், நல்ல நாட்கள், என அனைத்து பண்டிகைகளுக்கும் நம் வீடுகளில் செய்யப்படுகின்ற ஒரு பொதுவான சிறுவுணவு சுண்டல். இது பெரும்பாலான கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.. இந்த சுண்டல் கருப்புகொண்டைக்கடலையில் செய்து சாப்பிடுவதை விட வெள்ளைக் கொண்டைக்கடலையில் செய்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி. இவ்வாறாக ஆன்மீகத்தோடும், பாரம்பரியத்தோடும் பின்னிப் பிணைந்த வெள்ளைக்கொண்டைக்கடலை பற்றிய சுவாரஸ்யமான வரலாற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
வெள்ளைக் கொண்டக்கடலையின் தாவரவியல் பெயர் .“Cicer arietinum” இதில் “cicer” எனும் வார்த்தையை ரோமானியர்களின் இயற்கை விரும்பி என்று அழைக்கப்படும் “பிளினி” என்கிற பேராசிரியர் சேர்த்துள்ளார் அந்த அளவிற்கு ரோமானியர்களுக்கும், வெள்ளைக் கொண்டைக் கடலைக்கும் ஒரு பெரிய தொடர்பு உள்ளது என்று கூறலாம். இது முதலில் மத்தியக்கிழக்கு நாடுகளில் பயிரிடப்பட்டு வந்துள்ளது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த வெள்ளைக் கொண்டக்கடலையை ரோமானியர்கள் பயிரிட்டு, பல உணவு வகைகளையும் சமைத்து உண்டு வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் வழியாக இது இந்தியாவிற்குள் வந்ததால் “காபூலி கொண்டைக்கடலை” என இந்தியர்கள் கூறுகிறார்கள். தமிழில் வெள்ளைக் கொண்டைக் கடலை, மத்திய இந்தியாவில் சென்னா என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தெற்கு ஐரோப்பா, வட அமெரிக்கப் பகுதிகளிலும் இது பயிரிடப்படுகிறது. மத்தியக்கிழக்கு நாடுகளில் ஃபிளாஃபெல், ஹம்மூஸ் எனப்படும் ரொட்டி வகைக்கான தொடுகறியாக இந்த கொண்டைக்கடலை பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கறுப்புக் கொண்டைக் கடலையைப் போல பல வகைகளில் இது பயன்படுத்தப்பட்டு வந்தாலும் சுண்டலாகவும் குருமாவிலும் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உணவகங்களில் “சோளா பட்டூரா” எனப்படும் மெகா சைஸ் பூரிக்கு தொடுகறியாக பரிமாறப்படுகிறது.
கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால் செரிமானக் கோளாறுகளை சரி செய்ய இது உதவுகிறது. நம் உடலில் எலும்பு, தசை, குருத்தெலும்பு, தோல், இரத்தம் அனைத்திற்கும் தேவையான புரதச் சத்தை இது கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான மெக்னீசியம் இதில் அதிகமாக உள்ளது.
ஒரு கப் சுண்டலில் 84.5 சதவிகிதம் மெக்னீசியம் நமக்கு கிடைக்கிறது. இதில் இரும்புச்சத்து அதிகளவில் இருப்பதால் விளையாட்டு வீரர்களுக்கும், பெண்களுக்கும் அடிக்கடி இந்த வெள்ளைக் கொண்டைக் கடலையைச் சுண்டலாக செய்துத் தருகிறார்கள். இதில் சாப்போனின் எனப்படும் ஆன்டி – ஆக்சிடண்ட் மிகவும் அதிக அளவில் இருப்பதால் மார்பகப் புற்றுநோயை இது எதிர்த்து போராடுகிறது. பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், பைட்டோ ஆஸ்டிரோஜன்ஸ் எனப்படும் தாவர ஹார்மோன்கள் இதிலிருப்பதால் பெண்களின் ஹார்மோன் அளவை இது சீராக்குகிறது. குறைந்த சர்க்கரை அளவு இதில் இருப்பதால் செரிமானம் ஆவதற்கு சிறிது கால தாமதமாகும். எடை மற்றும் இரத்த அழுத்தம் குறைய இது சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.