உயர் இரத்த அழுத்தம்

Spread the love

தற்போது மருத்துவத் துறை, அலோபதி ஆகட்டும், இல்லை ஆயுர்வேதம் ஆகட்டும், மிகவும் முன்னேறி விட்டது. புதிய உடலின் ஒவ்வொரு பாகத்தையும் சோதிக்க வல்ல கருவிகள் வருடா வருடம் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அதே போல் வியாதிகளும் அதிகரித்து வருகின்றன. பழைய தலைமுறையில் ‘இரத்தக் கொதிப்பு’ (உயர் ரத்த அழுத்தம்) பரவலாக இல்லாத பாதிப்பு. இப்போது 50 வயதை தாண்டியவர்க்கு உயர் ரத்த அழுத்தம் இல்லாவிட்டால் தான் அவருக்கு ஏதோ பெரிய வியாதி!

பல வியாதிகளைப் போல, உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் தெரியாமலே போகலாம். உயர் இரத்த அழுத்தத்தால் இதய தாக்குதலும், முடக்கு வாதமும் வரலாம். இரத்த அழுத்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுமுன், இதயத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

இதயம் நம் கை முட்டி அளவு இருக்கும். அயராது உழைக்கும் உறுப்பு. கூம்பு வடிவத்தில், தசைகள் நிறைந்த அவயம். இதயம் ஒரு பம்ப் போன்றது. இதயம், ரத்த ஓட்டம் இவற்றைப்பற்றி விரிவாக சொன்னவர் வில்லியம் ஹார்வி என்ற மருத்துவர்.

இதயம் உடல் அவயங்களுக்கு ஆக்சிஜனையும், ஊட்டச் சத்துக்களையும் அளிக்க ரத்தத்தை பம்ப் செய்து சுழற்சியாக அனுப்புகிறது. எல்லா அவயங்கள், திசுக்கள், செல்கள் இரத்தத்திலிருந்து ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை- ஆக்ஸைடை திருப்பி இதயத்திற்கு அனுப்புகின்றன. இதயம் இந்த “கெட்ட ரத்தத்தை” நுரையீரலுக்கு அனுப்பி, சுத்திகரித்து திருப்பி பெற்றுக் கொண்டு, ரத்த சுழற்சியை தொடருகிறது. இந்த செயல்பாட்டை சுருங்கி, விரிந்து, இதயம் செல்கிறது. இதயம் நான்கு அறைகள் கொண்டது. மற்ற அவயங்களை போலவே இதயத்திற்கும் ரத்தம் தேவைப்படும். அதற்காக தனக்கென்றே பிரத்யேகமாக, இரத்த சப்ளைக்காக “மகாதமனி” (உடல் ரத்தக் குழாய்களிலேயே பெரிதானது) என்ற ரத்தகுழாயை கொண்டது இதயம்.

·        இதயம் ஒரு நிமிடத்தில் 72 முறை சுருங்கி விரிகிறது.

·        விரியும் போது அசுத்த ரத்தத்தை வலது பக்கத்திலும், சுத்த ரத்தத்தை இடது பக்கத்திலும் வாங்கிக் கொள்கிறது.

·        சுருங்கும் போது உள்வந்த இரத்தத்தை ‘பம்ப்’ செய்கிறது.

·        மொத்தம் 0.8 வினாடியில் இந்த சுருங்கி, விரிதல் நடைபெறும்.

·        இதயம் சுருங்கும் கால அளவு “சிஸ்டோல்” (Systole) எனப்படும்.

இதற்கு 5 வினாடிகள் ஆகும். அதே போல இதயம் சிறிது ‘ஒய்வெடுத்து’ தனது ‘அறைகளை’ இரத்தத்தால் நிரப்பும். இந்த நிலை ‘டயாஸ்டோல்’ (Diastole) எனப்படும்.

இதயம் ரத்தத்தை செலுத்தும் அழுத்தம், அதாவது இரத்தக்குழாயின்

சுவற்றில் மோதும் அழுத்தம் “ரத்த அழுத்தம்” எனப்படும். இது சிஸ்டாலிக் நிலையில் உச்சக்கட்டமாக, அதிகமாகவும், டயாஸ்டோலிக் நிலையில் குறைவாகவும் இருக்கும்.

Box

          இரத்த அழுத்த அளவுகள்

பிரிவு

1.       வழக்கமான ரத்த அழுத்தம் (நார்மல்)

2.       நார்மலின் உச்ச நிலை

3.       உயர் இரத்த அழுத்தம் (Hyper tension)

a)       நிலை 1 (Stage 1)

b)      நிலை 2 (Stage 2)

c)       நிலை 3 (Stage 3)

ஸிஸ்டாலிக் (மி.மீ-மெர்க்குரி)

130 க்கு கீழே

130 – 139

140 – 149

160 – 179

180, அதற்கு மேல்

டயாஸ்டாலிக் (மி.மீ-மெர்க்குரி)

85 க்கு கீழே

85 – 89

90 – 99

100 – 109

110 அல்லது அதற்கு மேல்

இரத்த அழுத்தத்தை சரியாக அளக்க, சில யோசனைகள்

·        டாக்டரிடம் விரைவாக வந்தால், அழுத்தத்தை அளக்குமுன், ஒரு ஐந்து நிமிடம் ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்ளவும்.

·        சாப்பிட்டவுடனே இரத்த அழுத்தத்தை சோதிக்க வேண்டாம். ‘டென்ஷன்’ இருக்கும் போதும், சிறுநீர் கழிந்தவுடனேயும், ரத்த அழுத்தத்தை ‘செக்’ செய்து கொள்வதை தவிர்க்கவும்.

·        இரத்த அழுத்தத்தை எடுக்கும் போது கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்காருவது, முன் குனிவது இவற்றை தவிர்க்கவும்.

 உயர் ரத்த அழுத்தத்தால் வரும் பாதிப்புகள்

·        இதய நோய், ஹார்ட் அட்டாக்

·        இதயம் விரிவடைந்து வீங்குவது

·        இதயத்தின் வேலைப்பளு அதிகரிக்கும். எனவே இதயம் பாதிப்படையும்

·        இரத்த நாளங்கள் சுருங்கும்

·        சிறுநீரகம் பாதிக்கப்படும்

·        கண்கள் பாதிக்கப்படும்.

காரணங்கள்

ஆயுர்வேதத்தில் உயர் ரத்த அழுத்தம் “ரத்த கப விருத்தி” எனப்படுகிறது. மூன்று தோஷங்களின் (வாத, பித்த, கபம்) மாறுபட்டால் ஏற்படும். வாதப்பிரக்ருதிகளுக்கு, வாய்வுத்தொல்லை, நரம்புத்தளர்ச்சி, பரபரப்பு, தூக்கமின்மை, இவற்றால் ரத்த அழுத்தமும், நாடித்துடிப்பும் ஏறுமாறாகும். பித்தப்ரகிருதிகளுக்கு தலைவலி, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டுவது, சிவந்த கண்கள், எரிச்சல், கோபம் இருக்கும். கபப் பிரக்ருதிகளுக்கு, அதீத உடல் பருமன், சோம்பல், அதிக கொலஸ்ட்ரால் இருக்கும்.

·        ஸ்ட்ரெஸ், டென்ஷன், பரப்பரப்பான, விரைவான வாழ்க்கை நிலைகள்

·        புகைபிடித்தல், மது அருந்துதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல்

·        அதிக உடல் எடை (Obesity) இது ஒரு முக்கிய காரணம்

·        வளர்சிதை மாற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டால்

·        உணவில் அதிக உப்பை சேர்த்துக் கொள்வதால்

·        தவறான உணவு முறைகள், மசாலா உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகள்

·        ஹார்மோன் கோளாறுகள்

·        சில மருந்துகள் – குடும்ப கட்டுப்பாடு மருந்துகள்

·        ஸ்டீராய்ட்கள்

·        உடலுழைப்பு, உடற்பயிற்சியின்மை

அறிகுறிகள்

·        கழுத்து பின்பகுதி, கழுத்து இவற்றில் வலி

·        படபடப்பு, மூச்சுத்திணறல்

·        தலைவலி, எரிச்சல், கோபப்படுதல்

·        தலைசுற்றல்

·        அடிக்கடி சிறுநீர் கழிதல்

·        களைப்பு

சிகிச்சை முறைகள்

·        பாதாம் எண்ணெய்யில் ஒன்றிரண்டு அளவு எடுத்து, பாலில் சேர்த்து இரவில் படுக்கும் போது உட்கொள்ளவும்.

·        பூண்டு விழுதை மோருடன் கலக்கி ஒரு நாளுக்கு 2 வேளை குடிக்கலாம்

·        ஒரு தேக்கரண்டி வெங்காய ஜுஸுடன் தேன் சேர்த்து இரண்டு வேளை குடித்து வர, இரத்த அழுத்தம் சீராகும்.

·        நிலப்பூசணி (Ipomea digitata),  நிலைப்பனை (Curculigo orchioides) அமுக்கிராக்கிழங்கு (Withania somnifera) இவற்றுள் ஒன்றையோ, இரண்டையோ அல்லது மூன்றையுமோ சூர்ணம் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் 1/2 டீஸ்பூன் எடுத்து, சீனா கற்கண்டின் பொடியையும் சேர்த்து, தினமும் 2 வேளை சிறிது பாலுடன் உட்கொள்ளவும்.

உணவு / வாழ்க்கை முறை கட்டுப்பாடுகள்

·        உணவில் உப்பை குறைக்க வேண்டும். உப்பு நிறைந்த அப்பளம், ஊறுகாய், வறுவல்கள் இவற்றை தவிர்க்க வேண்டும். புளியையும் குறைக்கவும்.

·        குறைந்த கொழுப்பு, குறைந்த உப்பு உள்ள உணவுகள் உத்தமம். அவ்வாறே சர்க்கரையை குறைக்கவும்.

·        உகந்த உணவுகள்:- கோதுமை, அரிசி, ராகி, முளைகட்டிய தானியங்கள், கீரைகள், பச்சை காய்கறிகள், பருப்புகளில் பயத்தம்பருப்பு, ஆரஞ்ச், சாத்துக்குடி, திராளக்ஷப் பழங்கள், ஆப்பிள், வாழைப்பழம், நல்லெண்ணை, சூரியகாந்தி எண்ணை, மீன் போன்றவை.

·        தவிர்க்க வேண்டியவை:- வறுத்த, பொரித்த உணவுகள், வனஸ்பதி, உப்பு, நெய், வெண்ணை, ஊறுகாய், அப்பளம், வறுவல், பாம் ஆயில் (Palm oil) , தேங்காய் எண்ணை, மாமிச உணவுகள், சாக்லேட், கேக், ஐஸ்கிரீம், செயற்கை குளிர்பானங்கள்.

·        பட்டினி கிடக்க வேண்டாம்

·        இஞ்சி, பூண்டு, நெல்லிக்காய், எலுமிச்சம் பழம், தர்பூசணி, திராட்சைப்பழம் இவை உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். கருப்புத் திராட்சையை நன்கு கழுவி தோலுடன் உண்பது நல்லது. இதயத்தை காக்கும்.

·        புகைப்பது எல்லா வகைகளிலும் கெடுதி செய்யும். அதுவும் குறிப்பாக உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கவும். எனவே புகைப்பழக்கம் இருந்தால் உடனே நிறுத்தவும். மது அருந்துவதையும் கண்டிப்பாக நிறுத்தவும்.

·        பொட்டாசியம், கால்சியம் இவை உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பவை. பொட்டாசியம் பழங்கள், காய்கறிகளிலிருந்து கிடைக்கும். கால்சியம் பால் சார்ந்த உணவுகளில் ஒன்று.

·        யோகா, உடற்பயிற்சி, தியானம் இவைகளை செய்து வரவும். மனஉளைச்சல், டென்ஷன், மனச்சோர்வு, மனஅழுத்தம் இவற்றை போக்க, இந்த வழிகள் தான் சிறந்தவை.

·        மலச்சிக்கல், இருக்கக் கூடாது. வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

ஆன்டி – ஆக்ஸிடான்ட் (Anti – oxidant) உணவுகள் 

இந்த வகை உணவுகள் உடலை ஃப்ரீ ரேடிகள் (Free Radical) தாக்குதலிருந்து காப்பாற்றும். இவை

1.       விட்டமின் ‘இ’ உள்ள சோயாபீன்ஸ், சூரியகாந்தி மற்றும் தாவர எண்ணைகள், தானியங்கள், முளைகட்டிய கோதுமை, பாதாம் போன்ற பருப்புகள்

2.       விட்டமின் ‘சி’ உள்ள எலுமிச்சை, பப்பாளி, தக்காளி, ஸ்டிராபெர்ரி (Strawberry)

3.       துத்தநாகம் (Zinc) உள்ள கடல் உணவுகள்

4.       செலீனியம் (Selenium) உள்ள தானியங்கள், சூர்யகாந்தி விதைகள், காளான்கள், கடல் உணவுகள்.

5.       ஃபோலிக் அமிலம் -‘பி’ விட்டமின் – ஈரல், ஆரஞ்ச், பச்சைகாய்கறிகள், கீரை

6.       விட்டமின் பி-6 தானியங்கள்

7.       விட்டமின் பி -12- உருளைக்கிழங்கு, வாழைப்பழம், தானியங்கள்.

ஆயுர்வேத மூலிகைகள்

1.       சர்ப்ப கந்தி (Rauwolfia Serpentina)

இமயமலையில் அடிவாரத்தில் கிடைக்கும் ‘சர்ப்பகந்தி’ மூலிகை, ஆயுர்வேதத்தில் தொன்று தொட்டு, நரம்புத்தளர்ச்சி, உயர் இரத்த அழுத்தம் இவற்றை குணமாக்க உபயோகிக்கப்பட்டு வரும் மூலிகை. நாகப்பாம்பை கொன்றபின், கீரிப்பிள்ளை இந்த மூலிகையை உண்பதை கவனிக்கப்பட்டு, இந்த மூலிகை கண்டுபிடிக்கப்பட்து. இதில் ‘ரிசர்பைன்’ (Reserpine) என்ற அல்கலாய்ட்(Alkaloid) இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கில மருத்துவ முறையில், இந்த செடியின் வேரிலிருந்து ‘ரிசர்பைன்’ எடுக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் முழுவேரையே பொடி செய்து பயன்படுத்துவதால், பக்க விளைவுகள் குறைவு. இந்த மூலிகையை ஆயுர்வேத மேதைகளான சரகரும், சுஸ்ருதாவும் அறிந்திருந்தனர். 1703 ல். டாக்டர். லியோனோ ராவுல்ப்  (Dr. Leono Rauwolf) என்ற ஜெர்மானிய விஞ்ஞானி இந்த மூலிகையைப்பற்றி எழுதினார். அவர் பெயரே, இதன் தாவர இயல் பெயராக சூட்டப்பட்டது. இந்த மூலிகை இமயமலை, கிழக்கு, மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகிறது.

ஆயுர்வேதம் சொல்வது – சர்ப்ப கந்தி வேரை 10 கிராம் எடுத்து, 1400 மில்லி லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, 350 மில்லிலிட்டருக்கு சுருக்கி, கஷாயமாக செய்து கொண்டு, இதை அரை அவுன்ஸ் அளவில், தேன் சேர்த்து குடித்து வந்தால், கை கால் பிடிப்பு நீங்கும். தவிர மூளை, நரம்புகள் அமைதி அடையும்.

2.       ஜடமான்சி இது சர்ப்பகந்தி மூலிகையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

3.       அர்ஜுனா (Dr. Leono Rauwolf – மருது) இது மூலிகை இதயத்திற்கு மிகவும் நல்லது. நரம்பு முகவாய்களின் (receptors) அதீத செயல்பாடுகளை சீராக்குவதால், இதயத்தின் பளுவை குறைக்கும்.

4.       பிரம்மி, மூளை செல்கள், நரம்பு இவற்றை ஊக்குவிக்கும். இதயத்தை சாந்தப்படுத்தும்.

5.       சங்குபுஷ்பி (Evolvulus Alsinoids) இது அறிவை, ஞாபகசக்தியை விருத்தி செய்யும். நல்ல தூக்கத்தை தரும். இரத்த அழுத்தம், டென்ஷன், இவற்றை குறைக்கும்.

6.       அமுக்கிராகிழங்கு (அஸ்வகந்தா, Withania Somnifera)- இதன் உபயோகம் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். இதய தசைகளை வலுப்படுத்தும்.

7.       புஷ்கர் மூல் (Inula Racemosus) – இது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மூலிகை. கொலஸ்ட்ரால், ட்ரைகிளைசிரைட்ஸ் இவற்றை குறைக்கும்.

8.       திப்பிலி (Piper longum)- ஜீரண சக்தியை சீராக வைத்திருக்க உதவும். அஜீரணத்தை தடுப்பதால் இதயத்திற்கும் நல்லது.

9.       ரோஜா மலர் ரோஜா இதழ்கள், உயர்இரத்தத்தை குறைக்கும், ஆயுர்வேத மருந்துகளிர் சேர்க்கப்படுகின்றன.

10.     இஞ்சி கல்லீரலில், கொலஸ்ட்ரால் உற்பத்தியை சீராக வைக்க உதவும். இதனால் இதயம் சீராக இரத்த அழுத்தத்தை பராமரிக்கும்.

நீரிழிவு வியாதியை போல, உயர் இரத்த அழுத்தத்தை, முற்றிலும்

குணமாக்க இயலாது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ஆயுள் முழுவதும் மாத்திரைகள், மருந்துகளை உட்கொள்ள வேண்டும். ஆயுர்வேதம் இதற்கு உறுதுணையாக உதவும்.


Spread the love