உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பட

Spread the love

உயர் ரத்த அழுத்தம் தற்போது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. அதுவும் 40 வயதிற்கு மேற்பட்ட வர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இல்லை யென்றால் அது ஒரு அதிசயம் தான்!

உடலின் எல்லா பாகங்களும் இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும் போது ரத்த அழுத்தம் உண்டாகிறது. ரத்த அழுத்தம் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. காலையில் குறைவாகவும் மாலையில் அதிகமாகவும் இருக்கும். உறங்கும் போது குறைவாக இருக்கும். உடற்பயிற்சி செய்யும் போதும் கோபதாபங்களின் போதும் ரத்த அழுத்தம் தற்காலிகமாக அதிகரிக்கும்.

ரத்த அழுத்தத்தை அளக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய முறைகள்

ஒரு சில முன்னெச்சரிக்கைகளை அனுசரித்தால் உங்கள் இரத்த அழுத்த அளவு சரியாக அமையும்.

நீங்கள் சிகிச்சை பெறும் இடத்திற்கு அவசரமாகச் சென்றால், உங்கள் சுவாசம் சாதாரண நிலையை அடையும் வரை காத்திருந்து, பிறகு, உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடுங்கள்.

உணவு உட்கொண்டவுடன், உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்காதீர்கள்.

சிறுநீர் கழித்தவுடன், உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்காதீர்கள்.

நீங்கள் பதட்டமாக இருக்கும் போது, உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்காதீர்கள்.

மருத்துவரின் சிகிச்சை நிலையத்தில், நீங்கள் ஒரு உயரம் குறைந்த நாற்காலியிலோ, மேஜையிலோ அமர்ந்திருந்தால், உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்கும் போது, முன்பக்கமாகக் குனியாதீர்கள்.

உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்கும் போது, கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்காராதீர்கள்.

உயர் ரத்த அழுத்தம்

ஒரு நபருக்குத் தொடர்ந்து ஒரே நிலையில், 120/80 எம்.எம்.எச்.ஜிக்கு அதிகமாக இரத்த அழுத்தம் இருந்தால் அவர் உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறார் எனக் கூறலாம். மருத்துவர்கள் இதனை இரத்தக்கொதிப்பு என்று கூறுவார்கள்.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதின் அவசியம்

உயர் ரத்த அழுத்தம் குறைக்கப்படாவிட்டால் ஏற்படும் விளைவுகள்

     மாரடைப்பு

     இதயம் பெரிதாகி, பழுதாகிவிடும்

     இரத்தக்குழாய்கள் சிறுத்துப் போதல்

     சிறுநீரகம் பழுதாகும்

     கண்கள் பாதிக்கப்படும்

     ஆயுள் குறையும்

காரணங்கள்

பாரம்பரியம்

மனஅழுத்தம், டென்ஷன்

புகைப்பது, குடிப்பழக்கம்

அதிக உடல் எடை

பொட்டாசியம், கால்சியம் குறைபாடுகள்

உணவில் உப்பை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது

சிறுநீரக பாதிப்புகள்

ஹார்மோன் கோளாறு

ஸ்டீராய்ட் கருத்தடை மாத்திரைகள்

ஹார்மோன் கோளாறுகள்

உடற்பயிற்சி இல்லாமை

அறிகுறிகள்

தலைவலி, தலைசுற்றல், வேகமான இதயத்துடிப்பு, தூக்கமின்மை, உடல் உழைப்பின் பின்னர் மூச்சுத்திணறல், களைப்பு போன்றவை.

அபாய அறிவிப்பு

கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு காரணம் உங்களுக்கு இருந்தால் 6 மாதத்திற்கு ஓரு முறை இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளவும்.

நீங்கள் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால்

உங்கள் குடும்ப சரித்திரத்தில் இதய நோய்கள் இருந்தால்

நீங்கள் அதிக எடையுள்ள நபராக இருந்தால்

நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால்

நீங்கள் வழக்கமாக மதுபானம் அருந்துபவராக இருந்தால்

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவராக இருந்தால்

இருதய நோய், நீரிழிவு அல்லது சிறுநீரக பாதிப்பு போன்ற ஏதாவது பெரிய நோய்கள் உங்களுக்கு இருந்தால்.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த

இரத்த கொதிப்பை குணப்படுத்த முடியாது. ஆனால் மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றால் அதை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இதற்கான டிப்ஸ்

ஒழுங்காக மருந்தை உட்கொள்ளுங்கள்

பரிசோதனைக்காக ஒழுங்காக உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள்

உங்கள் உணவு முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள்

உடல் எடையைக் குறையுங்கள்

ஒழுங்காக உடற்பயிற்சி செய்யுங்கள்

உப்பு உட்கொள்வதைக் குறையுங்கள்

ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்

உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்

மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்

புகை பிடிப்பதை நிறுத்துங்கள்

மது அருந்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்

அதிக உடல் பருமன் (Obesity) அளவுக்கு அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்பு வரும் சாத்திய கூறுகள் 2 முதல் 6 மடங்கு அதிகமாகிறது. எடையை குறைக்க சில டிப்ஸ்

வறுத்த பொருட்கள், வெண்ணெய் போன்ற கொழுப்புப் பதார்த்தங்களைத் தவிருங்கள்.

நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள்.

ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, காரட், தக்காளி, முட்டைக்கோஸ், பீன்ஸ் முதலானவை நிறைந்த நார்ச்சத்துள்ள பொருட்களாகும்.

பசுமை இலையுள்ள காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை உண்ணுங்கள்.

சாப்பிடாமல் பட்டினியுடன் இருக்காதீர்கள்.

குறித்த நேரத்தில் உணவு உட்கொண்டு, உணவு முறைகளில் ஒரு ஒழுக்கத்தைக் கடைப் பிடியுங்கள்.

விரைவாக உண்பதைத் தவிருங்கள்.

ஒழுங்காக உடற்பயிற்சி செய்யுங்கள்.

சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

கோதுமை, அரிசி, ராகி (கேழ்வரகு), சோளம் போன்ற தானியங்கள், முளைவிட்ட பருப்புகள், மீன், பசுமை இலையுள்ள காய்கறிகள் மற்றும் பழ வகைகள், சூரிய காந்திப் பூ, விதை எண்ணெய், சோயா விதை எண்ணெய் போன்ற தாவர வகை எண்ணெய்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

எண்ணெய் பதார்த்தங்கள், பாலாடைக் கட்டி, வெண்ணெய், நெய், டால்டா, பாமாயில், வறுத்த உணவு வகைகள், வறுவல்கள், கோழி, மாமிச உணவுகள், ஊறுகாய், அப்பளம் மற்றும் சாஸ் வகைகள் மேலும் சாக்லேட் போன்ற இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம், கேக், குளிர்பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி மற்றும் யோகாவின் நன்மைகள்

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு, உடற்பயிற்சி உங்களுக்குப் பலவழிகளிலும் உதவி செய்யும்.

உங்களது அதிகரித்த இரத்த அழுத்தத்தை இது குறைக்க உதவுகிறது.

இது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து உங்களை ஒய்வாக உணரச் செய்கிறது

மாரடைப்பு, செயலிழப்பு போன்ற பெரிய சிக்கல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறது.

உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவது போன்ற அபாயத்தைக் குறைக்கிறது.

யோகாசனங்களும், (கை கால்கள்) விரித்துச் செய்யும் உடற்பயிற்சிகளும், தசைகளைத் தளர்த்துவதற்கு உதவி செய்கின்றன. ஒரு ஆசிரியரின் முன்னிலையில் இவ்வகை உடற்பயிற்சிகளைச் செய்தல் எப்பொழுதும் நல்லது. நடப்பது சிறந்த பயிற்சி. தினம் 1/2 மணியாவது நடக்க வேண்டும்.

உடற்பயிற்சி, யோகா செய்யும் முன்பு உங்கள் டாக்டரை கலந்தாலோசிப்பது நல்லது.

உணவு முறை  

உணவில் உப்பை குறைப்பது அவசியம். சோடியம் உப்புக்கு பதிலாக பொட்டாசியம் செறிந்த ஆரஞ்சு, வாழைப்பழம், உருளைக் கிழங்கு, பட்டாணி இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆன்டி ஆக்சிடன்ட் (Anti oxidant) உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆன்டி ஆக்சிடன்ட் என்பது நம் உடலை ஃப்ரீரேடிகல்ஸ்லிருந்து காப்பாற்றும்  பொருட்களைக் குறிக்கும் ஒரு சொல், ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த உணவை உண்பதால், ஃப்ரிரேடிகல்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கலாம்.

ஃப்ரீரேடிகல் என்பன, நாம் வேலை செய்யும் பொழுது, நமது உடலில் உற்பத்தியாகும் நச்சுப் பொருட்களாகும். இவை, நமது உடலின், உயிரணுக்களைத் தாக்கி அவற்றிற்கு கெடுதி விளைவிக்கின்றன. உயிர்சத்துக்கள் (வைட்டமின்கள்) மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் உபயோகிப்பதன் மூலம், இவற்றை நாம் எதிர் கொள்ளலாம்.

ஆன்டி ஆக்சிடன்ட் உணவுகள் – சோயாபீன்ஸ், சூரியகாந்தி எண்ணெய், ஆரஞ்சு, எலுமிச்சை வகைகள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, தானியங்கள், சூரியகாந்தி விதைகள், மாமிசம், கடலுணவுகள், நாய்க்குடைகள், கீரைகள், பசுமையான இலையுள்ள காய்கறிகள்.


Spread the love
error: Content is protected !!