மாதவிடாய் சீராக செம்பருத்திப் பூ

Spread the love

மூளைக்கும், இதயத்திற்கும் இதமானது செம்பரத்தை பூ. இதயம் சம்மந்தமான கோளாறுகளை தீர்க்க வல்லது. தமிழ் நாட்டில் வீடு தோறும் காணப்படும் செடி. கண் கவரும் வண்ணமும், அழகும் கொண்ட செம்பரத்தை பூக்களுக்காகவே வளர்க்கப்படும். இறைவனுக்கு அரிச்சிக்கப்படும் பூக்களில் ஒன்று செம்பரத்தம்.

இதன் தாவரவியல் பெயர் – Hibiscus rosa – sinensis family – Malvaceae இதர மொழிப் பெயர்கள் – சம்ஸ்கிருதம், ஜபா, ஜபகுசுமம், ருத்ர புஷ்பம், ஹிந்தி – ஜாஸீம், தெலுங்கு – மந்தாரா, கன்னடம் – தேசவலா, மலையாளம் – செம்பருத்தி, ஆங்கிலம் – Shoe flower, chinese Hibiscus.

தாவர விவரம்

சீனாவில் தோன்றியது செம்பரத்தை இப்பொழுது இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படுகிறது. பலவகைகள் – ஒற்றை, அடுக்கு செம்பரத்தம், சிகப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற வண்ணபூக்களுடன் – பயிரிடப்படுகின்றன. செடி 5 அடி முதல் 10 அடி உயரம் வளரும். இலைகள் பசுமையாக இரு புறங்களிலும் வெட்டப்பட்ட தோற்றத்துடன் இருக்கும். நீண்டு இருக்கும் பூக்களில், மகரந்தக் காம்பு, பூக்களின் வெளிவரை நீண்டு இருக்கும்.

எல்லா நிலங்களில் வளர்ந்தாலும், நன்கு உரமிட்ட, நீர் பாசனமுள்ள நிலங்களில் செம்பரத்தை சிறப்பாக வளரும். அது செடித்துண்டுகளை நட்டு பயிரிடப்படுகிறது.

பயன்படும் பாகங்கள்

இலை, பூ, வேர்.

பொது குணங்கள்

மலமிளக்கி, ஆண்மை பெருக்கி, குளிர்ச்சியுண்டாக்கும்.

செம்பரத்தை பூக்களில் ஈரப்பசை 89.8% நைட்ரஜன் 0.064% கொழுப்பு – 0.36%, நார் 1.56%, கால்சியம் 4.04%, பாஸ்பரஸ் 26.68%, மற்றும் இரும்பு 1.69 மி.கி (100 கிராமில்), தவிர தியானமன், ரிபோஃப்ளாவின் நியாசின் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் இவைகளும் உள்ளன. இவை பி காம்ளெக்ஸ் வைட்டமின்களாகும்.

பயன்கள்

இலைகளைவிட பூக்கள் நல்ல பலன்களை அளிக்கின்றன. மூளைக்கும் இதயத்திற்கு நல்ல ‘டானிக்’ செம்பரத்தை நான்கைந்து இலைகளை பறித்து கால் லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து குடித்துவர இதயம் வலுவடையும். மான்கொம்புவின் மருந்துடன், இந்த பூவின் கஷாயத்தை குடித்து வர இதயநோய்கள் நீங்கும். பூக்களின் கஷாயத்தை ஒரு நாளுக்கு இரண்டு வேளை சாப்பாடு கலந்து பருகி வந்தால் இதயத்தின் செயல்பாடு சீராகும்.

செம்பரத்தை வேர் இருமலை – கட்டுப்படுத்தும். பெண்களின் பெரும்பாடு – மாதவிடாய் போது ஏற்படும் அதிகரத்தப் போக்கை நிறுத்தும். நெய்யில் வறுத்த செம்பரத்தை பூக்களும் மாதவிடாய் அதிக உதிரப்போக்கை நிறுத்த கொடுக்கப்படுகின்றன.

செம்பரத்தை பூ கஷாயம் ரத்தச்சோகையை குணப்படுத்தும். தினமும் 2 வேளை 48 நாட்கள் குடிக்க வேண்டும். ரத்தம் ஊறும்.

கேரளத்தில் கருத்தடை மருந்தாக செம்பரத்தை பூக்களை, எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து பயன்படுத்துகின்றனர். செம்பரத்தை பூவின் கருத்தடை செயல்பாடு பற்றி எலிகளை வைத்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கிலோ எடைக்கு 250 மி.கி. என்ற அளவில் கொடுக்கப்பட்ட பூக்களின் சாறு பயனளிப்பதாக தெரியவந்துள்ளது. கேப்சூல் (மாத்திரை) ரூபத்திலும் ஒரு நாளுக்கு மொத்தம் 750 மி.கி. அளவில் மூன்று வேளை 21 பெண்மணிகளுக்கு கொடுக்கப்பட்டு, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு பெண் கூட கர்ப்பமடையவில்லை. தவிர உதிரப்போக்கு (மாதவிடாயின் போது) சீரடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. பூக்கள் அளவு செம்பரத்தை வேருக்கும், இலைகளுக்கும் கருத்தடை செயல்பாடு இல்லை. சீனாவில் இம்மரத்தின் பட்டை பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

தலை முடி வளர, ஆலிவ் எண்ணையுடன், செம்பரத்தை பூவின் சாறு சம அளவில் சேர்த்து காய்ச்சிப்பட்ட எண்ணை நல்ல பலன் தரும். செம்பரத்தை பூவின் சாற்றுக்கு ஒரளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறுதீயில், நீர் சுண்டும் வரை காய்ச்சி, காற்றுபுகாத குப்பியில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை தலையில் தடவி வர, மூளை குளிர்ச்சியடையும். முடி செழிப்பாக, கறுப்பாக வளரும், இந்த எண்ணெயில் பூவின் நிளமான காம்பையை சேர்த்துக் கொள்ளவும்.

இதன் வேருடன் ஆடாதோடை இலை சேர்த்து, தண்ணீருடன், இருமலுக்கு கொடுக்கலாம்.

பூவின் மகரந்தக் காம்பை மட்டும் எடுத்து தூள் செய்து வைத்துக் கொண்டு, தினமும் பாலுடன் இரவில் குடித்து வர, தாது பலம் பெருகும்.

மனநோய் மருந்துகளிலும் செம்பரத்தை சிறந்தது என்கிறார்கள். மூலிகை மருந்து நிபுணர்கள்.

செம்பருத்திப் பூ சர்பத்

தேவை

செம்பருத்தி இதழ்கள்- 3 கப்

சீனி- 1 கிலோ

தண்ணீர்- 3 லிட்டர்

பால்- 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சம் ஜுஸ்- 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

சீனியை தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். கொதிக்கும் பொழுது பாலை ஊற்றுவதால், சீனியிலுள்ள அழுக்குகள் ஓரத்தில் தங்கும். அடுப்பிலிருந்து சீனி சிரப்பை இறக்கி வடிகட்டி, எலுமிச்சம் ஜுஸ் சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கம்பிப் பதம் வரும் வரை அடுப்பில் வைக்கவும் வந்தவுடன் இறக்கி செம்பருத்தி இதழ்களை அதில் போட்டு உடனடியாக ஒரு மூடியைப் போட்டு அந்த பாத்திரத்தை மூடவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் வடிகட்டி சுத்தமான பாட்டிலில் ஊற்றி மூடவும். இதனை பிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் ஏழு நாட்கள் கெடாமல் இருக்கும். அதற்கும் மேலாக நன்றாக இருக்க 5 கிராம் SB  பவுடரை கரைத்து வைத்துக் கொள்ளலாம்.


Spread the love