‘செம்பருத்தி, செம்பருத்தி பூவப் போல பெண் ஒருத்தி…’ இது, அந்தக்கால திரைப்படப் பாடல். பெண்களை செம்பருத்திப்பூக்களுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இந்தப் பாடல் எழுதப்பட்டிருப்பதில் இருந்தே இதன் மகிமை உங்களுக்குத் தெரிந்திருக்கும். பெண்களை போன்று மென்மையானது, இந்த செம்பருத்தி பூ என்று மறைமுகமாக கூறியுள்ளார் இந்த கவிஞர்.
செம்பருத்தி… இதை செவ்வரத்தை என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். இது இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது. இதன் தாயகம் கிழக்கு ஆசியா; மலேசியாவின் தேசிய மலர். சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு.அதனால் தான் போலும் சீனா, இது எங்களுக்குச் சொந்தமானது என்று கூறுகிறது.
இது ஒரு புறமிருக்க, செம்பருத்தி என்பது வேறு, செம்பரத்தை என்பது வேறு என்ற தகவல் நம்மில் பலருக்கு தெரியாது. செம்பருத்தி என்பது பருத்தியில் ஒருவகை. அது இப்போது அழிந்து போய் விட்டது. செம்பரத்தை என்பதே இன்றைக்கு செம்பருத்தி என அழைக்கப்படுகிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்கபஸ்பம் என்று அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்தது இந்த செம்பருத்தி.
மிக முக்கியமாக இதயநோய்க்கு செம்பருத்திப்பூ நல்லதொரு மருந்தாகப் பயன்படுகிறது. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த பூக்களின் இதழ்களை மென்று தின்று வந்தால் காலப்போக்கில் இதய நோய் குணமாகும். வெறுமனே சாப்பிட பிடிக்காதவர்கள், செம்பருத்திப்பூவை ஜூஸ் செய்து குடிக்கலாம்.
4-5 செம்பருத்திப்பூக்களின் இதழ்களை எடுத்துக்கொண்டு அதனுடன் விதை நீக்கப்பட்ட ஒரு நெல்லிக்காய், இரண்டு ஈர்க்கு கறிவேப்பிலை, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு சிறிது இவை அனைத்தையும் சேர்த்து மையாக அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதில் தேன், நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.
செம்பருத்திப்பூவை மணப்பாகு செய்தும் சாப்பிடலாம். இதன் இதழ்களுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து வெயிலில் காய வைக்க வேண்டும். மாலையில் எடுத்து நன்றாகப் பிசைந்து மறுநாள் காலை முதல் மாலை வரை வெயிலில் வைத்து எடுத்து மீண்டும் பிசைந்து சாறு பிழிந்து, அதை அடுப்பில் வைத்து நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து நன்றாகக் காய்ச்சி இதை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நீர் சேர்த்துக் குடிக்கலாம்.