ஹெர்னியா வராமல் தடுக்கும் வழிகள்

Spread the love

ஹெர்னியா என்றால் என்ன?

ஹெர்னியா உடலில் பள்ளம், வெற்றிடம் அல்லது குறை இருப்பது, இந்த பலவீனமான பள்ளத்திலிருந்து உடல் அவயம் வெளியே கட்டிபோல் பிதுங்கி ஒரு வீக்கமாக புடைத்து காணப்படுவது. ஆண், பெண் இருவருக்குமே ஹெர்னியா வரும்.

ஹெர்னியா ஏன் உண்டாகின்றது?

இருமல், தொடர்ந்து இருமுவது, தசைகளை பலவீனப்படுத்தும்.

உடல் பருமன்

மலம் கழிக்கையில் முக்குவது

கர்ப்பமாவது

கனமான பொருட்களை முக்கி, முனகி தூக்குவது

தொடர் தும்மல்

சில அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு உதாரணம் கர்ப்பப்பை எடுத்த பிறகு

ஆண்களின் சுக்கிலவகம் (Prostate) வீக்கமடைவது

ஹெர்னியாவின் அறிகுறிகள் என்ன?

தோலில் கட்டி, வீக்கம் ஒரு பை போல வெளியே தொங்குவது. வலி அதுவும் எடையை தூக்கும் பொழுது, மல ஜலம் கழிக்கும் போதும் ஏற்படும். தீவிரமான ஹெர்னியாவில் அதிக வலி, சுரம், வாந்தி ஏற்படும்.

அடிவயிற்றில் அதிக வலி, வயிற்றை புரட்டுவது, ஹெர்னியா வீக்கம் சிவப்பது இவையெல்லாம் அறிகுறிகள். இவை தென்பட்டால் உடனடியாக டாக்டர் அல்லது ஆஸ்பத்திரிக்கு செல்லவும்.

ஹெர்னியா உடலில் எங்கு தாக்கும்?

ஹியாடஸ் ஹெர்னியா (Hiatus Hernia). இது மார்புப் பகுதியில் ஏற்படும். உணவுக் குழாய் வயிற்றுக்குள் நுழையும் இடத்தில் ஒரு சந்து (Hiatus) இருக்கிறது. இது பலவீனமடைந்தால், இதன் வழியாக வயிறு, மேலே ஏறி சந்தை ஆக்ரமிக்க, இது பெரிய வீக்கமாக வெளியே பிதுங்கியிருக்கும். இதனால் வயிற்றின் அமிலங்கள் மேலேறி, உணவுக் குழாயை பாதிக்கும். வலி, எரிச்சல் இவை ஏற்படும்.

அடிவயிறு ஹெர்னியா (Inguinal Hernia)

மனிதன் பிறந்தவுடன் அவனது விரைகள் அடிவயிற்றிலிருந்து இறங்கி, விதைப்பையில் இடங்கொள்ளும். அடிவயிற்றில் இதனால் விரைகள் இருந்த இடத்தில் காலி இடம் இருக்கும். இதனால் அடிவயிறு சுவற்றுகளில் பலவீனம் உண்டாகும். இதில் குடல், வயிற்று சுவர்களில் ஏற்பட்ட தளர்ச்சியுள்ள இடத்தின் வழியாக பிதுங்கி வீக்கமடையும். சில சமயங்களில் குடல் விரைப்பையையும் அடைந்து வீங்க வைக்கும். இந்த வகை ஹெர்னியா ஆண்களுக்கு அதிகமாக வரும். இந்த வகையில் புடைப்பும், வீக்கமும் பெரியதாக இருக்கும்.

மேல் வயிறு ஹெர்னியா (Epigastric Hernia)

மேல் வயிறு தசைகள் தளர்ச்சியடைந்தால் இந்த ஹெர்னியா உருவாகிறது. இதுவும் ஆண்களுக்குத்தான் அதிகம் வருகிறது. 20 லிருந்து 50 வயது இருப்பவர்களுக்கு ஏற்படும்.

தொப்பூழ் ஹெர்னியா (Umbilical Hernia)

வயிற்றின் அவயங்கள் தொப்பூழை தள்ளிக் கொண்டு, புடைத்து வந்து, தொப்பூழை வீக்கமடைய செய்யும். 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இது ஏற்படுகிறது.

வெட்டுப்பட்ட இடத்தில் ஹெர்னியா (Incisional Hernia)

ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் உண்டாகும் ஹெர்னியா, அறுவை சிகிச்சை நடந்த பல மாதங்களில் அல்லது பல வருடங்களுக்கு பிறகு இது வரலாம்.

தொடையில் ஹெர்னியா (Femorae Hernia)

அடிவயிற்றுக்கும், தொடைகளுக்கும் நடுவில் தொடையின் மேல் பாகத்தில் உருவாகும் ஹெர்னியா. பெண்களுக்கு அதிகம் ஏற்படும்.

ஹெர்னியாவுக்கு சிகிச்சைகள் என்ன?

ஆயுர்வேதத்தில் அனுவஸன் வஸ்தி, எண்ணெயுடன் மாமிசம் அரிசியுடன் சமைத்து 15 நாட்களுக்கு உண்பது.

மற்ற வைத்தியங்கள்

பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட துணியால் வீக்கமடைந்த பாகத்தை தூக்கி கட்டுவது. இதனால் புடைத்த பாகம் திரும்பி உள்ளே செல்ல வாய்ப்பிருக்கும். இவை சரியான தீர்வுகளல்ல. தேவை அறுவை சிகிச்சை தான்.

அறுவை சிகிச்சை

திறந்த அறுவை சிகிச்சை: – வீக்கத்தின் இடத்தில், 2 அல்லது 4 அங்குலம் அளவுக்கு வெட்டி, வீக்கத்தை உள்தள்ளி வெற்றிடத்தை சில பொருட்களால் அடைத்து பிறகு வெட்டிய இடம் தைக்கப்படும்.

லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை: – இந்த முறையில் சிறு துளைகள் தான் உடலில் போடப்படும். இந்த துளைகள் வாயாக டெலிஸ்கோப் (Telescops) மற்ற ஆயுதங்கள் இறக்கப்படும். இதை டி.வி.யில் பார்த்துக் கொண்டே, அறுவை மருத்துவர் புடைத்து கொண்டு இருக்கும் பாகத்தை உள்ளே தள்ளி மற்றும் தேவையான சிகிச்சையை கையாளுவார். இந்த முறையில் வலி குறைவு, விரைவான குணம், சீக்கிரமாக உடல் நிலை சரியாகும்.

ஹெர்னியா வராமல், அறுவை சிகிச்சைக்கு பிறகு திரும்பி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

அதிகமாக உண்ணுவதை தவிருங்கள். மசாலா உணவுகள், சீக்கிரம் செரிக்காத உணவுகள் இவை வேண்டாம். வயிற்றில் மூன்றின் ஒரு பங்கை காலியாக வைக்கவும்.

புகை பிடித்தல், குடி இவை கூடாது.

சாப்பிடவுடன் படுக்காதீர்கள்.

உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்து உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

அதிக எடை உள்ள பொருட்களை தூக்க வேண்டாம்.

மலச்சிக்கல், இருமல், சிறுநீர் தொற்றுநோய்கள் இவை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அளவான உடற்பயிற்சி, யோகா, டாக்டரின் யோசனைப்படி செய்யலாம்.


Spread the love
error: Content is protected !!