கலங்கடிக்கும் சர்க்கரை கைகொடுக்கும் மூலிகைகள்

Spread the love

சர்க்கரை நோயால் உலகம் முழுவதும், அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகிலேயே அதிக மக்கள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுபவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் இருக்கின்றனர். அதில் கிராமப்புறங்களில் வசிப்பவர்களை விட நகர்ப் புறங்களில் வசிப்பவர்களுக்குத் தான் சர்க்கரை நோய் அதிகளவு ஏற்படுகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற மக்களாக சர்க்கரை நோயில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சுமார் 45 சதவீதம் பேர் என மருத்துவ ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ஒருவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு அதன் பாதிப்பினால், அவரது இதயம், சிறுநீரகங்கள், கண்கள், கால்கள் என்று உடலின் முக்கிய பாதங்கள் அனைத்தும் வரிசையாக பிற்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயினைக் கண்டால் அனைவரும் பயம் கொள்கின்றனர்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

அதிகபசி எடுத்தல், அதிகதாகம் எடுத்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அசதி, சோர்வு, கால் மரத்துப்போதல், ஆறாத காயம் மற்றும் புண்கள், தொடர் தசை பிடிப்பு போன்ற காரணங்கள் சர்க்கரை நோயிற்கான பாதிப்பு தரும் அறிகுறிகளாக இருக்கும். தாய், தந்தை, தாய் அல்லது தந்தை யாரவது ஒருவருக்கு, தாத்தா, பாட்டி என்று யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தாலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் ஏற்படலாம்.

சர்க்கரை நோய் ஏற்படுவதற்குரிய காரணங்கள்

வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்புச் சத்து சேர்ந்து உடல் பருமனாக உள்ளவர்கள், அடிக்கடி குழந்தை பெறும் பெண்கள், எப்பொழுதும் பரபரப்பு மற்றும் மனஅழுத்தம் உடையவர்கள், உடல் உழைப்பில்லாதவர்கள், முதுமை, புகைப்பழக்கம், குடிப்பழக்கமும் சர்க்கரை நோய் ஏற்படக் காரணமாக உள்ளன.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சிறப்பான மூலிகைகள்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் ஒரு சில மூலிகைகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. அவை நாவல், ஆவாரை, சீந்தில், கடுக்காய், பருத்தி, நெல்லி, பாதிரி, வல்லாரை, கோவை மற்றும் புங்கம் மிகவும் பயன்படுகின்றன. இவைகள் மூலம் தயரிக்கப்படும் சூரணங்கள், கஷாயம், லேகியம் மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சைப் பெற்று வர முற்றிலும் குணம் பெறலாம்.

நாவல்

இந்தியா முழுவது நாவல் மரம் வளருகிறது. நாவலந்தீவு, சம்புத் தீவு என்ற பண்டையப் பெயர் இந்தியாவைத் தான் குறிக்கிறது. இதன் தாவரவியல் பெயர் ‘எயூக்னியா ஜம்போலனா’ என்பர். ஆங்கிலத்தில் ஜாம்பு, தெலுங்கில் நெரடு, கன்னடத்தில் நெரலு, மலையாளத்தில் நாவல், இந்தியில் ஜமுனா, சமஸ்கிருதத்தில் ஜம்புனா என்று அழைக்கப்படுகிறது.

நீரிழிவுக்கு மிகவும் பயன்படுவது நாவல் கொட்டை தான். நாவல் கொட்டைகளை சேகரித்து, வெயிலில் காய வைத்து உலர்ந்த பின்பு தோலை நீக்கி விட்டு உள்ளே உள்ள பருப்பை மட்டும் இடித்துப் பொடி செய்து சேகரித்து வைத்துக் கொள்ளவும். தினசரி காலை, மாலை என இருவேளையாக வேலைக்கு ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு நாவல் பொடியை எடுத்து தொடர்ச்சியாக சாப்பிட்டு வர வேண்டும். மலக்கட்டை உருவாக்கும் மருந்து இது.

நாவல் கொட்டையை அதிகமாக பயன்படுத்தினால் விஷமாக மாறிவிடும். மருத்துவப் பயன்பாடுகளுக்கு குறைவான அளவில் உபயோகிக்க வேண்டும்.

ஆவாரை

ஆவாரைப் பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டோ? தமிழ் நாட்டில் வழங்கப்படும் புகழ் பெற்ற மருத்துவப் பழமொழி. சர்க்கரை நோயிற்காக தயாரிக்கப்படும் சித்த, ஆயுர்வேத மருந்துகள் பலவற்றில் ஆவாரையும் சேர்க்கப்படுகிறது. குத்துச் செடியாக வளரும். இதன் தாவரவியல் பெயர் ‘கேஸ்ஸியா அயூரிகலடா’.

இதன் விதை குளிர்ச்சியை உண்டாக்கும். உடலுக்கு வலு தரும். ஆவாரம் பூவை உண்டு வர உடல் தங்கம் போல மிளிரும். ஆவாரம் பூவுடன் கீழா நெல்லி, கறிவேப்பிலை சேர்த்து மருந்தாக உண்ணும் பொழுது நீரிழிவைக் குறைக்கிறது.ஆங்கிலத்தில் THE JANNERS, தெலுங்கில் தங்கிடு, கன்னடத்தில் ஆவரகிடா, தங்கடி கிடா, சமஸ்கிருதத்தில் டெலபோடகம், இந்தியில் ஜார்வர் என்று ஆவாரை அழைக்கப்படுகிறது.

ஆவாரை, மஞ்சள், மருதம் பட்டை, நன்னாரி வேர், கொத்துமல்லி விதை, நாவல் மரப்பட்டை மற்றும் கொட்டை ஆகிய ஏழு பொருட்களையும் சம அளவு எடுத்து லேசாக இடித்துக் கொண்ட பின், அதில் 30 கிராம் அளவு மட்டும் எடுத்து 250 மி.லி. நீர் விட்டு நான்கில் ஒரு பங்கு வரும்படி சுண்டக்காய்ச்சி எடுத்து வடிகட்டி தினம் தோறும் காலை, மாலை இருவேளை அருந்தி வர சர்க்கரை நோய் குணமாகும். சிறுவர்களுக்கு பயன்படுத்தும் பொழுது 15 கிராம் அளவு எடுத்து நீர் விட்டுக் காய்ச்சி (4ல் ஒரு பங்காக) அருந்த கொடுக்கவும்.

சீந்தில்

கொடியாக படரும் தாவரம் இது. அதர்வண வேத காலத்திலேயே அறிந்து பயன்படுத்தப்பட்ட பழம்பெரும் மூலிகை இது. தண்ணீர் விடாமல் இடித்துப் பிழிந்து எடுக்கப்படும் சீந்தில் சாறு சர்க்கரைநோயிற்கு மிகச் சிறந்த மருந்தாகும். நீரிழிவின் காரணமாக ஏற்படுகிற நரம்பு சார்ந்த சிக்கல் தீர உதவுகிறது. நரம்பு சார்ந்த சிக்கல் என்பது காலில் மதமதப்பு, பாதத்தில் ஏதோ பூசியது போன்ற உணர்வு ஏற்படும்.

இதனை சீந்தில் சர்க்கரைச் சூரணம் மூலம் குணப்படுத்தலாம். நீரிழிவு நோயால் ஏற்படும் தாகம், எலும்புருக்கி, மதுமேகம், உடல் சூடு, ரத்த வாந்தி தீரும் என ஆயுர்வேத நூல் “சாரக சம்ஹிதை” கூறுகிறது. சீந்தில் தண்டிலிருந்து இடித்து எடுத்த சாற்றை அருந்துவதால் நீரிழிவு குணம் பெறுகிறது என்று கூறுகிறது. ஆங்கிலத்தில் ‘ஹார்ட் லீவ்ட் மூன் சீட்’ என்று கூறப்படும் சீந்தில் தெலுங்கில் டிப்பாதா, மலையாளத்தில் அம்ருதா, கன்னடத்தில் அம்ருத வல்லி, சமஸ்கிருதத்தில் குடிச்சி, இந்தியில் குல்பெல் என்று அழைக்கப்படுகிறது ‘கோக்குலஸ் கார்டிஃபோலியம்’ என்பது இதன் தாவரவியல் பெயராகும்.

சிறுகுறிஞ்சான்

இதுவும் கொடியாக படரும் தாவரமாகும். கசப்புச் சுவையாக, இலைச் சிறியதாகவும் இலைகளின் முனை மிளகாய் இலை போன்று கூர்மையுடையதாகவும் இருக்கும். சிறுகுறிஞ்சான் இலைகளில் உள்ள ‘ஜிம்னிக்’ அமிலமானது சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவில் உள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து, கணையத்தில் உள்ள செல்களை புத்துயிர் பெற செய்கிறது. இதன் மூலம் இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துகிறது.

சிறுகுறிஞ்சான் இலையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி இடித்து பின்னர் சல்லடை மூலம் சலித்து எடுக்கப்பட்ட பொடியை சேகரித்து வைத்துக் கொள்ளவும். மேற்கூறிய பொடியில் சிறிதளவு எடுத்து நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வர, சில மாதங்களுக்குப் பின்பு சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து குணம் பெறலாம். சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கும் சிறுகுறிஞ்சான் கீரை சாப்பிட்டு வரலாம். இதற்கு மேற்கூறிய கீரையை நன்கு அலசி சுத்தம் செய்து சின்ன வெங்காயம் சேர்த்து அவித்து சிறிது நேரம் அப்படியே ஊற வைத்தப் பின்பு வாரம் இருமுறை என சாப்பிட்டு வர சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.

பாகற்காய்

சர்க்கரை நோயாளிகள் தினந்தோறும் சாப்பிடக் கூடிய காய்களில் பாகற்காய் மிகச் சிறப்பான பரிந்துரையாக அமைந்துள்ளது. இதன் கசப்புத் தன்மை காரணமாக மக்கள் பொதுவாக அதிகம் பயன்படுத்துவதில்லை. பரம்பரை மருத்துவம் முதலே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற மருந்து பொருட்களை ஒரு குறிப்பிட்ட உடல்பாகம் அல்லது திசுப்பகுதிகளில் சிறப்பாக பலன் தரும்.

ஆனால், பாகற்காய் உணவில் பயன்படுத்தும் பொழுது, உடல் முழு பகுதிகளிலும் இரத்தச் சர்க்கரை வளர்சிதை மாற்றத்தில் மிகச் சிறப்பாகச் செயல் புரிந்து நீரிழிவு நோயாளிகளுக்கு பலன் தருகிறது. கணையம் பாதிக்கப்பட்டால் இன்சுலின் உற்பத்தி குறையும் அல்லது நின்று விடும். அப்போது தான் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. கணையம் செரிமானத்திற்கான என்ஸைமை சிறு குடலுக்கும், ஹார்மோன்களை இரத்தத்திற்கும் அனுப்பும். ஹார்மோன்கள் இன்சுலின் திசுக்களுக்கு குளுக்கோஸை கொண்டு செல்கிறது.

இந்த இன்சுலின் ஆனது சர்க்கரையை இரத்தத்தில் இருந்து முதுகெலும்புத் தசைகள் மற்றும் கொழுப்புத் திசுக்களுக்கு ஆற்றலை உற்பத்திச் செய்ய கடத்துகிறது. அதுபோல இரத்தத்தில் போதுமான அளவு சர்க்கரை இல்லையெனில் தான் சேமித்து வைத்திருக்கும் சர்க்கரையை கிளைக்கோஜனிலிருந்து உற்பத்திச் செய்து இரத்தத்திற்கு தருகிறது. டைப் ஒன்று சர்க்கரை வியாதியில் கணையமானது இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்வதில்லை. இவ்வகை நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் பயன் தருகிறது.

நெல்லி

பசுமையான நெல்லிக்காயை உட்கொள்ள அமிர்தத்திற்கு சமமான பலன் கிடைக்கும். இரண்டு ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி ஒரு நெல்லிக் காயில் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்காய் மூலம் சாஸ் தயாரித்து மேற்கூறிய வைட்டமின் சி’யை எளிதாக பெறலாம். அவர்களுக்கு உடல் வலுவாகும். சோர்வை போக்கி உற்சாகம் தரும். துருவிய நெல்லிக்காய் 100 கிராம், தேங்காய்த் துருவல் 100 கிராம், முந்திரிப் பருப்பு 50 கிராம், வெல்லப்பாகு தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

துருவிய நெல்லிக்காய், தேங்காய்த் துருவல், முந்திரிப் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து, சுவைக்கு ஏற்ப வெல்லப்பாகு கலந்து சப்பாத்தி, பிரட், ரொட்டி, சமோசா வகைகளுடன் பரிமாறலாம். நெல்லிக்காய் எலுமிச்சைச் சாறுடன் சிறிது தேன் கலந்து அருந்தி வர சர்க்கரை நோய் குணமாகும். தனியாக நெல்லிக்காய்ச் சூரணத்தையோ அல்லது ஆவாரை, மஞ்சள், அறுகு இவைகளுடன் சேர்த்து சூரணம் செய்து உண்டு வரவும். சர்க்கரை நோய் குணமாகும்.

வல்லாரை

வல்லாரை மூலிகைச் செடியானது, மிகவும் சிறிய படரும் கொடி வகையைச் சேர்ந்தது. ஈரமண் நிலத்தில் மட்டுமே வளரக் கூடியது. இந்திய மொழிகளில் வல்லாரை எவ்வாறு அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் மண்டூக பர்ணி, கன்னடத்தில் ஒண்டளேகா, பிராமி, மலையாளத்தில் சூடங்கள். இதன் அறிவியல் பெயர் ‘பேகோப மோன்னியெரி’. இந்திய பென்னிவொர்ட் என்று ஆங்கிலத்தில் வல்லாரை அழைக்கப்படுகிறது. வல்லாரை இலையை சுத்தம் செய்து, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பால் விட்டு, துணி கட்டி, அந்தத் துணியின் மேல் வல்லாரை இலையை வைத்து புட்டு போல அவித்து எடுத்து, அதை வெயிலில் நன்றாகக் காய வைத்து பொடி செய்து சல்லடை உதவி கொண்டு சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பொடுதலை இலையை வெயிலில் காய வைத்துப் பொடி செய்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு பொடிகளிலும் வகைக்கு 25 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து கொண்டு சேகரித்து வைத்துக் கொள்ளவும். மேற்கூறிய பொடியினை தினசரி காலை, மாலை இரு வேளையாக தொடர்ந்து நாற்பது நாட்கள் 5கிராம் அளவு பொடியை தேன் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோயும், சர்க்கரை நோய் சாரந்த இதர பிரச்சனைகளூம் குணமாகும்.

கடுக்காய்

கடுக்காய் உடலுக்கு வலிமை தந்து, முதுமை வரவொட்டாமல் செய்யும். காயகற்ப மூலிகைகளில் ஒன்று. இதன் சுவை துவர்ப்பு என்றாலும் இனிப்பு, புளிப்பு, கைப்பு, காரப்பு போன்ற சுவைகளையும் கொண்டுள்ளது. கடுக்காய் உடல் பருமனைக் குறைப்பதன் மூலம் நீரிழிவையும் பிட்யூட்டரியின் முறையற்ற சுரப்பையும் கட்டுப்படுத்துகிறதோ என்று யோசிக்கச் செய்கிறது. கடுக்காய், கருங்காலிப் பட்டை, நாவல் கொட்டை மற்றும் விடத்தலைக் கொட்டை ஒவ்வொன்றும் தலா 100 கிராம் எடுத்துக் கொண்டு நன்றாக இடித்து ஒரு மட்பாண்டத்தில் 16 படி நீர் விட்டு 5 நாட்கள் வரை ஊற விட வேண்டும்.

ஊறிய பின்பு 2படி வருமளவுக்கு சுண்டக் காய்ச்சி, இறக்கி ஆறவைத்து வடிகட்டிய பின்பு மீண்டும் சிறு தீயில் குழம்பு பதத்திற்கு காய்ச்சி இறக்கி சில நாட்கள் வைத்து விட கெட்டியாகி விடும். அதனை எடுத்து இடித்துப் பொடி செய்து, தினசரி ஒரு கிராம் அளவு எடுத்துக் கொண்டு,அதனுடன் 500 மி.கி. சீந்தில் சூரணம் சேர்த்து தினசரி இருவேளை தண்ணீர் கலந்து சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும்.

பருத்தி

(Gossypium Herbacaeum – Gossypium arboretum) என்ற தாவரவியல் பெயர்களைக் கொண்ட பருத்திச் செடியின் விதை காமம் பெருக்கி, கோழை அகற்றியாகும். ஆங்கிலத்தில் காட்டன் என்று அழைக்கப்படும் பருத்தி இந்தியில் கபாச், சமஸ்கிருதத்தில் கார்பாஸா, கன்னடத்தில் கட்டி, மலையாளத்தில் பரித்தி, தெலுங்கில் பிராட்டி என்று அழைக்கப்படுகிறது. பருத்தி விதைப்பாலும், சீந்தில் சாறும் கலந்ததை ஊற வைத்த வெந்தயத்தை வாயில் போட்டு மென்ற பின்பு அருந்தி வர, சர்க்கரை நோய் குறைகிறது.

முற்றிய சீந்தில் தண்டினை இடித்துப் பிழிந்த சாறு, பருத்தி விதையை ஆட்டிப் பிழிந்த பாலும் தலா 30 மி.லி. எடுத்துக் கொள்ளவும். இரவில் ஊற வைத்த முளை வெந்தயம் 10 கிராம் அளவு போதுமானது. தினசரி இதை செய்து கொள்ள இயலாதவர்கள், அரைக் கிலோ வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து முளை கட்டிதும், உலர்த்திக் காயவைத்து காயந்த பின்பு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெந்தய தூளைப் போட்டு அது மூழ்கும் அளவு சீந்தில் தண்டு சாறை விடவும். பாத்திரத்தின் மேல் பகுதியில் மெல்லிய துணி கொண்டு மூடி சாறு சுண்டும் வரை வெயிலில் வைத்து வரவும். சாறு சுண்டக் காய்ந்த பின்பு இதே போல, பருத்தி பாலையும் மூழ்க விட்டு முன்பு போல காயவைத்து வெந்தயத் தூளை மீண்டும் இடித்துச் சலித்து சேகரித்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய தூளை வேளைக்கு 2 கிராம் அளவு எடுத்து தினசரி காலை, மதியம், இரவு மூன்று வேளை உண்டு தண்ணீரை அருந்தி வரவும். இதன் மூலம் சர்க்கரை வியாதி குணமாகும். உடல் உற்சாகம் பெறும்.

பாதிரி

அறிவியல் பெயர் – Setreospermum Suaveolens துவர்ப்புச் சுவை கொண்டது. இதன் பூவிற்கு மதன காமேஸ்வரப் பூ என்று பெயர். பாதிரி மரத்தின் வேர் சர்க்கரை வியாதிக்கு மருந்தாகிறது. பாதிரி மரத்தின் வேரினை எடுத்து சுத்தம் செய்த பின் உலர வைத்து இடித்து சலித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். மேற்கூறிய பொடி ஒரு கிராம் அளவு சர்க்கரை வியாதியுள்ளவர்கள் சாப்பிடலாம். இந்த பொடியுடன், ஆவாரம்பட்டையை இடித்து மட்பாண்டத்தில் ஒரு லிட்டர் நீர் விட்டு 100 மி.லி. ஆகுமளவுக்குச் சுண்டக் காய்ச்சி, இறக்கி குளிர்விக்கவும்.

இந்தக் குடிநீரில் 50 மி.லி. அளவு எடுத்து சூரணத்தை கலந்து தினசரி காலை, மாலை இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வர கூடுதல் பலனைத் தரும். இதன் மூலம் சர்க்கரை வியாதி மட்டும் அல்லாமல் உடலில் ஏற்பட்டு இருக்கும் கரப்பான், ராஜபிளவை நோய்களும் தீரும். சர்க்கரை வியாதி காரணமாக கை, கால் நமநமத்துப் போன உணர்வு, ஆறாத புண்கள் ஆறுவதுடன், சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்கும்.

பா. முருகன்


Spread the love