மூலிகை பொக்கிஷம் பொடுதலை

Spread the love

தெரு ஓரங்களிலும் வயல் வரப்புகளிலும் நாம் அடிக்கடி காணுகின்ற ஒரு மூலிகை பொடுதலை ஆகும். இது கொடி  போல வளர்ந்து, படர்ந்து காணப்படும். தமிழகமெங்கும் ஈரப்பாங்கான நிலங்கள் வயல்கள், நீர் நிலைகளுக்கு அருகில் கரைகளில் பொடுதலை தானே வளர்கின்றது. களிமண் உள்ள ஆற்றங் கரையில் செழிப்பாக வளர்ந்திருப்பதைக் காண முடியும். கடற்கரை ஓரங்களில் மிகவும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும்.

இதற்கு பூற்சாம், பொறுதலை என வேறு பெயர்களும் உள்ளது.

பொடுதலை சிறுசெடி வகையைச் சார்ந்தது. தரையோடு படர்ந்து வளரும். பற்கள் கொண்ட சொர சொரப்பான கரண்டி வடிவ இலைகளையும், கதிரான பூங்கொத்துகளையும் உடையது.

பொடுதலை ஆண்டு முழுவதும் பூக்கள், காய்களுடன் காணப்படும். பொடுதலை மலர்கள் சிறியவை. கருஞ்சிவப்புடன் கூடிய வெண்ணிறமானவை. பிளவுபட்ட நாக்குப் போன்ற தோற்றம் உடையவை. இவை நன்கு முற்றிய பின் குழல் வடிவமாக மாறிவிடும் தன்மை கொண்டது.

இது பெரும் பாலும் பொடுகுக்கு மட்டுமே பயன்தரக்கூடியது என பலரும் நினைப்பதுண்டு, ஆனால் இது எண்ணற்ற உபயோகங்களைக்கொண்டது. இது பொடுகுக்கு ஒரு ஒப்பற்ற மருந்தாக திகழ்வதனால் தான் இதற்கு பொடுதலை என பெயர்வந்துள்ளது

பொடுதலை தெற்கு அமெரிக்காவை தாயகமாகக்கொண்டது. இது ஹிந்தியில் புக்கான் என்று அழைக்கப்படுகிறது.

இத்தாவரம் பொடுகு தவிர எண்ணற்ற உபயோகங்களைக்கொண்டது.

முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. பொடுதலை இலை, காய் ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.

இம்மூலிகை கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது, அதிலும் குறிப்பாக பாக்டீரியாக்களை அழிக்கவல்லது. இந்த குணத்தின் பயனாகத்தான் இது பொடுகுகளை அழிக்கும் திறன் பெற்றுள்ளது.

இது தவிர

பொடுதலை முழுத் தாவரமும் கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடையது. வெப்பத்தை உண்டாக்கக்கூடியது. பொடுதலை தாதுவை பலப்படுத்துகிறது, கோழையை அகற்றும் குணம் கொண்டது, உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும் குணமும் கொண்டது.

பொடுதலை வீக்கத்தைக் குறைக்கும்; சிறு நீரைப் பெருக்கும்; சீதக் கழிச்சல், இருமல், வெள்ளை படுதல் போன்றவற்றையும் குணமாக்கும் தன்மை கொண்டது.

ஒரு கைபிடியளவு பொடுதலை இலையுடன் 5 கிராம் அளவு சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு தயிர் அல்லது மோரில் கலந்து காலையில் 10 நாட்கள் குடிக்க வெள்ளைபடுதல் குணமாகும்.

பொடுதலை இலையை நெய்விட்டு வதக்கி மிளகு, சீரகம், உப்புச் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

குழந்தைகளில் கழிச்சல் குணமாக ஒரு கைப்பிடி அளவு பொடுதலை இலைகளை வதக்கி, 10 கிராம் அளவு வறுத்த ஓமத்துடன் சேர்த்து அரைத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டி 10 மிலி அளவு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உள்ளுக்கு கொடுக்கலாம். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 4 வேளை வரை கொடுக்கலாம்.

பொடுதலை இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்று போட கட்டிகள் உடையும்.

தலைக்கான சீயக்காய் மற்றும் கூந்தல் தைலங்களின் தயாரிப்பில் பொடுதலை முக்கிய இடம் பெறுகின்றது.


Spread the love