மூலிகை சூப் சாப்பிட்டால் நோய்க்கு ‘குட்பை’ சொல்லலாம்

Spread the love

அசைவமோ, சைவமோ எந்த ஓட்டலாக இருந்தாலும் முதலில் ஆர்டர் செய்வது சூப் தான். நாமாக ஆர்டர் செய்யாவிட்டாலும், சர்வரே கேட்டு விடுவார்.. ‘‘முதல்ல சூப் சொல்லட்டுமா சார்’’ என்று. ஓட்டல்களில் சாப்பிடும் செயற்கையான சூப்களால் செலவுதான் பிடிக்கும். உடல் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடையாது. ஆனால், வீட்டிலேயே மூலிகை சூப் செய்து சாப்பிட்டால், செலவும் அதிகம் இருக்காது. உடல் ஆரோக்கியத்துக்கம் கேரன்டி. முக்கியமாக அந்த சூப்பில் வீட்டு மனுஷர்களின் (அம்மாவோ, அப்பாவோ, பாட்டியோ, அண்ணனோ, அக்காவோ) பாசம் இருக்கும். சில மூலிகை சூப்களின் செய்முறைகளை பார்ப்போம்.

கீழாநெல்லி சூப்

தேவை

கீழாநெல்லி இலை -1கைப்பிடியளவு

துவரம்பருப்பு      – 1/2கப்

பச்சைமிளகாய்    -2

தக்காளி          -2

நெய்             -1/2டே.ஸ்பூன்

கடுகு             – 1டீஸ்பூன்

கறிவேப்பிலை    -சிறிதளவு

உப்பு             -தேவையானஅளவு

வெங்காயம்      -1

செய்முறை

பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பருப்பை நன்கு வேக வைக்கவும். பின்பு அதனை இறக்கி வைத்து அதில் தண்ணீர் சேர்த்துப் பருப்பை நன்றாகப் பிசைந்து கலக்கி விட வேண்டும். தக்காளியை நறுக்கி பருப்பு நீருடன் சேர்த்துக் கையால் பிசைந்து கீழா நெல்லி இலையைப் பொடியாக நறுக்கிப் போட்டு, பச்சை மிளகாயை நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். நன்கு கொதி வந்தவுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கடுகை நெய்யில் தாளித்து சூப்புடன் சேர்த்து இருபது நிமிடம் கொதிக்கச் செய்ய வேண்டும். வாசனை வந்ததும் இறக்கிப் பரிமாறலாம்.

திப்பிலி சூப்

தேவை

திப்பிலி           – 50கி

மிளகாய்வற்றல்   -4

மிளகு             -1/4டீஸ்பூன்

சீரகம்             -1/2டீஸ்பூன்

தனியா            -2டீஸ்பூன்

துவரம்பருப்பு      -3டீஸ்பூன்

கடுகு,பெருங்காயம்- தாளிக்க

புளி             – எலுமிச்சம்பழஅளவு

செய்முறை

மேற்கூறிய பொருட்களை எல்லாம் சிறிது நல்லெண்ணெய் விட்டு வறுத்து அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு எலுமிச்சை அளவு புளியைத் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்திருக்கும் விழுதை தண்ணீரில் கரைத்து கொதிக்கும் புளி நீரில் ஊற்றவும். பிறகு தாளிப்பு கரண்டியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சிறிது கடுகு, பெருங்காயம் போட்டு சூப்பில் ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

முடக்கத்தான் சூப்

தேவை

முடக்கத்தான்கீரை -1கப்

துவரம்பருப்பு      – 2டீஸ்பூன்

மிளகு             – 1டீஸ்பூன்

சீரகம்             -2டீஸ்பூன்

எண்ணெய்        -1டீஸ்பூன்

கடுகு             -1டீஸ்பூன்

மிளகாய்வற்றல்   -3

புளி              -எலுமிச்சைஅளவு

பெருங்காயம்     -சிறிதளவு

பூண்டு            -1

உப்பு             -தேவையான அளவு

செய்முறை

கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.

கரிசாலை சூப்

தேவை

கரிசாலை    -1கப்

(அ) பொடி    -3 டீஸ்பூன்

தண்ணீர்      -250மி.லி

வெங்காயம்   -1

தக்காளி       -1

பூண்டு        -2பல்

கறிவேப்பிலை -சிறிது

இஞ்சி         – சிறிது

மிளகுத்தூள், சீரகத்தூள் -சிறிது

உப்பு             -தேவையானஅளவு

எலுமிச்சம்சாறு  – 1டீஸ்பூன்

கொத்தமல்லி    -சிறிது

செய்முறை

தக்காளி, வெங்காயம் முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கரிசாலை இலைகளை அல்லது பொடியைப் போட்டு நீர்விட்டு சூடு படுத்தவும். கொதி நிலை வரும் சமயம் நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் எல்லாவற்றையும் காய்கறி அல்லது பருப்பு மத்தால் மசிக்கவும். தேவையான மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து சூடு ஆறு முன் வடிகட்டவும். உப்பு சேர்த்து எலுமிச்சைச் சாறு 5 சொட்டு விடலாம். சூடாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

துளசி சூப்

தேவை

துளசிஇலை           -1கப்

அல்லது துளசிப்பொடி -2டீஸ்பூன்

தண்ணீர்              – 250மி.லி

பீன்ஸ், காரட்         -1கப்(நறுக்கியது)

பூண்டு, இஞ்சி         -சிறிது

கொத்தமல்லி, புதினா  – சிறிது

கறிவேப்பிலை         – சிறிது

மிளகுத்தூள்,சீரகத்தூள் -சிறிது

உப்பு                  – தேவையானஅளவு

செய்முறை

பீன்ஸ், கேரட், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடிப் பொடியாக நறுக்கவும். துளசியை நீரில் கலந்து சூடு செய்து பிற பொருட்களையும் சேர்த்து வேக வைக்கவும். வெந்த பின் மசித்து வடிகட்டவும். தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

மேற்கண்ட சூப்களை ஒரே நாளில் செய்து சாப்பிட வேண்டும் என்றில்லை. ஒவ்வொன்றாக செய்து சாப்பிடலாம். அனைத்து சூப்களும் மருத்துவ குணம் மிக்கவை. சுவையாகவும் இருக்கும். சூப்பராகவும் இருக்கும்.


Spread the love
error: Content is protected !!