இதயம் காக்கும் மாங்காய் இஞ்சி, என்று விளங்கினாலும் இதற்கும் மாங்காய்க்கும், இஞ்சிக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது இது மஞ்சள் குடும்பத்தைச் சார்ந்த கிழங்கு வகை தாவரம் ஆகும். இது தாவரவியலில் Curcuma Amada எனவும் ஆங்கிலத்தில் Mango Ginger எனவும் அழைக்கப்படுகின்றது.
மாங்காய் இஞ்சி கிழங்குகள் இதயத்திற்கு இதமானவை மாங்காய் இஞ்சியில் உள்ள மூலப் பொருட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கக் கூடியவை. இரத்த நாளங்களில் படிந்துள்ள குறைவான அடர்த்தி கொண்ட கெட்ட கொழுப்பை வெளியேற்றக் கூடியது. எனவே இவை இதயத்திற்கு இதமானவை என கருதப்படுகின்றது.
மாங்காய் இஞ்சியை உணவில் வாரம் ஒரு முறை இரு முறை சேர்த்து வந்தால் இதயம் இதமாக காக்கப்படும். இதோ சில எளிய மாங்காய் இஞ்சி சமையல் முறைகள்.
மாங்காய் இஞ்சி
மாங்காய் இஞ்சி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
மாங்காய் இஞ்சி –100கிராம்
எலுமிச்சை –2
பச்சை மிளகாய் –4
உப்பு -தேவையான அளவு
மஞ்சள் பொடி -சிறிது.
செய்முறை
மாங்காய் இஞ்சியை தோல் சீவி வட்டம் வட்டமாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பின் எலுமிச்சையை பிழிந்து சாறெடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு நறுக்கிய மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு ஒரு நாள் ஊறியதும் சாப்பிடலாம்.
மாங்காய் இஞ்சி தொக்கு
தேவையான பொருட்கள்
மாங்காய் இஞ்சி –100கிராம்
எலுமிச்சை –1
மிளகாய்பொடி –11/2ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
நல்லெண்ணெய் –4டீஸ்பூன்
பெருங்காயம், கடுகு –சிறிது
செய்முறை
மாங்காய் இஞ்சியை தோல் சீவி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து, அதில் கடுகு, பெருங்காயம் போட்டு பொரிந்ததும், அரைத்து வைத்துள்ள மாங்காய் இஞ்சி விழுது, உப்பு, மிளகாய் பொடி, எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு கிளறவும். எண்ணெய் தனியாகப் பிரியும் போது இறக்கவும்.
மாங்காய் இஞ்சி சாதம்
தேவையான பொருட்கள்
மாங்காய் இஞ்சி –50கிராம்
சாதம் –2கப்
மஞ்சள் தூள் –1/2டீஸ்பூன்
பச்சை மிளகாய் –2
எலுமிச்சை சாறு –2டே.ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
தாளிக்க
கடுகு, உளுந்தம்பருப்பு -சிறிது
கறிவேப்பிலை -சிறிது
வறுத்து அரைக்க
உளுந்து –1டே.ஸ்பூன்
கடலைப் பருப்பு –1டே.ஸ்பூன்
தனியா –2டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் –2டே.ஸ்பூன்
மிளகாய் –4
எண்ணெய் -சிறிது
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து, கடலைப்பருப்பு, தனியா, மிளகாய், தேங்காய்த்துருவல் அனைத்தையும் வறுத்து அரைக்கவும்.
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மாங்காய் இஞ்சி (தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்) பச்சைமிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி கர கரப்பாக அரைக்கவும். சாதத்தில் அரைத்த விழுது, வறுத்த அரைத்த பொடி, உப்பு, எலுமிச்சம் சாறு கலந்து கிளறி, கடைசியில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கிளறவும்.
மாங்காய் இஞ்சி, சென்னா பச்சடி
தேவையான பொருட்கள்
சென்னா –1கப்
மங்காய் இஞ்சி –100கிராம்
பச்சைமிளகாய் –6
எண்ணெய் –1டே.ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு -சிறிது
புளி -சிறிதளவு
வெங்காயம் –1
தக்காளி –1
செய்முறை
சென்னாவை 12 மணி நேரம் ஊறவைத்து வேக வைத்துக் கொள்ளவும். மாங்காய் இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து பின் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி போட்டு வதக்கி பின் மாங்காய் இஞ்சி போட்டு சிறிது வதக்கி அதன் பின் வேகவைத்த சென்னாவையும் போட்டு உப்பு போட்டு வேக விடவும். நன்கு வெந்த பின் கடைசியாக புளிக் கரைசலையும் ஊற்றி கொதிக்கவும் இறக்கவும்.
இஞ்சிக் குழம்பு
தேவையான பொருட்கள்
இஞ்சி –50கிராம்
வெந்தயம் –1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் –50கிராம்
கடுகு –1டீஸ்பூன்
பெருங்காயம் -சிறிது
மஞ்சள் தூள் -சிறிது
புளி -எலுமிச்சையளவு
கறிவேப்பிலை -சிறிது
வெல்லம் -பாதி எலுமிச்சையளவு
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் –2டே.ஸ்பூன்
செய்முறை
இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும். ஒரு வாணலியில் எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, பெருங்காயம் தாளித்து பச்சைமிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கி, பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். அதில் மஞ்சள் தூள், உப்பு, வெந்தயப் பொடி போட்டு கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி இறக்கும் பதம் வந்தவுடன் வெல்லத்தை போட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும்.