தோட்டம் என்றாலே, பெரிய இடம் வேண்டும் என்று நினைக்க வேண்டாம். வீட்டு தோட்டத்திலும் செடிகளை அதிகமாகவே வளர்க்கலாம். அதிலும் மூலிகை செடிகளை வளர்த்தால், உணவிற்கும்,மருந்திற்கும் பயன்படுத்திகொள்ளலாம். கிள்ளி கிள்ளி எடுத்து சமைத்தாலும் நமது உடலிற்கு எந்த பக்க விளைவையும் தராது.
தூதுவளை, செம்மண் பகுதியில் மட்டும் மலை பாங்கான நீர் சூழ்ந்த இடத்தில் வளர்ந்து, படர்ந்து இருக்கும் சிறிய குத்துக்கொடி இனம்தான் தூதுவளை செடி. செம்மண்ணில் வளரக்கூடிய இந்த செடி,சுமாராக 10 அடி வரை படர்ந்து வளரும்.
இந்த செடிக்கு 3 க்கு 4 அடி நீளம் போதுமானது. இந்த செடிக்கான இடத்தில், நன்கு கொத்தி அதில் தண்ணீரை ஊற்றி ஒரு நாளைந்து நாளைக்கு ஆறப்போட்டு, பின் மக்கிய உரத்தை அந்த குழியில் போட்டு கிளறவும். தூதுவலையின் விதையை ஒரு இன்ச் ஆழத்தில் விதைத்து, அதற்கு மேல் மண்னை தூவி தண்ணீரை தெளித்து விட்டால், 10 , 15 நாளில் முளை விட்டு வளர ஆரம்பிக்கும். தூதுவளையை வளர்க்க இதில் இருக்கும் பழத்தின் விதைதான் பயனுள்ளதாக உள்ளது. இந்த கொடி படர்ந்து, விதை முளைக்கும் போதே சிறிய குச்சிகளை நட்டு வைத்தால், வசதியாக இருக்கும். தண்ணீர் பராமரிப்பில் நன்கு கவனம் செலுத்தி வந்தாலே கொடி நன்கு வளரும்.
அடுத்து பொன்னாங்கண்ணி, கிராமத்தில், வயல் வரப்பு நீர் சூழ்ந்த இடத்தில் அதிக அளவில் முளைத்து காணப்படும். இந்த கொடி, ஒன்றரை அடி தூரம் வரை தரையோடு ஒட்டி வளரும்.பொன்னங்கண்ணியின் இலை அரை இன்ச்சில் இருந்து ஒரு இன்ச் வரை இருக்கும். தண்டுகளின் அளவு சிறு சிறு குச்சி மாதிரி வளரும். இதன் பூக்கள் நெல் பொறி மாதிரி இருக்கும். சுமார் 3 அடி அகலமும், 4 அடி நீளமும் உள்ள தரை பகுதி மணலை நன்கு கொத்தி, அடி அழத்தில் சாணம், மக்கு என எரு போட்டு கிளறி மூடி விட்டு, ஒரு அடிக்கு ஒரு பொன்னாங்கன்னி கொடியை நடவேண்டும்.ஒரு கொத்தில் மூன்று கணு இருக்கின்ற மாதிரி நடவேண்டும். ஒரு கணு தரைக்கு உள்ளேயும், மற்ற இரண்டு கணுவும் தரையின் மேலேயும் இருக்க வேண்டும்.
ஒரு மாதத்திலேயே நன்கு செழித்து வளரும், கீரைக்கு வெறும் இலை தண்டு மட்டும் எடுத்துக்க வேண்டும். வேறுடன் பிடிங்கிவிடகூடாது.
அடுத்து துளசி, துளசியில் மொத்தம் 24 வகைகள் உள்ளது. இதில் கருந்துளசி தான் மிகவும் பயனுள்ளது. இதை பயிரிடுவது மிகவும் எளிமை. இரண்டிற்கும், இரண்டடி சதுர வடிவில் மண்ணை கொத்தி, மக்கிய எருவை போட்டு கிளறி விடவேண்டும். ஒரு இன்ச் ஆழத்தில் விதையை போட்டு மேலே மண்ணை தூவி, தண்ணீரை விட்டால் ஒரு வாரத்தில் அல்லது 10 நாளில் செடி முளை விட்டு வளர தொடங்கிவிடும். தண்ணீர் நன்கு விட விட செடி நன்கு வளரும்.
அடுத்து முடக்கத்தான், இதுவும் செம்மண்ணில் வளரக்கூடிய கொடிதான். இதன் இலை வேப்பிலை மாதிரி இருக்கும். இலையின் அடிப்பகுதி பெரிதாகவும், நுனிப்பகுதி சிறியதாகவும் இருக்கும். இதன் கொடியை அறுக்க அறுக்க நன்கு வளரும். இதையும் மற்ற செடியை போன்று மண்ணை கிளறி, எரு போட்டு இதன் விதையை நடலாம். அல்லது ஒரு சிறிய கன்றை பிடுங்கி நடலாம். கொடி துளிர் விடும் வரை தண்ணீர் ஊற்றினால் போதும். அதற்கு பின் தானாகவே வளரும். தண்ணீர் தொடர்ந்து ஊற்ற வேண்டும் என்பது அவசியம் இல்லை.
கொடி ஒரு குறிப்பிட்ட அடி வளர்ந்த பின் பக்கத்தில் ஒரு நீண்ட மூங்கில் குச்சியை நட்டால், கொடிபடர வசதியாக இருக்கும்.
அடுத்து வல்லாரை, புத்திக்கூர்மைக்கும், அறிவாற்றலுக்கும் சிறந்த மூலிகைகளில் ஒன்னு. தன்வந்தரி சித்தர், தனது சீடர்களுக்கு நினைவாற்றலையும், அறிவையும் வளர்க்க வல்லாரை சம்மந்தப்பட்ட மருந்துகளை செய்து கொடுத்துள்ளதாக பல நூல்கள் கூறுகின்றது. 3க்கு 3 அடி மண்வெட்டியால் கொத்தி, பசுந்தழைகள், எரு போட்டு நன்கு கெளரி மண்ணை மூடிவிட வேண்டும்.
பி அதை சுற்றி ஒரு வரப்பு கட்டி, அந்த பள்ளத்தில் தண்ணீரை தேங்க விட்டு, தண்ணீரை சுற்றி இருக்கும் வரப்பின் நடு பகுதியில் வல்லாரை கொடியை வரிசையாக நடவேண்டும். இரண்டு செடிக்கு நடுவில், சிறிது இடைவெளி விட்டுத்தான் செடியை நடவேண்டும். தண்ணீர் எப்போதும் பள்ளத்தில் தேங்கி இருப்பது அவசியம். 10 , 15 நாளில் செடி வேர் விட்டு வளர ஆரம்பிக்கும். தண்ணீர் அதிகமாக தேங்குகின்ற இடத்தில் இந்த கொடி பட்சபசேல் என்று வளரும். தேவைக்கு ஏற்ற மாதிரி இலைகளை மட்டும் பரிசிக்கலாம். கொடி அதிகமாக படர்ந்து வளர்ந்து விட்டால், அடிக்கடி கொடிகளை சேர்த்தும் பறிக்கலாம்.