பூஜைக்கு உகந்த மூலிகை மலர்கள்

Spread the love

நமக்கு மருந்து; இறைவனுக்கு மாலை

அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதன்மையானவராகக் கருதப்படும் ஞானசம்பந்தர் பூஜைக்கு பயன்படுத்தப்படும் மலர்களை நன் மாமலர் என்று விவரிக்கிறார். நன் மாமலர் என்பது பூச்சிகள் அரிக்கப்படாத, சேதப்படுத்தப்படாத, பறவைகள், பூச்சிகளால் எச்சம் இடப்படாத அதிகாலையில் பறிக்கப்பட்ட மலர்கள் ஆகும். இத்தகைய மலர்களை மட்டும் தான் இறைவனுக்கு பூஜையில் பயன்படுத்தப்பட வேண்டும். நாம் அன்றாடம் வளர்க்கும் மூலிகைச் செடிகளில் ஒரு சிலவற்றின் மலர்கள் நமக்கு மருந்தாகவும், இறைவனுக்குப் பூஜைப் பொருளாகவும் பயன்படுகிறது. மல்லிகை, முல்லை, பாரிஜாதம்,மயில் கொண்டை மலர்ச்செடிகளை, வில்வ மரச்செடிகளை பூஜைக்காக வளர்க்கிறோம்.

ஒரு குறிப்பிட்ட மலர்கள் அதாவது புன்னை, செண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவட்டை, அரளி, நீலோத்பலம் மற்றும் தாமரை மலர்களை அஷ்ட புஷ்பங்கள் என்று கூறப்படுகின்றன. இவற்றில் அரளி மற்றும நந்தியாவட்டை பொதுவாக வீடுகளில், கோயில் தோட்டங்களில், சாலையோரங்களில் வளர்க்கப்படுவதைக் காணலாம். பூஜைக்கு உகந்த மலர்கள், அதனை இறைவனுக்கு பயன்படுத்த வேண்டிய காலம் பற்றி ஆகமங்கள் மற்றும் புஷ்பவிதி என்னும் நூலும் விரிவாகக் கூறியுள்ளன.

மேற்கூறிய அஷ்ட புஷ்பங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

புன்னை:

சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலில் புன்னை மரம் ஸ்தல விருஷமாக இருக்கிறது. இங்குள்ள இறைவன், கபாலீஸ்வரர் புன்னை மரத்தின் நிழலில் அருள்பாலிக்கிறார். இப்புன்னை மரம் பசுமையான இலைகளையும், வெள்ளை நிறம் கொண்ட பூக்களையும் கொண்டது. கோடை காலத்தில் இம்மரத்தில் பூக்கள் அதிகமாக இருக்கும். இம்மரம் பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

செண்பகம்:

இம்மரத்தின் இலைகள் பசுமையாகவும் இருக்கும், நறுமணம் கமழும் பூக்கள் சித்திரை முதல் புரட்டாசி வரை பூக்கும். செண்பகாரண்யேசுவரர், செண்பக வல்லி என்று இறைவன், இறைவியை பெயரிட்டு வணங்குவர்.

வெள்ளெருக்கு:

சிறிய செடியாகத் தோன்றி குறுமரம் என்று கூறப்படும் அளவு வளரும் தன்மையுடையது. வெண்மை நிறம் கொண்ட பூக்கள். வருடத்தில் பெரும்பாலான மாதங்கள் பூ க்கும். எருக்கத்தம் புலியூர் என்ற சிவன் கோவிலில் ஸ்தல விருஷமாக அமைந்துள்ளது. வினாயருக்கும் மாலையாக அணிவிப்பது வழக்கம். வெள்ளெருக்கம் பூவும், நாகமும் சிவபெருமானின் சடையில் இருப்பதை தேவாரப் பாடலில் அப்பர் வெள்ளெருக்கு அரவும் விரவும் சட்டை என்று கூறிப் பாடுகிறார்.

நந்தியாவட்டை:

வருடம் முழுவதும் பூக்கும் மலர். வெண்மை நிறம் கொண்டது. மலர் மாலையாகவும், அர்ச்சனைப் பூ க்களாகவும் பயன்படுகிறது.

அரளி:

நந்தவனங்கள், வீடுகள், சாரை ஓரங்களில் அரளிச் செடி வளர்க்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் பூக்கக் கூடியது. மலர் மாலையாகவும் அர்ச்சனைப் பூக்களாகவும் பயன்படுகிறது.

நீலோத்பலம்:

இதனை குவளை என்றும் கூறுவார்கள். கண்களுக்கு இதை உதாரணம் காட்டுவார்கள். திருவாசகத்தில் அம்பாளை குவளைக் கண்ணி என்று கூறப்பட்டுன்ளது. திருவாரூர் நகரில் உள்ள அம்பாளுக்கு நீலோத்பலாம்பிகை என்று பெயர் உள்ளது. எப்பொழுதும் நீர் அதிகம் உள்ள இடங்களில் வளருகிறது.

தாமரை:

நீலோத்பலம் போல தாமரை மலரும் குளங்களிலும், நீர்நிலைகளிலும் வளரக்கூடிய மலர்களில் ஒன்றாகும். தாமரை மலரில் மகாலட்சுமி வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. திருவீழிமிழுலையில் சிவனுக்கு தாமரை மலரை வைத்து (ஆயிரம் மலர்கள்) பூஜை செய்து சக்கரம் பெற்றதாக புராணம் கூறுகிறது.

ஊமத்தை, மந்தாரை, மகிழம்பூ, பாரிஜாதம் போன்ற புஷ்பங்களைக் கொண்டும் இறைவனுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. எனினும் மேலே கூறப்பட்டுள்ள எட்டு மலர்களே மிக உயர்வாகக் கருதப்படுகின்றன. மேற்கூறிய மலர்கள் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்ய எல்லாப் பாவங்களும் நீங்கும் என்று தேவாரத்தில் அப்பர் சுவாமிகள் கூறியுள்ளார்.


Spread the love