மருதாணி பொடி

Spread the love

மருதாணி பொடி பயன்கள்

மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

மருதாணி பொடியை கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் நீங்கும்.

நரை முடி கருப்பாக பலதரப்பட்ட ஹேர் டைகளை வாங்கி உபயோகிப்பதை தவிர்த்து மருதாணி இலைகளை உபயோகிக்கலாம். இதனால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.

இயற்கை ஹேர் டை என்றாலே ஹென்னா என்று அழைக்கப்படும் மருதாணி இலை தான். இவை இல்லாமல் கூந்தலுக்கு நிறம் கொடுக்க முடியாது. மருதாணி கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகை எண்ணெய்களில் சேர்க்கப்படுகின்றது. மருதாணி பொடியானது இளநரை, பித்த நரை போன்றவற்றை நீக்கி நிறையின் தோற்றத்தை மறைத்து, கூந்தலுக்கு  பிரவுன் நிறத்தைக் கொடுக்கும் தன்மை உடையது.

மருதாணி பொடியினை  எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

மருதாணி பொடி பயன்படுத்தும் முறை

மருதாணி ஹேர் டை

நெல்லிக்காய் அளவு பீட்ரூட்டை சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து, அதனுடன் 2 டீஸ்பூன் டீ தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதனுடன் மருதாணி பவுடர் 3 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து ஊற விடவும்.

மறுநாள் காலையில் முடியின் வேர் பகுதி முதல் நுனி வரை வெள்ளை நிறம் உள்ள இடங்களில் தடவி 40 நிமிடங்கள் சென்ற பின் தலைக்கு குளிக்கவும். இதற்கு மைல்டான ஷாம்பு போதுமானது. ஒரு முறை பயன்படுத்தியதும் வெள்ளை நிற முடி வெளுத்த சிவப்பு நிறத்தில் மாறியிருப்பதைக் காணலாம்.

கெமிக்கல் கலந்த ஹேர் டை கலரிங் நம் முடிக்கு கறுப்பு நிறத்தை  கொடுக்கும். இருப்பினும் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆனால் இயற்கையான முறையில் எவ்வித பக்க விளைவுகளும் இன்றி முடியை கறுப்பாக்கலாம்.

மூலிகை ஹேர் டை

இள நரை முடிக்கு மருதாணி பொடி மிகச்சிறந்ததாகும். மருதாணி பொடியுடன், அவுரி பொடியும் சேர்த்து பயன்படுத்துவதால் இயற்கையாக கூந்தலுக்கு கருமை நிறம் கிடைக்கிறது. மருதாணி பொடியை நீரில் கரைத்து முடி முழுவதும் நன்கு தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் கூந்தலை நன்கு அலசவும். மறுநாள் காலையில் அவுரி பொடியை தண்ணீரில் கலந்து நரை முடி இருக்கும் பகுதி முழுவதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் கூந்தலை நன்கு அலசவும்.

இவற்றில் மருதாணி பொடியானது அடர் சிவப்பு நிறத்தையும் அவுரி பொடி நீல நிறத்தையும் கொடுப்பதால் கூந்தலானது அடர் கருமை நிறத்தில் மாறி இருப்பதைக் காணலாம்.

இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து ஒரு மாதம் வரை மட்டும் பயன்படுத்தி வந்தால் போதுமானது. கூந்தல் நிரந்தரமாக கருமை நிறத்தில் மாறி இருப்பதைக் காணலாம்.

அழகான கைகளுக்கு

நம் கைகளில் இடும் மருதாணி அடர் சிவப்பு நிறத்தில் காணப்பட மருதாணி பொடி பெரிதும் உதவுகிறது.

ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் டீ தூள் மற்றும் அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து 5 – 7 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தண்ணீரை எடுத்து வைக்கவும்.

இரண்டு டீஸ்பூன் மருதாணி பொடி, ஒரு டீஸ்பூன் சர்க்கரை இவற்றை  வடிகட்டி வைத்திருக்கும் டீ தண்ணீரை சேர்த்து சிறிது சிறிதாக கட்டி படாமல் விழுது பதத்தில் கலந்து கொள்ளவும். இக்கலவையுடன்  யூகலிப்டஸ் எண்ணெய்  10 சொட்டுகள் சேர்த்து  மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து 6 மணி நேரம் ஊற விடவும்.

இந்த மருதாணியை  கைகளில் இட்டு 15 நிமிடங்கள் சென்ற பின் கழுவலாம். நல்ல சிவப்பு வண்ணம் கைகளில் பிடித்திருப்பதைக் காணலாம். இதனை இரண்டு, மூன்று மணி நேரங்கள் உற வைப்பதால்  நல்ல அடர் சிவப்பு நிறம் பிடித்திருப்பதைக் காணலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love