தனிமை என்பது துன்பகரமானது. இது ஒரு சிலருக்கான பிரச்னை என்று நினைத்து விடாதீர்கள். உலகளாவிய பிரச்னை ஆகும். கூட்டுக் குடும்ப வாழ்க்கை கிராமங்களில் கூட அருகிப் போய்விட்டது. கூட்டுக் குடும்பமாக இருந்தபோது, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள.. பாசத்தைப் பொழிய தாத்தா, பாட்டி இருந்தார்கள். அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் பொருளாதாரத் தேவைக்காக ஆணும், பெண்ணும் அவசியம் வேலைக்குச் சென்றே தீர வேண்டிய கட்டாயம் இருப்பதால், குழந்தைகளை ‘காப்பகத்தில்’ (கிரெச்) கொண்டுபோய் விட்டு விடுகிறார்கள். அல்லது இரண்டரை மூன்று வயதிலேயே ப்ரீஸ்கூலில் சேர்த்து விடுகிறார்கள். இந்தக் காலக் குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு கிட்டுவதே இல்லை.
சென்னைப் போன்ற பெருநகரங்களில் நகர வாழ்க்கை ‘நரக’ வாழ்க்கையாக மாறிவிட்டது. குழந்தைகளை, குழந்தைகள் காப்பகத்தில் விட்டு விடுகிறார்கள் என்றால் பெற்றோர்களை முதியோர் காப்பகத்தில் கொண்டுபோய் தள்ளி விடுகிறார்கள். தனிக்குடித்தன வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தனித் தீவாகத்தான் உள்ளனர். சாப்பிடலாம்; ஒன்றாக தூங்கலாம்; கலவியிலும் ஈடுபடலாம். ஆனால், கூட்டுக் குடும்பத்தின் ஒருங்கிணைப்பு தனிக்குடித்தனத்தில் இல்லை.
இன்றைய கால கட்டத்தில் தனிக்குடித்தனம் என்பதும் தவிர்க்க இயலாததாகி விட்டது. வாடகைக்கு வீடு பிடிக்கச் செல்வதென்றால், வீட்டு சொந்தக்காரர்கள் கேட்கும் முதல் கேள்வி, ‘நீங்கள் எத்தனை பேர்?’ என்பதுதான். இரண்டு மூன்று பேருக்கு மேல் இருந்தால் வீடு தர மாட்டார்கள். பிறகு எப்படி பெற்றோர்களை, அவர்கள் தங்களுடன் வைத்துக் கொள்ள முடியும்?
நவீன வாழ்க்கையில், நன்றாக சம்பாதிப்பவர்களுக்கு வசதிகளுக்குக் குறைவில்லை. எல்லாமே வீட்டுக்குள் கிடைக்கும். ஆனால், பேசுவதற்கு ஆள்தான் கிடைக்காது. கணவன் & மனைவி மற்றும் ஓரிரு பிள்ளைகள்(பெரும்பாலும் ஆணோ, பெண்ணோ ஒரு குழந்தைதான்). ஓவ்வொருவருக்கும் அவரவரது வேலைகள். கம்ப்யூட்டர், டிவி, அல்லது செல்போன் என்று அவரவர் வாழ்க்கை இயந்திர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. சக மனிதர்களோடு சம்பாஷணை என்பதே இல்லாமல் போய்விட்டது.
தனிமை என்பது ஒரே மாதிரியானது அல்ல. அது ஆளுக்கு ஆள் மாறுபடும்.
கணவன் இறந்து விட்டிருப்பார். குழந்தைகளும் வெளிநாடு சென்றுவிட்டிருக்கும். நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் தனிமை ஒருவிதமானது. வகுப்பறை முழுவதும் சகமாணவர்கள் இருந்தாலும் அவர்களுடன் நட்புப் பெற முடியாத நிலையிலுள்ள பாடசாலை செல்லும் ஒரு பிள்ளையின் தனிமை வேறானது.
இன்னொரு விஷயம்.. தனிமையும் தனிமையுணர்வும் வேறு வேறானது. தனிமை என்பது வெறுமனே உடல் ரீதியாகத் தனித்திருத்தல் எனலாம். மாறாக தனிமையுணர்வு என்பது ஒரு மனநிலையாகும். சுற்றிவரப் பலர் இருக்கலாம்; இன்ட்ரஸ்டிங்கான பல விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், அவை எவற்றோடும் உளமாற ஒன்றுபடாத நிலையே தனிமை உணர்வு எனலாம். இதையே வேறு விதமாகச் சொன்னால், வெறுமை உணர்வு, சூழலிலிருந்து அந்நியப்பட்ட மனநிலை, அல்லது தனிமைப்பட்டதான உணர்வு எனலாம்.
தனிமையுணர்வு ஏற்படக் காரணங்கள் என்ன? என்னவென்று பார்த்தால், பாரம்பரிய அம்சங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பல குடும்பங்களில் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசுவதில்லை. மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி வாழும் பழக்கம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். சூழலில் ஏற்படும் மாற்றங்களும் இதற்கு காரணமாகின்றன. புதிய சூழலுக்கு இடம் மாறுதல் முக்கியமானது. சொந்த வீடு, சொந்த மக்கள், சொந்தப் பாஷை, சொந்த உறவுகள் என வாழ்ந்தவர்கள் திடீரென இடம் பெயர்ந்து வேறு இடத்துக்கு செல்லும்போது, தனிமையுணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. புதிய தொழிலில் இணையும்போதும் இந்த உணர்வு ஏற்படலாம்.
ஒரு சிலருக்கு சுற்றிவர நண்பர்கள், குடும்ப உறவினர் இருந்தும் தனிமையுணர்வு ஏற்படக் கூடும். அவர்களில் ஓரிருவராவது நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லாதபோதே தனிமை உணர்வு ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது. மணமுறிவு, விவாகரத்து, துணைவரின் மரணம் போன்ற குடும்பப் பிரிவுகள் தனிமையை ஏற்படுத்தவே செய்யும். நெருங்கிய நண்பரின், உறவினரின் பிரிவு,மரணம் போன்றவையும் அவ்வாறே தனிமை உணர்விற்குக் காரணமாகலாம். மனநோய்களும் தனிமை உணர்வுக்கு காரணமாகலாம்.
தனிமையாக உணரும் ஒருவருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நாம் உணராத அளவிற்கு பலவிதமாக அவை இருக்கலாம். இவை யாவும் நேரடியாக தனிமையுணர்வுடன் மட்டுமே தொடர்புடையன அல்ல என்றபோதும் மற்ற காரணங்களுடன் சேர்ந்து இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
தனிமை உணர்வு இருந்தால் மன அழுத்தம் அதிகரிக்கும். உணர்வுகளை மற்றவர்களுடன் பகர்ந்து கொள்ளாமல் தனக்குத் தானே போட்டு பிசைந்து கொண்டிருப்பதால் இந்நிலை வரக் கூடும். எரிச்சல், மன அமைதியின்மை, மனவிரக்தி போன்றவை வரலாம். அவை தீவிரமடைந்து தற்கொலை பற்றிய எண்ணங்களுக்கும் அடிப்படையாகலாம். தூக்கக் குறைபாடு ஏற்படலாம்.
மறதி அதிகரிக்கலாம். இதனால் கற்றல் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். சரியான தருணத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பதில் தாமதமும் சிரமங்களும் ஏற்படலாம். மது, போதைப் பொருட்கள், புகைத்தல் போன்றவற்றிற்கு இவர்கள் அடிமையாகும் சாத்தியம் அதிகம்.
இதை தடுப்பது எப்படி?
முதலாவதாக ஒருவர் தனக்கு தனிமை உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் தானே புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டால் அதை மாற்றுவதற்கு சிரமம் ஏற்படாது. தனிமையுணர்வால் தனது வாழ்க்கையில் என்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். பாதிப்புகள் மன நலம் சார்ந்ததாகவோ உடல் ஆரோக்கியம் கெடுவதாகவோ இருக்கலாம்.
உங்களோடு ஒத்த சிந்தனைகளும் உணர்வுகளும் உள்ளவர்களோடு உறவுகளை ஏற்படுத்துங்கள். ஏற்கனவே உள்ளவற்றை வலுப்படுத்துங்கள். உங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிராமல் மற்றவர்களது துன்பங்களையும் போதாமைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். அவர்களுக்கு உதவும் ஏதாவது சமூக சேவையில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மனம் விரிவடையும்.
நல்லது நடக்கும் என நம்புங்கள். மற்றவர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டோமே என்று நீங்கள் நினைத்தால் அந்த உணர்வு பாதிப்பை ஏற்படுத்தும். நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உடல் ரீதியான தனிமை தவிர்க்க முடியாதிருந்தால் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி வெறுமையிலிருந்து விடுபடுங்கள். ஆனால், அதற்கே அடிமையாகி விடாதீர்கள். சக மனிதர்களை நேசிக்க ஆரம்பியுங்கள். இந்த நேசம் உங்களுக்கும் திரும்பி வரும். நல்ல பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்துங்கள். பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அங்கு மற்றவர்கள் ஜாலியாக இருந்தால், அந்த சந்தோஷம் உங்களையும் தொற்றிக் கொள்ளும்.
ஒவ்வொருவருக்கும் சொர்க்க வாசல் திறந்திருக்கிறது என்பது உண்மை. உங்கள் செயல்பாடுகளே அதை நோக்கி உங்களை நகர வைக்கும். தனிமையும், தனிமையுணர்வும் உங்களை வசப்படுத்தியிருந்தால் வாழ்க்கையே நரகமாகிவிடும்.