மாற்று இருதய அறுவை சிகிச்சை

Spread the love

மனித உடல் நாள்தோறும் பல்வேறு காரணிகளால் பழுதடைகிறது. வாழ்வியல் சூழலாலும், புற மற்றும் அகக்காரணிகளும், சமூக மேம்பாடு என்ற காரணங்களாலும் மனித வாழ்வும், மனித உடலும் சோர்வடைகிறது. இன்றைய நவீன உலகத் தொழில்நுட்பங்களால் மனிதர்களின் வேலை நேரம் அதிகரித்ததுடன், வாழ்நாட்களை குறைத்து விடுகின்றன.

கற்கால மனித சமுதாயமானது காடுகளில் வேட்டையாடி, நீந்தி, குகை வாழ்க்கையுடன் மகிழ்ச்சியாக இருந்தது (இயற்கையாகவே உடலுக்குப் பயிற்சி கிடைத்தது) நவீன புரட்சி என்ற பெயரில் மனித இனம் ஒரு பக்கம் வேகமாக முன்னேற்றமடைந்து மறுபக்கத்தில் உடல், மற்றும் மனதால் மிகவும் அதிவிரைவாய் சோர்வுடன் விழுகிறது.

உதாரணமாக ஒரு கருவியோ, பொருளோ தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தால் நாளடைவில் அது  தேய்மானமடைந்து பழுதடைவது இயற்கை தான்.  அதுபோலவே தொடர் ஓட்டத்தின் காரணமாக மனித உடலின் உறுப்புகளும் தொடர்ந்து உழைத்துக் களைத்துவிடுகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி அம்மனிதனின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும்.

இதற்கு மாற்றுவழி தான் என்ன?

இன்றைய மருத்துவ உலகம் மனித உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை மூலம் நீடிக்கச் செய்கிறது. சில நாடுகள் முன்னேறிய வடிவில் தொடர்ந்து செய்து வெற்றி பெற்று வருகிறது.

இருதய மாற்று அறுவைச் சிகிச்சை பிறவற்றை விட மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மருத்துவர் வேணுகோபால் புது டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் பணி புரிந்து கொண்டிருந்தவர். அவர் 1994, ஆகஸ்ட்டு 3 தேதி 47 வயதுள்ள ஒரு நோயாளி (இதயத் தசைகளால் ஏற்படும் நோயான கார்டியோபதியால் பாதிப்படைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர் வேணுகோபால் அவருக்கு சிகிச்சையளித்ததுடன், மாற்று இருதய அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

புதுடெல்லி கிமிமிவிஷி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்த 35 வயதுடைய பெண்மணி மூளையில் ஏற்ப்பட்ட இரத்தப்போக்கினால் மரணமடைந்த தருணம் அவரது இருதயத்தை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து இருதய பலவீனமாக வந்த வேறொரு மனிதருக்கு அதை வெற்றிகரமாகப் பொருத்தி முடித்தார். இந்த நாள், 1994, ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்திய மருத்துவ உலகின் மிக  உன்னதமான நாளாகும்.

இதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக பல இருதய அறுவை சிகிச்சைகள் நாடுமுழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்றன. இதைப் போன்று மேலும் பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளையும் இந்தியா கண்டுள்ளது.  குறிப்பாக 1998 முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை டில்லியிலுள்ள அப்போலோ இந்திரபிரஸ்தா மருத்துவமனையில் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்களின் குழு சக்தி சஞ்சய் கந்தசாமி என்ற 18 மாத குழந்தைக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார்கள்.  இதுவே இந்தியாவின் முதல் கல்லீரம் மாற்று அறுவை சிகிச்சையாகும். ஆண்டு தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லீரம் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன.

நமது உடலுறுப்புகளில் மிகவும் நுண்ணியதும், முக்கியமானதும் சிறுநீரகமாகும். சிறுநீரகப் பிரச்சனை, கல்லடைப்பு என இதில் வரும் பல நோய்களால் பல லட்சம் மக்கள் பாதிப்பதை நாம் நாள்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இருதயம், கல்லீரம் வரிசையில் சிறுநீரகத்தையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்து முடித்த பெருமை வேலூரு கிருத்துவ மருத்துவ கல்லூரியைச் சேரும்.  1971 ஆம் ஆண்டில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நமது தமிழ்நாட்டிலுள்ள வேலூரில் நடத்தப்பட்டது நமக்கு பெருமை தரும் ஒன்றாகும்.

நமது உடலின் அனைத்து பாகங்களுமே நமக்கு மிகவும் முக்கியமானதாகும். அதிலும் மென்மையான கண்களும், விழிகளும் நமக்கு மிகவும் முக்கியமான பாகமாகும். நமது விழிப்படலத்தில் ஏற்படும் பாதிப்புகளால் கண்களில் பல நோய்கள் வரக்கூடும். இதற்கு மாற்று அறுவைச் சிகிச்சை தீர்வாகிறது. இதன் மூலம் கண்களின் விழிப்படலம் பாதிப்படைந்தோருக்கு மாற்று விழிகள் பொருத்தப்பட்டு சரி செய்யப்படுகிறது.

இவ்விழிப்படல மாற்று சிகிச்சை 1948 லேயே நடத்தப்பட்டது. இந்தியாவிலேயே முதல் கண் வங்கியை நிறுவிய பெருமை கொண்டவர் மருத்துவர் ஸி.ஷி. முத்தையா அவர்கள் அவரே முதல் முதலில் மாற்றுச் சிகிச்சையை மேற்கொண்டு வெற்றிபெற்றார். இப்படி இதயம், கல்லீரல் மற்றும் விழிப்படலம் என மனித உடலின் முக்கிய பாகங்களுடன் நம் சுவாச உறுப்பான நுரையீரலையும் மாற்று அறுவைச் சிகிச்சையின் மூலம் சிறப்பாக இயங்க வைக்கிறது மருத்துவம்.

சுவாச உறுப்பான நுரையீரலே காற்றிலுள்ள ஆக்ஸிஜனை நம் உடலுக்குத் தரும் முக்கிய உறுப்பாகும். இந்த நுரையீரல் பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. 1999 இல் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் மருத்துவர் கே.எம் செரியன் முதன் முதலில் மாற்று நுரையீரல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றுள்ளார். நவீன மாசுபட்ட சுற்றுச் சூழலால் நுரையீரல் தொடர் பாதிப்புகள் அடைகின்றன இது சற்று சிக்கலான தயக்கம் நிறைந்த சிகிச்சைதான். புறச் சூழலை மாசுபடுத்துவதுடன், மனிதன் தன் உடலையும் கெடுத்துக்கொள்வதால் தான் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை மனிதன் இன்னமும் உணரவில்லை என்பது தான் பரிதாபத்திற்குரியது.

இப்படி மாற்று அறுவை சிகிச்சைகளால் மனிதன் வாழ்நாளை அதிகரிக்கச் செய்ய மருத்துவர்கள்  உதவுகின்றனர். தன்னுடைய வாழ்நாளை கூட்டிக்கொள்ள விரும்பும் மனிதன் உலகின் (பூமியின்) வாழ்நாளையும் கூட்டுவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காமல், பொறுப்பில்லாமலும் நடந்துகொள்வது இன்னும் பல விதமான நோய்களை கூடுதலாக வருங்கால சந்ததியினருக்கு பரிசளிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.  இதை புரிந்துகொண்டு பொறுப்புடன் நடந்துகொண்டால் வருங்கால சந்ததியினருக்கு புதுப்புது நோய்கள் வராமல் தடுக்கும் வாய்ப்புண்டாகும். இப்பொழுதாவது நாம் நமது சுற்றுச்சூழல் மற்றும் வளமான சந்ததிகள் குறித்து சிறிது யோசித்துச் செயல்படுவோம்.           

                                                                ச. சுதர்ஸனா


Spread the love