இதயம் திறந்த மருத்துவம்

Spread the love

வளர்ந்த நாடுகளில் மட்டுமின்றி வளர்முக நாடுகளிலும் இதயத் தாக்கினால் மரிப்பவர்களின் எண்ணிக்கை அச்சுறுத்துகின்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. உயிர்க்கொல்லி நோய்களிலே முதல் இடத்தைப் பெறுகின்ற இதயத்தாக்கு (Heart Attack) வயதில் முதிர்ந்தவர்களை மட்டுமே மாய்ப்பதில்லை. எண்ணிறந்த இளம் வயதினரையும் இரக்கமின்றிக் காவு கொள்கிறது. இந்திய நாட்டினரும் இதற்கு விதி விலக்கல்ல.

மருத்துவ அறிவியல் முன்னேற்றங்களும் உயர் தொழில் நுட்பக் கருவிகளும் (Hi – tech instruments) நோயறியும் சாதனங்களும் இதயத் தாக்கின் பாதிப்பைப் பெருமளவில் குறைப்பதற்கு உதவி வருகின்றன. இதய அறுவை சிகிச்சை என்பது ஒரு நடைமுறை நிகழ்ச்சியாக ஆகிவருகிறது.

லண்டன் செஸ்ட் ஹாஸ்பிடல் ஆலோசகரும், புகழ் மிக்க லண்டன் கார்டியாலஜி இன்ஸ்டிடியூட் பேராசிரியருமான டாக்டர் ஜான் ரைட் அவர்கள் (Dr.John wright) இன்றைய இதய அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ முறைகள் பற்றிய நம்முடைய கேள்விகளுக்கு அளித்த விளக்கங்களைக் கீழே தந்திருக்கிறோம்.

உடல் நலம்

டாக்டர் ரைட் அவர்களே, இதயத்தினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உலகமெங்கும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது மெய்தானா அல்லது அது போன்ற ஒரு உணர்வு மட்டும் தானா?

டாக்டர் ரைட்

இரண்டும் சரிதான். ளுண்ணிக்கையை மட்டுமே கொண்டு பார்த்தால் இதயத்தாக்கு ஏற்படுவது உயர்ந்து வருகிறது என்பது உண்மை. ஆயினும் அதே வேளையில் அறிவியல் மருத்துவ முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் இறப்பு விகிதம் குறைந்து நீண்ட நாட்கள் வாழ்கின்றவர்களின் தொகை உயர்ந்துள்ளது. பிறநோய்களிலிருந்து காப்புப் பெற்று முதிர்ந்த நிலை எய்துகின்ற பலர், முடிவில் இதயத்தாக்கிற்கு ஆட்பட நேரிடுகிறது. இது இதயத் தாக்கின் எண்ணிக்கை உயர்ந்து விட்டது போன்ற உணர்வையைக் கொடுக்கிறது. எனவே இரண்டு கருத்துமே சரிதான்.

உடல் நலம்

இதயத் தாக்கு குறிப்பாக என்ன காரணத்தால் ஏற்படுகிறது என்று கூற முடியுமா?

டாக்டர் ரைட்

இதயத்தாக்கிற்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. முதன்மையான காரணம் பரம்பரைக் கூறு (Hereditary) குழந்தை பிறக்கும் போதே இதயத் தாக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற முத்திரை சிலருக்குக் குத்தப்பட்டு விடுகிறது. எனினும் நடுவயதை எட்டுகின்ற போது ஓரளவு முயன்று வாழ்க்கை முறை மாற்றங்களையும் கைக்கொண்டால் இதயத்தாக்கிலிருந்து தப்பமுடியும்.

இரண்டாவது தடுத்துக் கொள்ளக்கூடிய இடர் வரவுக் கூறு (Risk factor) உயர் இரத்த அழுத்தம், இதயத் தாக்கிற்கும், உயர் இரத்த அழுத்தத்திற்கும் வலுவான தொடர்பிருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் இதயத்தாக்கை விளைவிப்பதில் உணவு முறைகளும் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்கின்றன என்பதுவும் மறுக்கவியலாது. உணவில் கொழுப்பு மிகுகின்ற போது இதயத் தமனிகளில் (Coronary Artery) அடைப்பு (Clogging) ஏற்படுவதைத் தடுக்க முடியாது போய்விடுகிறது.

இந்தியர்களில் பெரும்பான்மையோர் சைவ உணவு (Vegetarian) உண்பவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இருந்தும் இந்த நாட்டினரிடையேயும் இதயத்தாக்கு மிகுதியிம் ஏற்படுகிறது என்றறிய வியப்பாயிருக்கிறது. சைய உணவில் கொழுப்பு குறைவாகத் தானே இருக்கும், இல்லையா?

உடல் நலம்

மேலை நாட்டினரைப் பொறுத்த வரையில் சைவ உணவு என்று குறிப்பிடும் போது காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றைப் பச்சையாக உண்பது அல்லது சிறிதளவு வேகவைத்து உண்பது என்றே பொருள் கொள்வதுடன் அதையே பின்பற்றுகின்றனர். ஆனால் இந்தியர்களது சைவ உணவில் கொழுப்பும், சர்க்கரையும், வாசனைப் பொருள்களும். உப்பும் மிகுந்திருக்கக் காணலாம். அத்துடன் பொறிப்பது, வதக்குவது, காய்ச்சுவது போன்று சமையல் முறைகளும் மாறுபடுகின்றன. இது பற்றி நெடுநேரம் பேசலாம்! இதயத்தாக்கிற்கு வேறு எவையெவற்றைக் காரணமாகக் கூறுகிறீர்கள்?

டாக்டர் ரைட்

புகைப் பழக்கம் இதயத் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி இதயத்தசைகளுக்கு இரத்தம் சரிவரக் கிடைக்க வொட்டாமல் செய்து விடுகிறது. இது தவிர மிகு ஆர்வமும், பதட்டமும், விரைவும் நிறைந்த வாழ்க்கை முறைகளும் இதயத்தாக்கு ஏற்படுத்துவதில் பங்கு கொள்கின்றன.

உடல் நலம்

பைபாஸ் சர்ஜரி (Bypass Surgery) என்றால் என்ன?

டாக்டர் ரைட்

இதயத் தசைகள் தமது இயக்கத்திற்குத் தேவையான இரத்தத்தைக் கரோனரி ஆர்ட்டரி (Coronary Artery) எனப்படும் இதயத் தமனிகளின் மூலமே பெறுகின்றன. இந்தத் தமனிகள் உள்விட்டம் குறுகியும் அடைபட்டும் போகின்ற போது இரத்த ஓட்டம் தடைப்பட்டு இதயத்தின் இயக்கம் நின்று போகும் நிலை ஏற்படுகிறது.

உங்கள் வீட்டில் தண்ணீர் வருகின்ற குழாய் அடைபட்டு விட்டால் நீர் வரத்து நின்று போய் விடுகிறதல்லவா? அதே போன்றதுதான் இதுவும். அடைபட்டு விட்ட குழாயை அப்படியே விட்டு விட்டு புதிய இரத்தக் குழாய் ஒன்றை இதயத்தில் பொருத்திக் கிளைவழி (Bypass) மூலம் இரத்தம் செல்ல ஏற்பாடு செய்யப்படுகின்ற சிகிச்சை முறையே பைபாஸ் சர்அளீ.

உடல் நலம்

இதயத் தமனி அறுவைச் சிகிச்சைகள் எத்தனை சதவிகிதம் வெற்றியடைகின்றன?

டாக்டர் ரைட்

பொதுப் படையாகச் சொன்னால் வேறு எந்தப் பெரிய அறுவை சிகிச்சையிலும் ஏற்படக்கூடிய அளவு இடர் வரவுக் கூறு தான் (Risk) இதிலும் இருக்கிறது. நவீன அறுவை சிகிச்சைகளில் 0,5 சதவிகிதமே உயிரிழப்பு ஏற்படுகிறது. பல நேரங்களில் பிற உறுப்பு அறுவைச் சிகிச்சைகளில் இதைவிட அதிக அளவில் உயிரிழப்பு நேர்வதுண்டு.

உடல் நலம்

சாதாரணமாக எத்தனை இதயத் தமனிகளைப் பைபாஸ் செய்யலாம்?

டாக்டர் ரைட்

தொடக்க நிலைகளில் பல அடைபட்ட தமனிகளை (Multiple Blocked Arteries) பை பாஸ் செய்யலாம். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இடர் வரவி கூறும் அதிகரிக்கக் கூடும்.

உடல் நலம்

இதய அறுவைச் சிகிச்சைக்கு ஆகின்ற செலவு மிக அதிகமாக உள்ளதே?

டாக்டர் ரைட்

ஆம், உண்டைதான். இன்றைய அளவில் இதைத் தவிர்க்க முடியவில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்ற கருவிகள் மற்றும் பிற சாதனங்கள் ஆகியவற்றின் விலையும் சிகிச்சைக்குப் பின் தேவைப்படுகின்ற சேவை வசதிகளும் மிகுந்த செலவை உண்டுபண்ணுகின்றன.

உடல் நலம்

ஒரு முறை இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டபின் மறுபடியும் இதயத்தாக்கு வர வாய்ப்பிருக்கிறதா?

டாக்டர் ரைட்

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு தமனியில் அடைபட்டுப் போன இரத்த ஓட்டத்தை வேறொரு கிளை வழியை (Bypass) ஏற்படுத்தி அதன் மூலம் நடைபெறச் செய்கிறோமே தவிர நோய்க்கான காரணத்தையோ அல்லது நோயின் போக்கையோ நாம் மாற்றுவதில்லை. எனவே இரண்டாவது தாக்கு (Second attack) நேர்வது என்பது பிற இதயத் தமனிகள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளன என்பதையே பொறுத்திருக்கிறது. பாதிப்பு கடுமையாக இருக்குமானால் மறுதாக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனினும் நல்ல முறையில் (By pass) சர்ஜரி செய்யப்படுவதுடன் அஞ்ஜியோகிராபி (Angiography) மூலம் வேறு பெரிய அடைப்புகள் இல்லையென்று உறுதி செய்யப்பட்டால் துயரருக்கு உடனடியாக அபாயம் எதுவும் நேர வாய்ப்பில்லை.

மறுபடியும் இங்கு நான் கூற விரும்புவது அறுவை சிகிச்சை, நோயின் மூலகாரணத்தைக் (Cause of the disease) குணப்படுத்துவதில்லை. எனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் நோய் கூறுகளை மேலும் தீவிரமடையச் செய்யக்கூடிய அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

உடல் நலம்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை எப்படி?

டாக்டர் ரைட்

இந்த சிகிச்சை உங்களை முற்றிலும் புதிய மனிதராக்கிவிடும். அச்சம், பிரமையும் மறைந்து புது வாழ்வு பெற்ற உணர்வு தோன்றும். ளுங்களது இயல்பான வாழ்க்கை வாழ முடியும். அதே நேரத்தில் மது அருந்துதல், புகைப்பழக்கம் ஆகியவற்றை முற்றிலும் நிறுத்துவதுடன், உயர் இரத்த அழுத்தம், மிகு எடை போன்றவைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மேலும் கொழுப்புக் குறைவான உணவினை உண்பதுடன் தேவையான அளவு உடற்பயிற்சிகளும் செய்து வர வேண்டும்.

உடல் நலம்

எந்த அளவு உடற்பயிற்சி செய்யலாம்? சைக்கிள் ஓட்டலாமா? டென்னிஸ் ஆடலாமா?

டாக்டர் ரைட்

அறுவை சிகிச்சைக்கு முன் எவ்வகை உடற்பயிற்சிகளுக்குப் பழக்கப்பட்டிருக்கிறீர்களோ அதைப் பொறுத்தும் வயதுக்கு ஏற்றவாறும் பயிற்சிகளை அமைத்துக் கொள்ளலாம். 50 வயதிலும் 60 வயதிலும் கால் பந்தாட்டமும் ஹாக்கியும் விளையாட முடியாது. மிதமான எந்தப் பயிற்சியையும் செய்யலாம்.

உடல் நலம்

அறுவை சிகிச்சை இன்றிச் சிறு பலூன் ஒன்றினை இதயத் தமனியுட் செலுத்தி அங்கு அதை உப்புமாறு செய்து தமனிகளை விரிவடையும் படி செய்யப்படுகின்ற பலூன் அஞ்ஜியோபிளாஸ்டி (Ballon Angioplasty) பற்றி உங்கள் கருத்து என்ன?

டாக்டர் ரைட்

செலவு அதிகமில்லாத, ஒரு சிறப்பான முறை இது. இதில் பல நன்மைகள் உள்ளன. இருப்பினும் அஞ்ஜியோபிளாஸ்டி மருத்துவ முறை இதய அறுவை சிகிச்சை முறையை இடம் பெயரச் (Replace) செய்ய முடியாது. ஒன்று அல்லது இரண்டு தமனிகள் மட்டுமே அடைபட்டிருக்கும் போதும், அறுவை சிகிச்சை செய்ய இயலாத நிலையிலும் அஞ்ஜியோபிளாஸ்டி மிகுந்த பயனுள்ளதாக அமையக்கூடும். ஆனால் அதிலுள்ள ஒரு பெரிய பிரச்சனை மறுதரவு (recurrence) ஆகும். அஞ்ஜியோபிளாஸ்டி செய்து கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு 6 மாதத்திற்குள் தமனிக் குறுக்கமும் அடைப்பும் திரும்பவும் ஏற்பட்டு விடுகிறது.

அதில் இன்னுமொரு அபாயமும் இருக்கிறது. இதயத் தமனியுள் இடம் பார்த்துப் பலூனைச் செலுத்தி அதை உப்ப வைக்கின்ற போது அதுவே ஒரு இதயத் தாக்கினைத் தோற்றுவித்து விடக்கூடும். எனவே இதில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. மேரும் உயிரிழப்பு என்பது இரண்டு முறைகளிலும் ஒரே அளவில்தான் ஏற்படுகிறது. எனவே துயரர்களின் நிலைக்கேற்ப இவ்விரண்டு முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

உடல் நலம்

இதயத் தாக்கு அபாயத்தை எவ்வாறு தவிர்க்கலாம்?

டாக்டர் ரைட்

கடுமையான கட்டுப்பாடுகளையும், உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைக் கைக்கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் அவற்றைப் பின்பற்றுவது எளிதல்ல. இருந்த போதிலும் ஓரளவு முயன்று மது அருந்துவதையும், புகைப்பதையும் தவிர்த்து விட வேண்டும். மற்றபடி உடல் எடை கூடாத வாறும், கொழுப்புச் சத்துக் குறைவாகவும் அவரவர்களுக்கு ஏற்ற உணவு முறையை வகுத்துக் கொள்ள வேண்டும். ஓரளவு ஓய்வும் உடற்பயிற்சியும் அவசியம்.

உடல் நலம்

இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள் பற்றி உங்கள் கருத்தென்ன?

டாக்டர் ரைட்

லட்சக் கணக்கானவர்களுக்கு இதயத் தமனி நோய் இருக்கிறது. இவர்களுக்குச் சரியான முறையில் நோயறிந்து மருத்துவம் செய்யப்பட வேண்டும். இந்த அறுவைச் சிகிச்சையில் தேர்ச்சி பெற்ற, உலக அளவில் மதிக்கப்படுகின்ற பல மருத்துவர்கள் இங்கு இருக்கிறார்கள். இங்கு இச்சிகிச்சைக்கான எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் மிகக்குறைவான சில இடங்களில் மட்டுமே உள்ளன. இந்த வசதிகள் நாடெங்கும் பரவலாக ஏற்பட்டால் எல்லோரும் பயனடைய முடியும்.


Spread the love