வளர்ந்த நாடுகளில் மட்டுமின்றி வளர்முக நாடுகளிலும் இதயத் தாக்கினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அச்சுறுத்துகின்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. உயிர்க்கொல்லி நோய்களிலே முதல் இடத்தைப் பெறுகின்ற இதயத்தாக்கு எனப்படும் வயதில் முதிர்ந்தவர்களை மட்டுமே தாக்குவதில்லை. எண்ணற்ற இளம் வயதினரையும் இரக்கமின்றிக் தாக்குகின்றது. இந்திய நாட்டினரும் இதற்கு விதி விலக்கல்ல.
மருத்துவ அறிவியல் முன்னேற்றங்களும் உயர் தொழில் நுட்பக் கருவிகளும் நோயறியும் சாதனங்களும் இதயத் தாக்கின் பாதிப்பைப் பெருமளவில் குறைப்பதற்கு உதவி வருகின்றன. இதய அறுவை சிகிச்சை என்பது ஒரு நடைமுறை நிகழ்ச்சியாக ஆகிவருகிறது.
லண்டன் செஸ்ட் ஹாஸ்பிடல் ஆலோசகரும், புகழ் மிக்க லண்டன் கார்டியாலஜி இன்ஸ்டிடியூட் பேராசிரியருமான டாக்டர் ஜான் ரைட் அவர்கள் (Dr.John wright) இன்றைய இதய அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ முறைகள் பற்றிய கேள்விகளுக்கு அளித்த விளக்கங்களையும் தவிர்ககும் வழிகள் பற்றியும் கீழே காணலாம்.
இதயத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உலகமெங்கும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது மெய்தானா அல்லது அது போன்ற ஒரு உணர்வு மட்டும் தானா?
இரண்டும் சரிதான். எண்ணிக்கையை மட்டுமே கொண்டு பார்த்தால் இதயத்தாக்கு ஏற்படுவது உயர்ந்து வருகிறது என்பது உண்மை. ஆயினும் அதே வேளையில் அறிவியல் மருத்துவ முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் இறப்பு விகிதம் குறைந்து நீண்ட நாட்கள் வாழ்கின்றவர்களின் தொகை உயர்ந்துள்ளது. பிறநோய்கள் பெற்று முதிர்ந்த நிலை எய்துகின்ற பலர், முடிவில் இதயத்தாக்கிற்கு ஆட்பட நேரிடுகிறது. இது இதயத் தாக்கின் எண்ணிக்கை உயர்ந்து விட்டது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. எனவே இரண்டு கருத்துமே சரிதான்.
இதயத் தாக்கு குறிப்பாக என்ன காரணத்தால் ஏற்படுகிறது என்று கூற முடியுமா?
இதயத்தாக்கிற்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. முதன்மையான காரணம் பரம்பரைக் கூறு (Hereditary) குழந்தை பிறக்கும் போதே இதயத் தாக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற முத்திரை சிலருக்குக் குத்தப்பட்டு விடுகிறது. எனினும் நடுவயதை எட்டுகின்ற போது ஓரளவு முயன்று வாழ்க்கை முறை மாற்றங்களையும் கைக்கொண்டால் இதயத்தாக்கிலிருந்து தப்பமுடியும்.
இரண்டாவது தடுத்துக் கொள்ளக்கூடிய கூறு எனும் Risk factor,உயர் இரத்த அழுத்தம், இதயத் தாக்கிற்கும், உயர் இரத்த அழுத்தத்திற்கும் வலுவான தொடர்பிருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் இதயத்தாக்கை விளைவிப்பதில் உணவு முறைகளும் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்கின்றன என்பதுவும் மறுக்கவியலாது. உணவில் கொழுப்பு மிகுகின்ற போது இதயத் தமனிகளில் (Coronary Artery) அடைப்பு (Clogging) ஏற்படுவதைத் தடுக்க முடியாது போய்விடுகிறது.
இந்தியர்களில் பெரும்பான்மையோர் சைவ உணவு (Vegetarian) உண்பவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இருந்தும் இந்த நாட்டினரிடையேயும் இதயத்தாக்கு மிகுதியாக ஏற்படுகிறது என்றறிய வியப்பாயிருக்கிறது. சைய உணவில் கொழுப்பு குறைவாகத் தானே இருக்கும், இல்லையா?
மேலை நாட்டினரைப் பொறுத்த வரையில் சைவ உணவு என்று குறிப்பிடும் போது காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றைப் பச்சையாக உண்பது அல்லது சிறிதளவு வேகவைத்து உண்பது என்றே பொருள் கொள்வதுடன் அதையே பின்பற்றுகின்றனர். ஆனால் இந்தியர்களது சைவ உணவில் கொழுப்பும், சர்க்கரையும், வாசனைப் பொருள்களும். உப்பும் மிகுந்திருக்கக் காணலாம். அத்துடன் பொறிப்பது, வதக்குவது, காய்ச்சுவது போன்று சமையல் முறைகளும் மாறுபடுகின்றன. இது பற்றி நெடுநேரம் பேசலாம்! இதயத்தாக்கிற்கு வேறு எவையெவற்றைக் காரணமாகக் கூறுகிறீர்கள்?
புகைப் பழக்கம் இதயத் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி இதயத்தசைகளுக்கு இரத்தம் சரிவரக் கிடைக்க விடாமல் செய்து விடுகிறது. இது தவிர அதிக ஆர்வமும், பதட்டமும், விரைவும் நிறைந்த வாழ்க்கை முறைகளும் இதயத்தாக்கு ஏற்படுத்துவதில் பங்கு கொள்கின்றன.