நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள். உடல் நலத்தோடு இருக்கிறீர்கள். இதற்கு மேல் நீங்கள் ஒரு பெண்ணாகவும் இருக்கிறீர்கள், எனவே இதயத்தாக்கு பற்றி நீங்கள் ஏன் சிந்திக்க வேண்டும்? கவலைப்பட வேண்டும்.
இவ்வாறு தான் பலகாலம் மக்களும் மருத்துவர்களும் எண்ணி வந்தார்கள். அந்த நம்பிக்கையில் இன்று விரிசல் கண்டிருக்கிறது. பெண்கள் உயிரைப் போக்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளன. அவர்களுக்கு இதயநோயின் கூறுபாடுகள் இருபது வயதுகளிலேயே தோன்றத் தொடங்கிவிடுகிறது என்பதற்கான சான்றுகள் நாள்தோறும் கூடிவருகின்றன. கீழ்க்காணும் செய்திகளை எண்ணிப்பாருங்கள்.
இறப்பில் முடிகின்ற இதயத்தாக்கு நோயினரில் பாதிப்பேர் பெண்கள்.
இதயத்தாக்கு ஏற்பட்டதும் இறந்து போகக்கூடிய கூறு ஆண்களைவிடப் பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாகவுள்ளது.
பத்தில் ஒரு பெண்ணுக்குத்தான் மார்பகப் புற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் மூன்றில் ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எல்லா வகையான புற்று நோய்களிலும் இறக்கும் பெண்களைப் போல் இரு மடங்கு பெண்கள் இதயத்தாக்கினால் இறக்கின்றனர்.
பொதுவாக மருத்துவர்கள் இதய நோய்களைப் பெண்களோடு இணைத்துச் சிந்திப்பதில்லை. இதன் காரணமாகவே அண்மையில் கி பி கி எனப்படும் American Heart Association பெண்களையும் அவர்களது மருத்துவர்களையும் இதுபற்றி எச்சரிக்கை செய்துள்ளது. அத்துடன் இதற்கெனவே மகளிர் இதய நோய் செயற்குழு ஒன்றினையும் அமைத்துள்ளது.
“இதய நோய்க்கான அறிகுறிகள் பெண்களிடம் தோன்றும் போது டாக்டர்கள் அதை ஒரு பொருட்டாக மதித்துச் சோதனைகள் செய்வதோ தொடர்ந்து கண்காணிப்பதோ இல்லை. நிலைமை முற்றிவிட்ட நிலையிலும் தேவையான அறுவை மருத்துவம் செய்ய முன் வருவதில்லை என்று லாஸ்ஏஞ்ஜல்ஸ் செடார் ஸினாய் மருத்துவ மையம் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் ஹார்ட் பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பெண்கள் வருவது அரிதாக உள்ளது என்றும் இவ்வாய்வு தெரிவிக்கிறது.
நடைமுறையில் இதய நோய்கள் பற்றி ஆராய்ச்சி முழுவதும் ஆண்களையே சுற்றிச் சுழல்கிறது. இதன் விளைவாக இதய நோயினால் பெண்களுக்கு நேருகின்ற இன்னல்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டன. பெண்களுக்கு ஏற்படுகின்ற இதயக் கோளாறுகளில் அக்கறை காட்டப்படாதது எதனால் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
“இதயத் தமனிக்கோளாறுகள் ஆண்களை விட வயது முதிர்ந்த நிலையிலேயே பெண்களுக்கு ஏற்படுவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்”. என்று கூறுகிறார் அமெரிக்க குடும்ப மருத்துவர்கள் அகாடமியைச் சேர்ந்த டாக்டர் டொனால்டு கீத். “பெண்களின் உடலில் சுரக்கின்ற எஸ்ட்ரோஜன் ஹார்மோன் நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் பிஞிலின் உற்பத்தியை உயர்த்தி உடலுக்குப் பாதுகாப்பளிக்கிறது. மாத விடாய் மறைகின்ற வேளையில் எஸ்ட்ரோஜன் சுரப்பில் ஏற்படுகின்ற வீழ்ச்சி அவர்களை இதய நோய்களுக்கு இலக்காக்கி விடுகிறது என்றும் இவர் கூறுகிறார்.
அறுபத்தைந்து வயதாகின்ற போது இதயத்தாக்கு ஏற்படும் வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவில்தான் இருக்கிறது. அறுபத்தைந்து வயதுதானே, அதற்கு இருக்கிறது இன்னும் நீண்ட நாட்கள் என்று நாம் மிதமாக இருந்து விடமுடியாது. இப்போது நீங்கள் வாழுகின்ற வாழ்க்கையைப் பொருத்தே அது எப்போது என்பது நிர்ணயிக்கப்படப் போகிறது.
மிகு எடை அபாயம்
பெண்களிடையே நிகழ்கின்ற இதயக் கோளாறுகளில் மூன்றில் ஒரு பங்கு மிகு எடை கொண்ட பெண்களுக்கே ஏற்படுகிறது. ஐந்தாறு கிலோ எடை கூட இருந்தாலும் அதற்கான தொல்லையை அது உண்டாக்கி விடுகிறது. பாஸ்டனிலுள்ள பெண்கள் மருத்துவமனையும் மெட்ரோபாலிடன் இன்ஷீரன்ஸ் நிறுவனமும் சேர்ந்து நடத்திய ஆய்வு ஒன்றில் தங்கள் தகு எடை Ideal Weight- லிருந்து 15 முதல் 80 சதவிகிதம் மிகு எடை கொண்டிருந்த பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களைவிட 80 சதவிகிதம் அதிகமாக இருந்தது அறியப்பட்டது.
CDC எனப்படும் Centre for Disease Control என்னும் நோய் தடுப்பு மையம் இளம் பெண்களுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது ஆண்களும் பெண்களும் தங்களது 25 வயது தொடங்கி 35 வயது வரையிலான கால இடைவெளியில்தான் அதிக அளவில் சதை போடுகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்களின் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஆண்களை விட இருமடங்கு அதிகமாக உள்ளது என்று இவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பணிபுரியும் பெண்கள்
பணி செய்கின்ற பெண்களுக்கு ஏற்படக்கூடிய இறுக்கமான சூழ்நிலையும், பணிசார் நெருக்கடியும் (Stress) அவர்களை எளிதாக நோய்களுக்கு ஆளாக்கி விடுகின்றன. தட்டச்சு மற்றும், எழுத்தர் பணியில் இருக்கும் பெண்கள் இல்லத்தை நிர்வகிக்கும் பெண்களை விட இருமடங்கு அதிகமாக இதய நோய்களுக்கு ஆட்படுகின்றனர். இவர்களைவிட எக்ஸிக்யூடிவ் எனப்படும் செயலாட்சிப் பொறுப்பிலிருக்கின்ற பெண்களும், அலுவலகம்/இல்லம் ஆகிய இரண்டையும் கண்காணிக்க வேண்டிய நிலையிலுள்ள பெண்களும் பல மடங்கு எளிதாக இதய நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்று கூறுகிறார் கலிபோர்னியா பல்கலை சார்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியரான டாக்டர் மார்கரேட் செஸ்னே.
இது பற்றி ஆய்வு செய்த ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கார் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் மேலாளர் நிலையில் பணி செய்த சில ஆண்களையும் பெண்களையும் மாலையில் பணி முடிந்து வீடு திரும்பியதும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது பணிமனைச் சூழலால் உயர்ந்த இரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் ஆண்களுக்கு மிக விரைவில் இயல்பு நிலையை அடைந்து விட்டன என்றும் பெண்களுடைய இரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் விரைந்து குறையவில்லை என்றும் கண்டறிந்தனர்.
பணிமனைச் சூழலிலிருந்து வீட்டுச்சூழலுக்கு மாறுவது என்பது ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறுவது போன்ற உணர்வைப் பெண்கள் பெறுவதே இதற்குக் காரணம் என்கிறார் டாக்டர் மார்கரெட்.
இளமையான இதயம் பெற என்ன வழி
இப்போதிருந்தே சில வாழ்க்கை முறை ஏற்படுத்திக் (Life Style Changes) கொண்டால் இதயம் தொடர்புடைய இன்னல்கள் பலவற்றைக் குறைத்து விடலாம். கொழுப்பையும், கொலஸ்ட்ராலையும் இயன்றளவு உணவிலிருந்து நீக்கி விடுங்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ரால் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள். வீட்டிலும், பணியிடங்களிலும் மன இறுக்கமும் பதட்டமும் இன்றி இயல்பாக இருங்கள். எளிமையான உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகள் செய்து வாருங்கள். உடற்பயிற்சி செய்து உடலைச் செயலோடு வைத்திருப்பவர்கள் இளமையுடன் மற்றவர்களைவிட அதிக நாட்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
எவராலும் எப்போதும் இளமையாக இருக்க முடியாது. ஆயினும் தேவையற்ற இடர்வரவு கூறுகளை (Risks) விலக்குவதன் மூலம் உங்கள் இதயத்தை என்றென்றைக்கும் இளமையாக வைத்துக் கொள்ளலாம்.
ஆயுர்வேதம்.காம்