சீரகத் தண்ணீர் குடிப்பதால் நாம் பெறும் முக்கியப் பயன் என்ன தெரியுமா? நம் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாத, பித்த, கபம் சம நிலைப்படுத்த இயலுகிறது. இம்மூன்றும் சமநிலையில் இல்லாத பொழுது தான் உடலானது நோயின் பிடியில் சிக்குகிறது. சீரகத் தண்ணீர் மூலம் நமது செரிமான உறுப்புகள் சீராக செயல்பட்டு செரிமான எளிதாக நடைபெறுகிறது. மேலும், நமது நாடு உஷ்ணப் பிரதேசமாக இருப்பதால், சீரகத் தண்ணீர் அதிகம் அருந்துவதால் நமது உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக காணப்படும்.
சீரக விதையில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு வரும் இரத்த சோகை எளிதில் குணமாக்க உதவுகிறது. மேற்கூறிய சீரகத் தண்ணீர் கேரள மாநிலத்தில் பிரபலமானது ஒவ்வொரு வீட்டிலும், உணவகங்களிலும் சாதாரணமாக குடிநீருக்கு பதிலாக சீரகத் தண்ணீரைத் தான் அருந்துவதற்கு வழங்குவார்கள்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் மேலே கொதிக்கும் பொழுது சீரகத்தை பாத்திரத்தில் சேர்த்து, மீண்டும் சுமார் 10 நிமிடங்கள வரை கொதிக்க வைக்க வேண்டும். அப்போது நீரானது மஞ்சள் நிறத்தில் மாறும் சமயத்தில் எடுத்து ஆற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதுதான் சீரகத் தண்ணீர். சீரகத்தில் பொட்டாசியம் சத்துள்ளதால் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. வளர்சிதை மாற்றத்திற்கு வலு சேர்க்கிறது.
மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாக பயன்படுகிறது. சீரகத் தண்ணீர் உடன் மஞ்சள் தூள் கலந்து குழப்பி, முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் மிருதுவாகவும், பளிச்செனவும் காணப்படும். தலை முடி உதிர்தல், முடி இழப்பை தவிர்ப்பதுடன் சீரக நீரானது தலை முடியின் வேர்கள் வளர்வதற்கும் உதவுகிறது.