தற்போதிருக்கிற சூழலில் குடும்ப உறவுகளுக்குள் இருக்கிற உறுப்பினர்கள், உரையாடுவதே அரிதான விஷயமாகி விட்டது. நவீன வாழ்க்கையில் ஆடம்பரமும், பொருளாதாரமும் முதலிடத்தைப் பிடித்து விட்டதால், அன்பும், உறவும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன. பெற்றோர்களில் இருவரும் வேலை, வேலை என்று ஓடுகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் அன்பை அள்ளிக் கொட்டுகின்றனர். குழந்தைகளும் பள்ளியில் படிப்பது சாதாரண விஷயமல்ல. ஸ்பெஷல் கிளாஸ், டான்ஸ் கிளாஸ், கராத்தே கிளாஸ் என்று விதவிதமான பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகள் சேர்த்து விடப்படுகின்றனர். அவர்களது நேரத்தை பயிற்சி வகுப்புகள் பறித்து விடுகின்றன. வாழ்க்கைக்கு தேவையான உறவைப் பேணும் கலை, அறிந்து கொள்ளாமல் போகிறது. இப்படி வாழ்வது எப்படி மனித வாழ்வாகும்.
உன்னத உறவுகளுக்கு மத்தியில் பேசி, சிரித்து, சின்னதாய் சண்டையிட்டு மீண்டும் சேர்ந்து வாழ்கின்ற வாழ்க்கையை இழந்து வருகிற நமக்கு உறவைப் பேணுவதற்கான குறிப்புகள் இங்கே.
1.நன்றி மந்திரம்.
உங்களுக்கு உதவி செய்த ஒருவருக்கோ அல்லது உங்களுக்கு வழிகாட்டிய ஒருவருக்கோ தேங்க்.யூ, என்று சொல்லியிருக்கிறீர்களா?
தேங்க்.யூ, என்ற வார்த்தை மாற்று எதுவும் இல்லை. ஒரு வாழ்த்து, ஒரு பரிசு, ஒரு பூர்த்தி, ஒரு உதவி என எதற்கும் நாம் நெஞ்சு நிறைய நன்றி சொல்லிப் பழக வேண்டும். எப்படிச் சொல்வது? நேரடி வார்த்தையை விட வெள்ளை அட்டையில் ஒற்றை வரியில் அந்த உதவியைக் குறிப்பிட்டு நன்றி சொல்வது சிறப்பான உணர்வுகளை ஏற்படுத்துவதாக குறிப்பிடுகிறார்கள்.
இனி சாதாரண தேங்க்.யூ, பயன்படாது என்கிறார்கள். காரணம் அதை சேஞ்ச் இருக்கா? என்பது போல பயன்படுத்தி செல்லாக்காசாக்கிவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஸோ. . நன்றியை அர்த்தத்தோடும், முழுமையோடும் சொல்லப் பழக ஆரம்பிப்போம்.
2.நோ சொல்லும் திறன்
வாழ்வின் மிக சவாலான கேள்வியும், சங்கடமான கேள்வியும் இதுதான். இதற்கு பதில் தெரியாமல் “ஸாரி” சொல்ல ஜால்சாப்புடன் நழுவிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கேள்விக்கு பதிலை நாம் ஒவ்வொருவிதமாக சொல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
நம்மில் பலர் நோ சொல்லத் தெரியாமல் யெஸ்ஸாகி நொந்து நூலாகிறோம். காரணம், நண்பர்களும், பாஸ்களும் யெஸ் பட்டனை மட்டுமே ஆனில் வைக்கச் சொல்கிறார்கள், பட்டும் படாமலும் சில வார்த்தைகளை சொல்லிப் பழகுங்கள்.
3.இரவில் கதை சொல்லும் இனிமை
வரும் காலத்தின் சவாலான கேள்விகளில் இது ஒன்று என்கிறார்கள் நிபுணர்கள். பொய்யும் துரோகமும் தோற்கிற கதைகள் தான் இப்போதும் நம் குழந்தைகளுக்குச் சொல்கிறோம். நாம் பத்து வயதில் கேட்காத கேள்விகளை இரண்டு வயதில் கேட்டு வியப்படைய வைக்கிறார்கள். இந்த பெட் டைம் ஸ்டோரிகளில் பயன்படுத்த வேண்டியது இரண்டே இரண்டு தான். ஒன்று கதையின் தலைப்பை குழந்தையிடமே கேட்டு வைத்துக் கொள்ளுங்கள். தான் வைத்த தலைப்பு என்பதால், குழந்தை கவனக் குவிப்புடன் கதை கேட்கத் தொடங்கும்.
இரண்டாவது, கதை எங்காவது ஸ்ட்ரக் ஆகி விட்டால், அப்போது ‘ரெண்டு பேர் கையில துப்பாக்கியோட கதவுகிட்ட வந்து நின்னாங்க’ என்று நிறுத்தச் சொல்கிறார். அந்த அதிர்ச்சியும் சஸ்பென்சும், சுவாரசியத்தை கொண்டு வந்து விடுமாம். அப்புறம் நீங்கள் யோசிச்சவுடன் “டோர் நம்பர் தப்புன்னு கிளம்பிப் போயிட்டாங்க” என்று சமாளித்து விடலாம். இது ரேமண்ட் சான்ட்லர் சொல்லும் அட்வைஸ்.
4.ஆறுதல் வார்த்தை சொல்லுதல்.
நம்மை சுற்றியிருக்கிறவர்கள் துக்கம், தோல்வி போன்ற காரணங்களால் துவண்டு போயிருக்கும் நேரத்தில், ஆறுதல் வார்த்தைகள் தான் அருமருந்து. நாம் நிஜமாகவே ஒருவரை இழந்து நிற்கிறவர்களுக்கு ஆறுதல் சொல்வதில் அவ்வளவு சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக நிபுணர்கள் தவிர்க்கச் சொல்கிற வார்த்தை பிரயோகங்களைத் தான் நாம் அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது தெரிய வரும்போது சற்று கவலையாக இருக்கிறது. கவனியுங்கள்.
1. வேற நல்ல ஹாஸ்பிட்டல்ல வச்சிருந்திருக்கலாமே
2. கடவுள் கூப்பிட்டுக்கிட்டார் என்ன பண்றது?
3. பரவாயில்லை இருந்து கஷ்டப்படறதுக்கு போனதே நல்லது.
மு. அழகர் பாரதி.