அடிப் படை தத்துவம், மூன்று தோஷங்கள்

Spread the love

ஆயுர்வேதத்தின் அடிப் படை தத்துவம் மூன்று தோஷங்கள். மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைத்தால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். ஒன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதீத உடல் எடையும் குறையும். அதீத உடல் எடை குறைந்து உடல் வனப்பாகவும், வலிவாகவும் இருக்கும். இந்த மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலையில் வைக்க சில ஆயுர்வேத உணவுகள் உதவுகின்றன. அவை சமைத்த ஓட்ஸ், சப்பாத்திகள், கிச்சடி, பயத்தம் பருப்பு சூப், சுரைக்காய் ஸ்குவாஷ், பச்சை இலை காய்கறிகள், வேக வைத்த பழம், லஸ்ஸி, இஞ்சி + எலுமிச்சம் பழம் பானம், மசாலா டீ, மசாலா பால், மாதுளம் பழம் சட்னி முதலியன. சில வகை உணவுகள் மூன்று தோஷத்தையும் சமச்சீராக ஆக்குபவை. இவற்றில் சில குறிப்பாக எடை குறைக்க உதவுபவை. இவை கீழே விவரிக்கப்பட்டிருக்கின்றன.

கிச்சடி

கிச்சடி – முக்கியமாக பயத்தம் பருப்பும், அரிசி கலந்த உணவு கூட சேர்க்கப்படும் பல வகை மூலிகைகளும் வாசனை திரவியங்களும் கிச்சடியை மருந்து உணவாக மாற்றுகின்றன. ஆயுர்வேத சிகிச்சையில் கிச்சடி பத்திய உணவாக பரிந்துரைகப்படுகிறது. காரணம் சுலபமாக ஜீரணமாகும், சுலபமாக உட்கிரகிக்கப்படும். எந்த தோஷத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கிச்சடியை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குறிப்பாக வாத தோஷம் உள்ளவர்களுக்கு கிச்சடி மிகவும் ஏற்றது.

தேவையான பொருட்கள்

     பாஸ்மதி அரிசி          – 3/4 கப்

     உடைத்த பயத்தம் பருப்பு – 1/2 கப்

     நெய் / நல்லெண்ணெய்  – 1/2 டே. ஸ்பூன்

     ஜீரகம்                   – 1 டீஸ்பூன்

     கடுகு                    – 1 டீஸ்பூன்

     பெருங்காயம்            – 1/4 டீஸ்பூன்

     இஞ்சி (துண்டு செய்து)     – 1/2 இன்ச்

     மஞ்சள் பொடி          – 1/2 டீஸ்பூன்

     உப்பு                   – 1/2 டீஸ்பூன்

     மிளகாய்பொடி           – 1/2 டீஸ்பூன்

     தண்ணீர்                  – 4 – 6 கப்

(மசித்த கிச்சடி   தேவையா (அ) உதிரியான கிச்சடி தேவையா என்பதை பொருத்து)

செய்முறை

அரிசியையும், பருப்பையும் நன்கு கழுவவும். கலந்து வைக்கவும்.

அடிகனமுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் / எண்ணெய்யை காய்ச்சவும். எண்ணெய் அல்லது நெய் காய்ந்தவுடன் பெருங்காயம், ஜீரகம், கடுகு சேர்க்கவும்.

இவை வெடித்தவுடன் இஞ்சியை சேர்க்கவும். அரை நிமிடம் வதக்கவும்.

அரிசி, பயத்தம்பருப்பு, மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப்பொடி சேர்க்கவும்.

நன்றாகக் கலக்கவும்.

தண்ணீரை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி தீயைக் குறைத்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். முப்பது நிமிடம் வேகவிடவும்.

தீயை அணைத்து ஐந்து நிமிடங்கள் கிச்சடியை அப்படியே வைக்கவும்.

ப்ரஷர் குக்கரை உபயோகப்படுத்தினால் கிச்சடியை 1 விசில் வரும் வரை வேக விடவும். குக்கரை குளிர விடவும்.

கிச்சடியை ஸ்பூனால் மெதுவாக கிளறி சிறிது நெய் விட்டு பரிமாறவும்.

பயத்தம்பருப்பு சூப்

இந்த சூப் சிறந்த ஆயுர்வேத பத்திய உணவு. கப, வாததோஷங்களைக் கண்டிக்கும். இதில் உபயோகப்படுத்தப்படும் வாசனை திரவியங்களும், கொத்தமல்லியும், பித்ததோஷத்தைக் குறைக்கும். இது லேசான, சுலபமாக ஜீரணிக்கும் உணவு. இதை குடிப்பதால் உடல் எடை ஏறாது.

தேவையான பொருட்கள்

     பயத்தம்பருப்பு        – 1 கப்

     தண்ணீர்              – 6 கப்

     கடுகு                 – 1/2 டீஸ்பூன்

     ஜீரகம்                  – 1 டீஸ்பூன்

     நெய்                         – 2 டே.ஸ்பூன்

     பெருங்காயம்           – 1 சிட்டிகை

     நறுக்கிய கொத்தமல்லி  – 2 டே. ஸ்பூன்

     கல் உப்பு               – 1/2 டீஸ்பூன்

     பொடித்த தனியா        – 1/2 டீஸ்பூன்

செய்முறை

பருப்பைக் கழுவவும். ஒரு பாத்திரத்தில் பருப்பையும், தண்ணீரையும் விட்டு 30 நிமிடம் கொதிக்க விடவும்.அவ்வவ்போது நன்றாகக் கிளறி விடவும். இதனால் பருப்பும், வெந்து குழைந்து விடும்.

வேறொரு பாத்திரத்தில் நெய்யை சூடுபடுத்தவும். எல்லா மசாலாக்களையும் சேர்க்கவும்.  இந்த மசாலாக்களையும், நெய்யையும் வெந்து கொண்டிருக்கும் பருப்பு சூப்பில் சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லிதழையைத் தூவவும்.

இந்த சூப்பை அப்படியே அருந்தலாம் (அ) சப்பாத்தி (அ) சாதத்திற்கு சேர்த்துக் கொண்டு சாப்பிடலாம். இந்த உணவை தவிர எடை குறைக்க எளிய வழிகள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு எலுமிச்சைபழத்தின் சாற்றுடன் ஒரு டீஸ்பூன் தேனைச் சேர்த்துக் குடிக்கவும். நிறைய தண்ணீர் குடிக்கவும். இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்கும்.

பழங்கள், காய்கறிகள் உண்பதை அதிகரிக்கவும். புதினா, கேரட், இஞ்சி, லவங்கப்பட்டை மற்றும் கருமிளகு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இவை நச்சுப்பொருட்களை உடலிலிருந்து நீக்கும் ஆற்றல் உடையவை.

நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ், பீன்ஸ், பருப்புகள், பழங்கள், காய்கறிகள் முதலியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். தவறாமல் உடற்பயிற்சி செய்யவும். இல்லையென்றால் தினசரி நடக்கவும். அல்லது நீச்சல் அடிக்கவும்.


Spread the love