சத்தான சமையல்

Spread the love

பாசிப்பருப்பு சம்பா கோதுமை தோசை

தேவையான பொருட்கள்

பாசிபருப்பு                              1 கப்

சம்பா கோதுமை                     1/2 கப்

பச்சை மிளகாய்                      2

இஞ்சி ( சிறிய துண்டு)           1

கொத்த மல்லி இலை  கைப் பிடியளவு                           (சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)

உப்பு ருசிக்கு ஏற்ப மற்றும் தேவையான அளவு            தண்ணீர்

செய்முறை

1 1/2  மணி அல்லது 2 மணிநேரம் வரை பாசிப்பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு நன்றாக பாசிப்பருப்பை கழுவி, வடிகட்டியபின்பு மிக்ஸியில் இடவும்.

 சம்பா கோதுமையை மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்துக்கொள்ளவும். சிறதளவு நீர் ஊற்றி மிருதுவான மாவாக அரைத்துக் கொள்ளவும். மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை மாவில் போட்டு நன்றாக கலக்கிக் கொள்ளவும்.

தோசைக்கல்லை எடுத்து சூடுபடுத்தி எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி வழக்கமாக செய்யும் தோசை போல சுட்டுக் கொள்ளவும். தோசையை சூடாக, சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.

குடைமிளகாய் சட்னி

தேவையான பொருட்கள்

பெரிய குடை மிளகாய் 1

தக்காளி                       3

சிகப்பு மிளகாய்          3

எண்ணெய்                  4 தேக்கரண்டி

( 2 தேக்கரண்டி வறுக்க)

( 2 தேக்கரண்டி தாளிக்க)

 கடுகு                          1 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு         1 தேக்கரண்டி

கறிவேப்பிலை            சிறிதளவு

செய்முறை

வாணலிச் சட்டியை எடுத்துக் கொண்டு 2 தேக்கரண்டி எண்ணெய்விட்டு சூடுபடுத்தவும். பின்னர் அதில் துண்டுகளாக்கப்பட்ட குடை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் துண்டுகளாக்கப்பட்ட தக்காளியைச் சேர்த்து சற்றே லேசாக வரும் வரை வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

அதே வாணலிச்சட்டியில் சிகப்பு மிளகாயை சேர்த்து வறுத்த பின்பு குளிர வைக்கவும் மேற்கூறிய கலவையை மிக்ஸியில் இட்டு சிறிதளவு உப்புச் சேர்த்து பசை போல அரைக்கவும்.

அரைத்த கலவையை சிறிய கிண்ணத்தில் மாற்றிக் கொண்டு தனியாக வைக்கவும். இதற்கிடையில் மீதம் உள்ள 2 தேக்கரண்டி எண்ணெயை ஒரு சிறிய வாணலிச் சட்டியில் ஊற்றி கடுகு விதை சேர்த்து சூடுபடுத்தவும், கடுகு வெடிக்கும் சத்தம் வரும் பொழுது உளுந்தம் பருப்பும், கறி வேப்பிலையும் சேர்த்து வதக்கவும். இதில்

அரைத்து தனியாக வைக்கப்பட்டிருக்கும் கலவையை (சட்னி) சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மேற்கூரிய குடை மிளகாய்ச்சட்னி இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.

முருகன்


Spread the love