புதிய வருடம் வந்துவிட்டது. கடந்து போன வருடத்தில் எப்படி இருந்தோமோ, இல்லையோ, இந்த வருடத்தில் இனிமையாக, புதுமையாக வாழ முயற்சி செய்யலாமே. வருடங்கள் வரும் போகும். இந்த உலகம் ஆரம்பித்தது எப்போது என்றும் நமக்குத் தெரியாது. எப்போது முடியம் என்றும் தெரியாது. நமக்கு தெரிவது, கண்கூடாக பார்ப்பது, பிறப்பு மற்றும் இறப்பு தான்.
நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது முதுமை. வயது ஆக, ஆக, உடலில் பல மாற்றங்கள் தெரியும். நடுத்தர வயதிலிருந்தே நாம் எச்சரிக்கையாக இருந்தால் பல வியாதிகளை தடுக்கலாம். முதலில் முதுமையை பற்றிய பயங்களை தவிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். வயதாவதை நிறுத்த முடியாது. வேண்டுமானால் சிறிது தள்ளிப்போடலாம்.
முதியவர்களின் பயங்கள்
பொருளாதார நிலை குறித்து, தனிமையைப்பற்றி, உடல் நலம் பற்றி, பணியிலிருந்து ஒய்வு பெறும் போது பல முதியவர்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது. வீட்டில் ‘சும்மா’ உட்காருவது பல பிரச்சினைகளை உண்டாக்கும்.
“சும்மாதானே இருக்கிறீர்கள். வீட்டை சுத்தம் செய்யுங்கள்” என்று சொல்லும் மனைவியை குற்றம் சொல்ல முடியாது. “உங்களுக்கெல்லாம் 60 வயதிலாவது ஒய்வு கிடைக்கும். ஆனால் சமையல் செய்வதிலிருந்து எனக்கு எப்போதும் ஒய்வு கிடைக்கும்” என்ற பதில் வரும். குடும்பத்தினரிடமிருந்து பரிவும், அக்கறையும் கிடைக்கும் முதியவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அதனால் தான் நாம் எல்லோருடனும், எப்போதும் இனிமையாகவும், அன்பாகவும் பழக வேண்டும்.
பிற்காலத்தில் வயோதிகத்தில் மற்றவர்கள் நாம் கொடுத்த அன்பையும், மகிழ்ச்சியையும் நமக்கு திருப்பித்தர ஏதுவாகவும் முதியவர்கள் பொழுது போக்குக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்வது (கம்ப்யூட்டர், ஒவியம், இசை) உயர் கல்வி பயில்வது, இல்லை, மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகள் செய்வது இவைகளை மேற்கொள்ள வேண்டும். ஒய்வு என்பதை அலுவலக வேலையிலிருந்து வீட்டு வேலைக்கு (Transfer) என்று கருதுங்கள்.
முதியவர்கள் மட்டுமல்ல, அனைவருக்கும் ஏற்ற சில வழிமுறைகள்
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை. சுற்றம் மட்டுமல்ல, அடிக்கடி குற்றம் கண்டுபிடிப்பவரை நண்பர்களும் விலக்கி விடுவார்கள். அப்படி சொல்லியே தீர வேண்டுமென்றால் ‘நாசூக்காக’ சொல்லுங்கள்.
மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூறுவது தேவையை பொறுத்தது. ஆனால் அதே பழக்கமாகக் கூடாது. “உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன். இல்லையென்றால் எனக்கென்ன வந்தது” என்ற பீடிகையுடன், உங்கள் புத்திமதியை ஆரம்பிக்காதீர்கள். உங்கள் அட்வைஸ் தேவைப்பட்டால் மட்டுமே, தவிர அதை ஏற்றுக்கொள்ளும் நபராக இருந்தால் உங்கள் அறிவுரையை சொல்லுங்கள். ஒரு பெண்மணி நபிகள் நாயகத்திடம் வந்து தன் மகன் அதிகமாக இனிப்பு சாப்பிடுவதால் அவனுக்கு புத்திமதி கூற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். நபிகள் அந்த பெண்மணியை சில நாள் கழித்து வரச் சொன்னார். அதற்குக் காரணம் கேட்ட போது, நபிகள் சொன்னது – “எனக்கே இனிப்பு பிடிக்கும். நான் அந்த பழக்கத்தை விட்டால் தான் மற்றவர்களிடம் புத்தி சொல்ல முடியும். என் பழக்கத்தை முதலில் விட்டுவிடத் தான் அவகாசம் கேட்டேன்” என்றார்.
எல்லோருக்கும் தெரிந்த குறள் – “இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” என்பது. எல்லோரிடமும் இனிமையாக பேசுங்கள்.
மற்றவர்களை நிந்திப்பது, கிண்டல், கேலி செய்வதை நிறுத்துங்கள்.
உங்களை விட வயதானவர்களை மதியுங்கள்.
மற்றவர்கள் பேசும் போது குறுக்கிடாதீர்கள். சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லாதீர்கள். அர்த்தமில்லாமல், பின் விளைவுகளை அறியாமல் பேசாதீர்கள்.
உற்சாகமாக இருங்கள். கலகலப்பான ஆசாமியை அனைவரும் விரும்புவார்கள்.
சுயபச்சாதாபத்தை உண்டாக்கிக் கொள்ளாதீர்கள். இது பல மன நோய்களுக்கு அடிகோலும். மனச்சோர்வு என்ற நோயின் முதல் கட்டமே பச்சாதாபம் தான்.
உங்களுக்கு உதவியவதை பாராட்டுங்கள்
சிரித்து வாழ வேண்டும். சிரிப்பு நல்ல டானிக்.
விரக்தி, எதிர்மறை நினைவுகள் ஆகியவை மனநோயை உண்டாக்கும். வாழ்க்கை என்பது எப்போதும் இனிக்காது. நாம் தான் அதை இனிமையாக்க வழிகோல வேண்டும்.
தினமும் உங்கள் குடும்பத்தினருக்கென்று நேரம் ஒதுக்குங்கள். இரவு உணவையாவது அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது, நெருக்கத்தை வளர்க்கும். குழந்தைகளுடன் பாரபட்சமின்றி பழகுங்கள். குழந்தைகளை மட்டம் தட்டாதீர்கள்.
உடலை சுத்தமாக வைத்திருங்கள்.
இயற்கைக்கு ஒவ்வாத பழக்கங்கள் இன்னலை தரும். உடலால் முடியாத அளவை தாண்டிய உழைப்பு, உடல் ஏற்காத அளவை மிஞ்சிய உணவு, மல மூத்திரங்களை அடக்குவதால் ஆகியவையால் உடல் அழிவு விரைவாக ஏற்படும்
இந்த புது வருடத்தில் வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொள்ளுவோம். மனைவியின் சமையல், பெண்ணாக இருந்தால், கணவனின் வேலைத்திறமை, குழந்தையின் பேச்சு, இவற்றை பாராட்டி ரசிப்போம்.
என்னதான் முயற்சி செய்தாலும், மானிட வாழ்வில் பல துயரங்கள் நேர்ந்தால் மனம் பாதிக்கப்படும். பிரியமானவர்களின் மரணம், விபத்துக்கள், பொருளாதார நெருக்கடிகள், வேலைக்கு போவது, இவற்றையெல்லாம் சமாளிப்பது கடினம் தான்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் நாம் நமது உடல், மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். யோகா உடற்பயிற்சி, தியானம், பொழுது போக்கு, விளையாட்டுகள், உடல் உழைப்பு இவையெல்லாம் மனோரீதியாக மகிழ்ச்சி அளிக்கும். உடல் ரீதியாகவும் உதவும். எதிர்மறை நிகழ்ச்சிகளை ஒதுக்கி தள்ளி விடமுடியாது. அவற்றுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
இன்று முதல் தன்னம்பிக்கையுடன் தெளிவான சிந்தனையுடன் துணிவே துணையாக புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம்.
இந்த சங்கடங்களை சகித்துக் கொள்ளத் தான் வேண்டும். அதற்கான மனோ தைரியத்தை இறை நெறியுள்ளவர்கள் இறைவனிடம் மனதை செலுத்தி, துயரங்களை மறக்கலாம். இறப்பு என்பது பிறந்த அன்றிலிருந்தே எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதை யாராலும் தவிர்க்க முடியாதது. இதை கருத்தில் கொண்டால் மனம் சாந்தி அடையும்.