1. உடல் வயதாக, வயதாக மனத்தை இளமையாக வைத்திருங்கள். உங்கள் மனம் நிர்ணயிக்கும் வயதுதான் உங்கள் வயது.
2. உங்கள் தோற்றத்தை கவனியுங்கள். உடலை சுத்தமாக வைத்திருங்கள். வேலையிலிருந்து ஒய்வு பெற்றவுடன், ஒய்வு பெறும் முன் அலுவலகம் செல்லும் போது எவ்வாறு நல்ல உடை, தோற்றத்துடன் இருந்தீர்களோ, அவ்வாறே இருக்க வேண்டும். உதாரணமாக தினசரி முகசவரம் செய்து அலுவலகம் செல்பவர்கள், ஒய்வுக்கு பிறகு ‘வீட்டினில் தானே இருக்கிறோம், எதற்கு தினசரி முகத்தை மழிக்க வேண்டும்’ என்று நினைக்கக் கூடாது.
3. உடற்பயிற்சி அவசியம் தேவை. சுலபமான, பயனளிக்கும் ஒர் உடற்பயிற்சி நடப்பது. காலையில் நடப்பது அவசியம். உங்கள் டாக்டர் ஆலோசனைப்படி உங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் எடை அதிகரிக்காது. ரத்த அழுத்தம் சீராகும். கொலஸ்ட்ரால் குறையும். உடல் தசைகள் வலுவடையும்.
4. யோகாவும் பயனளிக்கும் யோகாவை முறையாக கற்றுக் கொண்டு செய்ய வேண்டும். தியானம் செய்வதும் மனதை ஒரு நிலைப்படுத்தும்.
5. உடற்பயிற்சி, யோகா இவைகளுடன் மூச்சுப் பயிற்சியையும் தொடர்ந்து செய்யவும். பிராணாயாமம் போன்ற மூச்சுப்பயிற்சி நுரையீரலின் திறனை மேம்படுத்தும்.
6. உடலுக்கு வேலை கொடுங்கள். உடலை Active ஆக வைப்பது அவசியம்.
7. அவ்வாறே மனதுக்கும் வேலை கொடுங்கள். புத்தகங்கள் படியுங்கள். மூளையை உபயோகிக்க வேண்டிய குறுக்கெழுத்துப் போட்டி. கணினி விளையாட்டுகளில் ஈடுபடவும். டி.வி. பார்ப்பதில் தவறில்லை. வீட்டில் உள்ளவர்களுடன் இணைந்து வாழுங்கள். இந்த கால மகன், மருமகள் போன்றவர்கள் உங்கள் தேவைகளை புரிந்துக் கொள்ளாமல் போகலாம். அதை பெரிய குற்றமாக கருத வேண்டாம்.
8. தோட்டம் அமைப்பது பராமரிப்பது, புகைப்படம் எடுப்பது, சங்கீதம் கேட்பது போன்ற பொழுதுபோக்குகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் சமூக சேவையில் ஈடுபடுங்கள்.
9. உங்கள் வயதுக்கேற்ற நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் தனிமையை போக்கும். உங்கள் பக்கத்து வீட்டிலிருப்பவர்களுடன் நல்ல உறவை உண்டாக்கிக் கொள்ளுங்கள்.
10. உங்கள் பணத் தேவைகளை முன் கூட்டியே திட்டமிட்டு. அதன்படி வயதான காலத்துக்கு தேவையான பணத்தை உங்களுக்கென்று வைத்துக் கொள்ளுங்கள். பற்றாக்குறை இருந்தால் Retire ஆன பிறகும், வேலைக்கு போங்கள். பணத்தேவை தீர்வு மட்டுமல்ல. உடல், மனம் இவற்றையும் சுறுசுறுப்பாக வைக்க, முடியும் வரை வேலைக்கு போவது நல்லது.