நோயற்ற வாழ்க்கைக்கு

Spread the love

உடலுக்கு ஒவ்வாத கழிவுகளும் நச்சுப் பொருள்களும் உடலினுள் சேரும் போது நோய் ஏற்படுகிறது.

இயல்பாகவே, நம் உடலுக்கு நோய் நீக்கும் சக்தி உள்ளது. அதை ஊக்குவிக்கின்ற வழிமுறைகளைப் பின்பற்றினால் நோய் நீங்கும். இயற்கை முறையில் நோய் நீங்கப் பெறுகின்ற விலங்குகளைக் காண்க.

உடலில் இருந்து எழுகின்ற உயரிய சக்தி (Vital Energy) முறையான வகையில் கையாளப்படுகின்ற போது நோய் தானே நீங்குகிறது.

செயற்கை மருந்துகளை மட்டும் உட்கொண்டு நோய் தீர்க்க முயல்வது, நோயை அழுத்தி மூடி மறைக்க முயல்வதாகும். ‘நோய் நாடி நோய் முதல் நாடி’, அதை இயற்கை வழி நீக்குவதே நல்ல முறை.

நச்சுப் பொருள்கள் உடலில் தேங்குவதால் சக்திக் குறைவு ஏற்படுகிறது. இரத்தக் கட்டமைப்பு மாறுபடுகிறது. அகச் சுரப்பிகளின் சுரப்பிலும், நிணநீரிலும் குறைகள் ஏற்பட்டு நோய் தோன்றுகிறது.

இயன்ற அளவு இயற்கை உணவுகளை உண்டு, வேண்டுமிடத்து உணவு மறுத்து, போதிய அளவு, காற்று, ஒளி, நீர் ஆகியவற்றைப் பெறுதலுடன் ஓய்வு, அமைதியான சூழல், உடற்பயிற்சி போன்றவைகளைக் கைக் கொள்ளுதல் வேண்டும்.

ஒரு நாள் உணவில் மூன்றில் ஒரு பங்கு சமைக்கப்படாத இயற்கை உணவுகளான பழங்கள், காய்கள், கொட்டைகள், விதைகள், இளநீர் போன்றவையாக இருக்கட்டும்.

ஒரு நாளில் ஒரு வேளை திரவ உணவும் இரு வேளை திட உணவும் உண்ணப் பழகுங்கள். உணவுகளுக்கிடையே சிறு தீனி ஒதுக்க வேண்டும்.

திட உணவுகளைக் கூழாகும் வரைமென்றும் திரவ உணவுகளை நன்கு சுவைத்து மடக்கு மடக்காகவும் உட்கொள்ளுதல் வேண்டும்.

நாற்பது வயதிற்கு மேல் உணவின் அளவைக் குறைக்கத் தொடங்க வேண்டும். அளவில் மிகுந்து உண்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வாரத்தில் ஒரு நாள் காலை முதல் மாலை வரை நீர்ம உணவு (Liquid Food) மட்டும் அருந்தி உபவாமிருங்கள்.

மாதமொரு நாள் நீர் மட்டும் உட்கொண்டு உணவு மறுத்தலைக் கடைப்பிடியுங்கள்.

புளிப்பில்லாத தயிர், நீர் மோர், பழச்சாறு, இளநீர் போன்றவைகள் நல்ல நீர்ம உணவுகள்.

பசித்தால் மட்டுமே உண்க. பிறரை மனநிறைவு கொள்ளச் செய்தவற்காக உண்ணாதீர்கள்.

உணவு உண்ணும் போது நீர் அருந்துவதைத் தவிருங்கள். உணவிற்கு அரை மணி நேரம் முன்னரோ அன்றிப் பின்னரோ மட்டுமே நீர் அருந்துக.

இரவு உணவு படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்னரே அருந்தப்பட்டு விட வேண்டும்.

இரவில் எளிதாகச் செரிக்கத் தக்க உணவுகளையே உண்ண வேண்டும்.

இரவோ, பகலோ, வயிற்றில் கால் பகுதி எப்போதும் வெற்றிடமாக இருக்க வேண்டும்.

வறுத்த, பொரித்த, பதனஞ் செய்யப்பட்ட, குப்பிகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களை இயன்ற வரை தவிர்க்கவும்.

மனிதர்களுக்கு ஏற்ற உணவு மரக்கறி உணவே என்பதை நினைவில் இருத்துக.

ராகவேந்திரன்


Spread the love