சரியாத்தான் சாப்பிடறீங்களா?

Spread the love

மனிதர்களின் அடிப்படை வசதிகளாக வகுக்கப்பட்ட மூன்று விஷயங்களில் உணவு மிகவும் முக்கியமானது. இவ்வளவு முக்கியமான உணவை எப்படி உண்பது என்று கூட நம்மில் பலருக்கு தெரியவில்லை. எதை உண்பது என்றும் அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

வயிற்றுக்குள்ளேயே ஒரு அடுப்பு இருக்கும் போது எதற்கு சமையலெல்லாம்? அப்படியே சாப்பிட்டால் தான் அவிழ்தம் என்று இயற்கை உணவு ஆலோசகர்கள் அடிக்கடி கூறுவதுண்டு.ஆதாமும் ஏவாளும் அவர்கள் குடும்பத்தாரும் அப்படித்தான் சாப்பிட்டார்கள்.

ஆனால் நெருப்பு ஒன்றை மனிதன் சிக்கி முக்கிக் கல்லை உரசி கண்டு பிடித்த பின்பு சுடாத பழம் வேணாம் சுட்ட பழம் சாப்பிடலாமே என்ற கருத்து மேலோங்கி, அது வளர்ந்து வளர்ந்து, ஐந்து சுற்று முறுக்கு, மோர்க்குழம்பில் மிதக்கும் வடை என வகை வகையாகச் சமைத்துச் சாப்பிடும் பழக்கம் பெருகியது.

பசிக்கு உணவு என்ற நிலை மாறி, ருசிக்கு உணவு, சாப்பாடு எனும் சாக்குப் போக்கு சொல்லி, மனம் களிக்க எதைத் தின்றால் என்ன என்ற நிலை வந்ததும், உணவு தயாரிப்பில் பொரியல் வருவலாகி, பின் கருகலாகி, சமையல் என்பது சுரம் தப்பிய சூப்பர் சிங்கர் போலானது.

ஆதலால், மீண்டும் நாம் “ஹார்லிக்ஸை மட்டுமன்றி அவரைக்காய் வெண்டைக்காயையும் ஏன் அப்படியே சாப்பிடக் கூடாது?” என்ற கருத்து வலுக்க ஆரம்பித்து விட்டது. எதை அப்படியே சாப்பிடணும் எதை சமைத்து சாப்பிடணும் என்பதை தெரிவதற்கு முன், நம் மரபணு பற்றிய சூட்சுமம் நமக்கு தெரிந்தாக வேண்டும்.

20 – 25 வருடம் அம்மா சமையலைச் சாப்பிட்ட வயிறுக்கு, திருமணமான ஆறு மாதம் கழித்து, மனைவி வைக்கும் வெந்நீர் கூட கொஞ்சம் வயிற்றைப் பிரட்டுவதாகத் தெரியும் போது, இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக சமைத்த உணவில் பழகிப் போன சீரண மண்டலம் திடீரென அனைத்தையும் சமைக்காமல் சாப்பிட துவங்கும் போது சிலருக்கு சேட்டை செய்யக் கூடும்.

அதற்குக் காரணம் epigenitics என்கிற சூழலுக்கு ஏற்ப மரபணு பழகிப் போன / மாறிப் போன விஷயம் என்கிறது நவீன அறிவியல். தடாலடியாக சரவணபவனில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்குக் குடித்தனம் போய் விடாமல் படிப்படியாக இயற்கை உணவிற்கு சிலவற்றை கொண்டு செல்வது தான் புத்திசாலித் தனம். ஆரோக்கியமும் கூட.

பழங்கள் தான் அப்படியே சாப்பிடுவதில் முதல் தேர்வு. பழத் துண்டுகளுக்கு மேல் ஐஸ்கிரீம் போடுவது, சர்க்கரை போடுவது என்ற அதிகப் பிரசங்கித் தனமில்லாமல் பழத் துண்டுகளை அப்படியே சாப்பிடுவது உத்தமம். பழ அப்பம், அன்னாசிபழ ரசம் என பழத்தையும் சமைக்கும் பழக்கம் பரவி வருகிறது. எப்போதோ விருந்துக்கு வேண்டுமென்றால் அது சரி. அடிக்கடி இப்படித் தான் சாப்பிடுவேன் என அடம் பிடித்தால், பழம் அதன் பயன் தராது.

பழங்களில் நோய் எதிர்ப்பாற்றல், வயோதிகம் குறைக்கும் மார்க்கண்டேய மகத்துவம், இன்னும், புற்றுநோய் முதலிய பல நாட்பட்ட நோய்களை எதிர்க்கும் தாவர சத்துக்கள் அதிகம் உண்டு. சிவப்பு, நீல, ஆரஞ்சு, மஞ்சள் நிறமுள்ள அனைத்துப் பழங்களிலும் இந்த நிறமிச் சத்துக்களால் கூடுதல் பலன் உண்டு. சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆரய்ச்சிக் கழகத்தைச் சார்ந்த தேசிய உணவியல் கழகம் எது சிறந்த பழம் என்ற அறிக்கையை விட்டது. அதில் முதலிடம் பிடித்தது எந்த கனி தெரியுமா? நம்ம ஊர் கொய்யா. சும்மா பம்மாத்துக்கு இனி வெளிநாட்டு ஆப்பிள் வாங்கி காசை வீணாக்காமல் கொய்யாக்கனிக்கு மாறுங்கள். அதில் மிளகாய்த்தூள், உப்பு தூவி சாப்பிடுவது தப்பு. வெறும் மிளகாய்த்தூள், அல்சரில் இருந்து புற்றுநோய் வரை வரவழைக்கும்.

அதே போல் நறுமணச் சத்துள்ள உணவுகளான இலவங்கப்பட்டை, அன்னாசிப்பூ, ஏலம், சீரகம், பெருஞ்சீரகம் முதலான உணவுப் பொருட்களை அதிகம் சூடக்காமல் மிதமான கொதிப்பில் பரிமாறுவது நல்லது. இப்பொருட்களை சமைத்து முடித்த சூட்டில் கடைசியாக ஓரிரு நொடிகள் மட்டும் போட்டு, பின் கொதியில் இருந்து இறக்கி விட்டால் நல்லது. அப்போது தான் அந்த நறுமணப் பொருட்களில் உள்ள யூஜினின் சத்து ஓடிப்போகாது.

அதிக நார்த் தன்மையுள்ள கீரை, மாவுச்சத்துள்ள கிழங்குகளை சமைத்துச் சாப்பிடுவது தான் நல்லது. செல்லுலோஸ் அதிகமுள்ள கீரைகள், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கிழங்குகள் வேகாதிருப்பின் அஜீரணம் உண்டாகும். வெந்து கெட்டது முருங்கைக் கீரை; வேகாமல் கெட்டது அகத்திக் கீரை என்ற பழமொழி சொல்வது முருங்கைகீரையை அதிகம் வேக வைக்கக் கூடாது என்பதை தான்.

 நார் அதிகமில்லாத காய்கறிகளை அப்படியே சாப்பிடுவதில் தவறில்லை. வெண்டை, வெங்காயம், கேரட், முள்ளங்கி, தக்காளி இவை அப்படியே சாப்பிடுவதில் முதலிடம் பிடிக்கும் காய்கறிகள். சுரைக்காய் சாறு சாப்பிடும் பழக்கம் யோகா பிரியர்களிடம் அதிகரித்து வருகிறது. அது நல்லது தான். ஒரு வேளை சுரைக்காய் லேசாக கசந்தால் தவிர்ப்பது நல்லது.

லேசாக ஆவியில் வெந்தபின் காய்கறிகளைச் சாப்பிடுவது அதிக உடல் உழைப்பு இல்லாதவருக்கு, செடண்டரி வேலை செய்யும் நபருக்கு, நல்லது. அதிக உடல் உழைப்பு உள்ளவருக்கு சீரணத்திற்கான வெப்பம் சிறப்பாக உடலில் இருக்கும். அவர்கள் சமைக்காமல் சாப்பிட்டாலும் செரிக்கும். ஒரு முறை வேகவைத்து இடித்த அவல், பொரி அப்படியே அல்லது ஊற வைத்து சாப்பிடலாம். பாசிப்பயறு, கொண்டைக்கடலை போன்ற முளைகட்டிய தானியங்கள் அப்படியே சாப்பிடலாம்.

முளைக் கட்டியதானியங் களில் அதிகப்படியான புரதங்கள் ஒருசில எதிர் ஊட்டசத்தும் (anti nutriens) இருப்பதாக சில கருத்துக்கள் வருகின்றன. ஆதலால், அவற்றுடன்மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவது இன்னும் நல்லது. சமைக்காதகாய்கறியை / பழங்களை உணவுக்கு முன்னர் சாப்பிடுவதும் ஜீரணத்திற்கு நல்லது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love