உடலே கோயில்; உணவே பிரசாதம்

Spread the love

ஐ.டி. பணியானாலும், கட்டிட வேலையானாலும் எல்லாம் அரை ஜான் வயிற்றுக்காகத்தான். உயிர் வாழ அடிப்படைத் தேவை உணவுதான். இதற்காகத்தான் ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் அல்லும் பகலும் பாடுபடுகிறோம். உணவே மருந்து; மருந்தே உணவு என்பதுதான் இயற்கை மருத்துவம். உணவுக்கும், உடலுக்கும் பொருத்தமான உறவு உள்ளது. உணவால்தான் உடல் கட்டப்படுகிறது என்பதால், உடலை உணவாலே பராமரிக்கவும் முடியும். பழுது நீக்கவும் முடியும். மனித உடல் கோயிலைப் போன்றது. அங்கு பிரசாதம்தான் உணவு. இதை தகுந்த வேளையில் படைக்க வேண்டும்.

இயற்கை உணவுகள் ஃப்ரஷ்ஷானவை. அதன் அமினோ அமிலங்கள் மற்றும் என்சைம்கள் நம்மை நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. அமில & காரத்தன்மையை உடலில் சமநிலையில் பேணி, உடலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தாத மண்ணில் இருந்து கிடைக்கும் உணவே இயற்கை உணவாகும்.

மனிதர்களுக்கு மட்டும்தான் சமையலறை தேவைப்படுகிறது. மற்ற உயிரினங்களுக்கு சமையலறை தேவைப்படுவதில்லை. அவைகள் இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என்று இயற்கை உணவாக உண்டு வாழ்கின்றன. காட்டில் வாழும் உயிரினங்களை எந்த நோயும் தாக்குவதில்லை. அவற்றையே நாட்டில் கொண்டு வந்தால் எல்லா நோயும் தாக்குகின்றன. இதற்கு காரணமும் உணவு முறைதான்.

இயற்கை உணவில் வைட்டமின்களும், என்சைம்களும் நெருக்கமாக இணைந்து செயல்படும். பழங்கள், காய்கறிகள், கிழங்குகள் என்று, இயற்கை ஏராளமான உணவை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது. தக்காளி, கேரட், முள்ளங்கி, வெள்ளரி, முட்டைக்கோசு, பீட்ருட், வெங்காயம், சர்க்கரைவள்ளி கிழங்கு, பட்டாணி, பப்பாளி, வெண்டைக்காய், பறங்கிகாய் என்று எத்தனையோ காய்கறிகள் வேக வைக்காமல் உண்ணும் வகையில் உள்ளன. இயற்கை ஏற்கனவே நமக்காக இவற்றை சமைத்து ரெடிமேட் உணவாகவே வைத்துள்ளது.

புதினா, மல்லி, நெல்லி, புளி இவற்றை பச்சையாகவே துவையல் அரைத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும். வேர்க்கடலை, உலர் பழங்கள், விதைகள், பேரீச்சம் பழம், கிஸ்மிஸ் இவற்றை பச்சையாக உண்டாலே மிகுந்த ருசியாக இருக்கும். பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, உளுந்து இவற்றை முளைத் தானியங்களாக உண்டால் உடலுக்கு சத்து கூடுதலாக கிடைக்கும்.

கைக்குத்தல் அரிசி, உமி நீக்காத கோதுமை, ரொட்டி, நீராவியில் அளவாக வெந்த காய்கறிகள், பால், தயிர் இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது சுவை கூட்டுவதாகும். மஞ்சள், கொத்துமல்லி விதைகள், இஞ்சி, புதினா, பெருங்காயம், சீரகம், லவங்கம் போன்றவை உணவில் சேர்ந்து மருந்துகளாகவும் அமைகின்றன.

சமைத்து உண்ண வேண்டிய காய்கறிகளையும், தானியங்களையும் பொடியாக்கி விடாமல், அதிகமாக வெந்து கொதித்து விடாமலும், பக்குவமாக சமைத்து உண்பது ஓரளவுக்கு நலம் பயக்கும். நீராவியில் வேகவைத்தல் நல்லது. எண்ணெயில் பொறித்த, வறுத்த உணவுகள் எப்போதுமே நம் ஆரோக்கியத்துக்கு எமன்தான். இவை செரிமானத்துக்கு சிக்கலை ஏற்படுத்துவதோடு, கொழுப்பையும் உடலில் கூட்டும். ஃபாஸ்ட் ஃபுட் வகையறாக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவை ரொம்ப ஃபாஸ்ட்டாக நம்மை டாக்டரிடம் செல்ல வைக்கும்.

தாவரங்களின் திசுக்களில் உள்ள நார் அல்லது இழைகளையே நார்ச்சத்து என்கிறோம். எந்தத் தாவரமும் இந்த நார்ச்சத்து இல்லையேல் நிமிர்ந்து நிற்க முடியாது. இந்த தாவர நார்ச்சத்து உடலில் நன்றாக, முழுவதுமாக செரிமானம் செய்யப்பட முடியாதவை. ஆனால், இந்த நார்ச்சத்துதான் உடலுக்கு நோய் வராமல் காக்கிறது. செரிமானத்தின்போது இந்த நார்ச்சத்து, திரவங்களை உறிஞ்சி, கலந்து, மற்ற பொருட்களுடன் சேர்ந்து திரண்டு, மென்மையாகி குடல்களுக்குச் சென்று, மலக்குடலிலும் சேர்கிறது. அங்கே தூண்டுதலை உண்டாக்கி, குதம் வழியாக மலக்குடலிலும் சேர்கிறது. அங்கே தூண்டுதலை உண்டாக்கி, குதம் வழியே கழிவை நன்றாக வெளித்தள்ள உதவுகிறது. மலச்சிக்கலை எதிர்த்து, கொலஸ்ட்ராலையும் புறந்தள்ள உதவுகிறது. செரிமானத்துக்கு உதவுவதோடு மூல நோய்கள், இரைப்பை புற்று, ‘வெரிகோஸ் வெயின்’ எனும் ரத்தக்குழாய் முடிச்சு முறுக்க நோய்களையும் வராமல் பெருமளவுக்கு காக்கிறது.

இந்த நார்ச்சத்து இரண்டு வகையிலானது. நீரில் கரையக் கூடியது, கரையாதது. கொட்டைகள், ஆப்பிள், ஓட்ஸ், வாழைப்பழம், பார்லி முதலானவை நீரில் கரையக்கூடியவை. குறைந்த கொழுப்புச் சத்துள்ளவை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துபவை. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றவை.

கோதுமை, கைக்குத்தல் அரிசி, புதிய பழங்கள், காய்கறிகளில் கேரட், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு போன்றவை நீரில் கரைய இயலாத நார்ச்சத்து கொண்டவை. இவைதான் மலச்சிக்கல் நேராமல், மலத்தை மிருதுவாகவும், முழுமையாகவும் வெளியேற்ற உதவுபவை. குடல் மற்றும் குடல்வாய் புற்றுநோய்கள் வராமலும் காப்பவை. நார்ச்சத்துள்ள பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து இல்லாவிடில் செரிமானத்தில் உணவுப் பொருட்கள் கசடாக தேங்கி நோய்களை உருவாக்கும்.

நாம் உண்ணும் உணவில் பழங்கள், காய்கறிகள் மூலமே 47 சதவீத நார்ச்சத்தும், தானியங்கள் மூலம் 35 சதவீத நார்ச்சத்தும் கிடைக்கிறது. இந்தக் கூட்டு உணவால் நம் உடலுக்குள் ஒரு நாளைக்கு 18 முதல் 20 கிராம் வரை நார்ச்சத்து சேர்கிறது. ஆனால், பரிந்துரைக்கப்படும் தேவையின் அளவு 25 முதல் 30 கிராம் வரையாகும். இதை கூடக் கொஞ்சம் பழங்கள், காய்கறி சாலடுகள் உண்பதன் மூலம் நிவர்த்திக்கலாம். ஆனாலும், மிக அதிகமாக நார்ச்சத்து உண்பதும் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் வயிறு உப்பி, மந்தமாகிவிடும்.

நான்கைந்து வாரங்களுக்கு, நார்ச்சத்து எவ்வளவு கொள்கிறது உடலுக்கு என்று பரிசோதித்துக் கொண்டு, அவரவர் உடலுக்கு ஏற்ப உட்கொள்ள வேண்டும். கூடவே தினமும் 12 டம்ளர்கள் தண்ணீராவது குடிக்க வேண்டும். வயிற்றினுள் இந்த நார்ச்சத்து அதிகமாக திரண்டு விடாமல், நீர்க்கச் செய்தலும் முக்கியம். குடல்களில் திரண்டு நிற்காமலும் இது தடுக்கும். மலக்குடலை சுறுசுறுப்பாக்கி, கழிவு முழுமையாக நடந்தேற இந்த திரவநிலை உதவும்.

முளைப்பயிர் தானியங்கள் மிகுந்த சத்துள்ள உணவாகும். சோயாவில் உள்ள சத்தைப் போல வேறு எந்த உணவுப் பொருளிலும் சத்து இல்லை என்று சொல்லலாம். முளைவிட்ட தானிய உணவு என்சைம்களை உருவாக்குகிறது. மாவுச்சத்தை குளுக்கோசாக்குகிறது. புரோட்டீனை அமினோ அமிலங்களாக்குகிறது. வைட்டமின் அளவை கூடுதலாக்குகிறது. கோதுமை முளைத்தானிய உணவும், கோதுமைப்புல் சாறும் புற்றுநோய் எதிர்ப்புத் தன்மை உள்ளவை. எல்லா முளைத்தானியங்களும் ஆயத்த உணவுதான். இது குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் மிகவும் ஏற்ற உணவு.

உணவுக்கேற்ற எல்லா வகை தானியங்களையும், விதைகளையும் முளைக்க விடலாம். கோதுமை, பார்லி, சோளம், பட்டாணி, நிலக்கடலை, கொண்டைக்கடலை, விதைகள் எல்லாம் முளைப்பயிர்களில் முக்கியமானவைகள். பீன்சும் மிகவும் ஏற்றது. இதில் எல்லா வைட்டமின்களும் அடங்கி உள்ளன.

இயற்கை உணவுகளை உண்போம். நோயற்ற ஆரோக்கியமான உடலைப் பெறுவோம். ஆயுள் வரை இன்பமாக வாழ்வோம்.


Spread the love