குழந்தைகளின் சத்துணவு

Spread the love

நம் இந்திய தேசம் தற்போது வேகமாக முன்னேறி வருகிறது. இருந்தாலும் இன்னும் ஏழ்மை குறைந்ததே தவிர, முற்றிலும் மறையவில்லை. பிறவியிலிருந்தே சத்தான சமவிகித ஆகாரம் குழந்தைகளுக்கு கொடுப்பது மிக அவசியம். சரியான அஸ்திவாரம் இருந்தால் தான் கட்டிடம் நிற்கும். குழந்தை பிறந்ததிலிருந்தே நல்ல ஊட்டச்சத்து கொடுத்தால் தான் வளர்ந்த குழந்தைகள் பிற்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

உலகிலேயே ஜனத்தொகையில் இரண்டாவதாக உள்ள நாடு இந்தியா. பல பிரச்சனைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏழ்மை, படிப்பின்மை, சத்து குறைந்த உணவு மற்றும் தொற்றுநோய்கள் போன்றவை இன்னும் நீக்கப்படவில்லை. 70 சதவிகித மக்கள் கிராமங்களில் வசிப்பதால் இவர்களுக்கு போஷாக்குள்ள உணவுகளை பற்றி தெரிவதில்லை.

புள்ளி விவரங்களின் படி, பிறந்த பத்து குழந்தைகளில் 3 குழந்தைகள் சத்து குறைவாகவும், 4 குழந்தைகள் ஆரோக்கியமாகவும், 3 குழந்தைகள் ஐந்து வயதிற்குள் இறந்தும் விடுகிறார்கள். குழந்தைகளில் 24 லிருந்து 40 சதவிகிதம் குறை எடையுடன் பிறக்கின்றன. சத்தில்லாத நோஞ்சான்குழந்தைகள் பரவலாக காணப்படுதற்கு ஏழ்மை மட்டும் முழுக்காரணம் கிடையாது. பெற்றோர்களின் அறிவின்மையும் காரணம்.

ஒரு ஆரோக்கியமான குழந்தை எப்படி இருக்கும் உலக ஆரோக்கிய குழுமம் கூறுவது – “ஆரோக்கியம் என்பது உடல் ரீதியாக, மனோரீதியாக, சமூகரீதியாக பிரதிபலிக்க வேண்டும். வெறும் வியாதிகள், ஊனங்கள் இல்லாதிருப்பதால் மட்டுமல்ல”.

நல்ல பசி, நன்றாக சாப்பிடுவது, நல்ல வளர்ச்சி இவை இருக்க வேண்டும். குழந்தைகள் வளர வளர, அந்தந்த வயதிற்கேற்ப பேச்சு, தவழுதல், நிற்பது, நடப்பது, புரிந்து கொள்வது இவை இருக்க வேண்டும். சிணுங்கல், அழுகை இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதிக பருமன், ஊளைசதை இல்லாமலும் எதிர்மாறாக “நோஞ்சானாகவும்” இல்லாமல் இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் உடல் போஷாக்குகளுக்கான உணவுகள் விஞ்ஞானரீதியாக விளக்கப்பட்டு, சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.

நாம் உண்ணும் உணவு 3 வழிகளில் பயன்படுகிறது

உடல் வளர்ச்சி, பராமரிப்பு, உடலை பழுது பார்க்க.

உடல் வியாதிகளை எதிர்த்து போராட தேவையான பாதுகாப்பிற்கு.

உடல் வேலை செய்ய சூடும், சக்தியையும் கொடுக்க.

உணவுகளை மூன்று குழுக்களாக பிரிக்கலாம்

உடலை வளர்க்க, கட்டுமான உணவுகள் பால், எல்லாவகை மாமிசங்கள் மீன், முட்டை, சீஸ், விதையுள்ள காய்கறிகள், கொட்டைகள் மற்றும் விதைகள்.

பால் உடல் வளர்ச்சிக்கு, அதுவும் குழந்தைகளுக்கு இன்றியமையாதது. சிறு குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்தது எதுவுமில்லை. பாலிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், சீஸ், பன்னீர் இவைகளும் சத்து நிறைந்தவை.

அவரைக்காய், மொச்சை, உளுத்தம்பருப்பு, வேர்கடலை போன்றவை தானியங்களுடன் சேர்த்து உண்ண தகுந்தவை. இவைகளால் சைவ உணவு புரதம் கிடைக்கும். முட்டைகள், மாமிசத்தை விட சிறந்தவை. 11 முட்டைகள், ஒரு கிலோ மாமிசத்திற்கு சமம்.

பாதுகாக்கும் உணவுகள்

இவற்றில் எல்லா பழங்களும், காய்கறிகளும் அடங்கும். கீரைகள், பரங்கிக்காய், கேரட், பப்பாளி, மாம்பழம், தக்காளி இவைகள் இந்த பிரிவில் சேரும். இவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கொய்யா போன்றவையும் பாதுகாக்கும் உணவுகள்.

சக்தி தரும் உணவுகள்

கொழுப்பு, தானியங்கள், ஸ்டார்ச் உடைய உணவுகள், சர்க்கரை, தண்ணீர் இவற்றில் அடங்கும். சர்க்கரையை விட வெல்லம் சிறந்தது. கொழுப்புச் சத்து காய்கறிகளின் சத்தை உடல் உபயோகிக்க உதவுகிறது. கோதுமை, அரிசி, கம்பு, கேழ்வரகு போன்றவையும் எரிசக்தியை கொடுக்கும்.

தினசரி சேர்க்க வேண்டிய உணவுகள்

அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, ராகி.

பருப்பு வகைகள்

ஒரு கீரை, ஒரு காய்கறி

ஒரு பழம்

கொழுப்பு (நெய்), எண்ணெய்

ஒரு டம்ளர் பால்

மீன் அல்லது முட்டை அல்லது மாமிசம்.

சரிவர சத்தணவு இல்லாவிடில் ஏற்படும் பாதிப்புகள்

தோல் சொரசொரவென்று, தடித்து இருக்கும்.

பல் சொத்தைகள் உண்டாகும்.

கண்கள் மந்த வெளிச்சத்தில் கண் தெரியாது. வைட்டமின் இல்லாத உணவு தொடர்ந்தால் கண்கள் தெரியாமல் போகும்.

தலைமுடி நிறம் மங்கும், உதிர ஆரம்பிக்கும்.

உடல்வாகு, குழந்தைகளின் உயரம் குறையும்.

எலும்புகள் ரிக்கெட்ஸ்நோய் தாக்கும். வளைந்த கால்கள், குறுகிய மார்பு, பெரியதாக தலை இவை ஏற்படும்.

உணவுக் கல்வி

கிராமங்களில் குழந்தை வளர்ப்பு போன்றவைகளை சொல்லித்தர, நன்கு பயிற்சி பெற்ற கிராம சேவகர்கள், சேவகிகள் மூலம் அரசாங்கம் முயல வேண்டும். தவிர, பல சமூக சேவை மையங்களும் இதில் ஈடுபட வேண்டும். தனியார் சேவை மையங்களான காந்தி கிராம் – மதுரை, விஸ்வபாரதி – சாந்தி நிகேதன் (கல்கத்தா), ராமகிருஷ்ணா மிஷன் – கல்கத்தா, சேவாமந்திர் – உதய்பூர், எம்.எஸ். பல்கலைகழகம் – பரோடா போன்றவை இதில் அரும்பணியாற்றி வருகின்றன.

இதில் ஈடுபடுபவர்கள் சொல்லித்தர வேண்டியவை

சுத்தமும், சுகாதாரமும் – கை, கால்களை, சாப்பிடும் முன் சுத்தமாக கழுவுவது. பாதுகாப்பான, சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரின் அவசியம்.

கழிவறைகளை உபயோகிக்கும் விதம், சுத்தப்படுத்தும் முறை.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல்.

வாந்தி, பேதி, தொற்று நோய்களைப் பற்றி அறிந்திருப்பது, அவை வராமல் தடுப்பது.

தடுப்பூசிகளின் அவசியம்.

தவிர

வயிற்றுப்போக்கை தடுப்பது எப்படி

இழந்த நீர்ச்சத்தை ஈடுகட்ட, வீட்டிலேயே பானத்தை தயாரிக்க சொல்லித்தர வேண்டும்.

ஜுரம் வந்தால், குளிர் பற்று போடுவது, போன்ற மாத்திரைகள் கொடுப்பது.

குழந்தைக்கும், பால் கொடுக்கும் தாய்க்கும் சோகை வராமலிருக்க வழிகள்.

குடிதண்ணீர் குடங்களை மூடி வைப்பது, நீண்ட கையுடைய கரண்டிகளை உபயோகிப்பது, நீரை காய்ச்சிக் குடிப்பது போன்றவை.

வீட்டை மட்டுமின்றி, சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பது.

குடிதண்ணீர் தரும் ஏரி, குளம் இவற்றில் ஆடுமாடுகளை குளிப்பாட்டாமல் இருப்பது.

கழிவறைகளை உபயோகிப்பது.

குப்பை, கூளங்களை சரிவர நீங்குவது.

வீட்டில் தோட்டங்கள் அமைப்பது.

சத்தான உணவின் அவசியம், விலை குறைந்த சத்தான ஆகாரங்களைப்பற்றி அறிந்திருப்பது.

இந்த உணவுக்கல்வியை படங்கள், சினிமா, டிவி மூலமாக பரப்பலாம். விளையாட்டுகள், போட்டிகள் வைப்பது போன்றவற்றால் கிராம மக்களின் ஆர்வத்தை தூண்டலாம். யுனிசெப் அறிக்கைப்படி 75 மில்லியன் குழந்தைகள் சத்துணவு பற்றாக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ராஜஸ்தான் 91%, பீகார் 82%, ஒரிஸ்ஸா 70%, உத்திர பிரதேசம் 81% மற்றும் கேரளா 35% பங்கு வகிக்கின்றன.

தேசிய குடும்ப ஆரோக்கிய சர்வே அறிக்கையின் படி, குழந்தை பிறந்து 4 அல்லது 6 மாதங்களில் சரிபாதி கன உணவு கொடுக்கப்பட்ட குழந்தைகள் கேரளாவில் 69.3%, ராஜஸ்தானில் குறைந்தது 9.4% தான்.

இதிலிருந்து குழந்தைகளுக்கு சரியான உணவு கொடுக்காதது ஏழ்மையினால் அல்ல, அறியாமையால் என்று தெரிகிறது.


Spread the love