ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். இப்போது, ஆள் பாதி தலைமுடி பாதி என்றாகி விட்டது. தலைமுடி உதிர்வதைத்தடுக்க ஏகப்பட்ட மருத்துவமனைகளும் சிகிச்சை முறைகளும் வந்து விட்டன. ஆனால், எளிய முறையில் நீங்கள் உண்ணும் உணவுகள் மூலமே, தலைமுடி உதிர்வதைத்தடுக்க முடியும். தலைமுடி உதிர்வதைத்தடுக்க வைட்டமின்கள் ஏ,வைட்டமின் சி,வைட்டமின் இ,வைட்டமின் பி5,வைட்டமின் பி6,வைட்டமின் பி12, மற்றும் இரும்புச்சத்து, புரதச்சத்து, ஆகியவை மிக மிக அவசியம்.
தலைமுடி வலுவானதாக மாறுவதற்கு நீங்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்.
முட்டை
சிலர் முட்டையை அடிக்கடி விரும்பி சாப்பிடுவது வழக்கம். இவ்வாறு முட்டை சாப்பிடுவது, உங்கள் தலைமுடி உதிர்வதைத்தடுக்கும் என்று சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.
முட்டையில் புரோட்டீன் சத்து, வைட்டமின் பி12 சத்து மற்றும், இரும்புச்சத்து, துத்தநாகம், ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தலைமுடி உதிராமல் தடுப்பதுடன், தலைமுடி வலுவாக இருக்கவும் பயன்படுகின்றது. நீங்கள் விரும்பி சாப்பிடும் முட்டையின் வெள்ளைப்பகுதியில், ‘அல்புமின்’ என்கிற புரதச்சத்தானது அதிகளவில் காணப்படுகின்றது. இந்த புரதச்சத்தானது, தலைமுடியின் வளர்ச்சிக்கு பயன்படுகின்றது. பயோட்டின் என்கிற வைட்டமின் தலையில் முடி உதிர்வதைத்தடுக்கும் வைட்டமின் ஆகும். இந்த பயோட்டின் எனப்படும் வைட்டமின் முட்டையில் அதிகளவில் காணப்படுகின்றது. நீங்க் தலைமுடியில் கவனம் செலுத்த வேண்டுமென்றால், அடிக்கடி உணவில் முட்டையை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பீன்ஸ்
காய்கறி கடைகளிலோ அல்லது சமைக்கும்போதோ நமக்கு அதிகமாக பரிச்சயமான காய்களில் பீன்ஸ் முதன்மையானது. கடைகளில் காய்கறி வாங்கும் போது, பீன்ஸ் இருக்கா என்று நாம் கேட்பதுண்டு. இந்த பீன்ஸில், வெஜிடபிள் பிரியாணி, பீன்ஸ் கூட்டு,போன்றவற்றை அதிகளவில் சமைத்து உண்ணலாம். இது தவிர, சாம்பாரில் பீன்ஸின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. பீன்ஸிலும் வகைள் உண்டு. அவை கறுப்பு பீன்ஸ், மற்றும் கிட்னி பீன்ஸ், பிரின்டோ பீன்ஸ், சோயா பீன்ஸ் என பட்டியல் நீண்டு கொண்டிருக்கின்றது. தலைமுடி உதிர்வதைத் தடுப்பதில் புரதம், வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த சத்துக்கள், தலைமுடிக்கு வலுவினை அளித்து, வளர்ச்சியை கொடுக்கின்றது. இதுதவிர,தலைமுடி உதிர்வதை தடுக்கக்கூடிய, இரும்புச்சத்து அதிகளவில் காணப்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால், கிட்னி பீன்ஸ், மற்றும் சோயா பீன்ஸ், உள்ளிட்ட பீன்ஸ் வகைகளை உணவில் சேர்த்து உண்ணும் போது, தலைமுடி உதிர்வதை தடுக்க முடியும்.
பசலைக் கீரை
கீரைகளில் ஒன்றான பசலைக் கீரையை, அதிகளவு இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, புரதம் உள்ளன. முடி உதிர்வுக்கு ஒரு முக்கியக் காரணமான இரும்புச்சத்து குறைபாட்டுக்கு தீர்வாக இது இருக்கிறது. மேலும், தலையில் உள்ள எண்ணெய்ச் சுரப்பியைத் தூண்டி, முடிக்கு இயற்கையான கண்டிஷனராகச் செயல்படுகிறது. இதில் உள்ள மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் தலை முடிக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு, முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.
ஓட்ஸ்
ஓட்ஸ் அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஓட்ஸில் வைட்டமின் பி-யும் தாதுஉப்புக்களும், நிறைவாக உள்ளன. மெலனின் என்ற நிறமி, முடிக்கு நிறமளிக்கக் கூடியது. ஓட்ஸ்சில் உள்ள சத்துக்கள் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. முடி வளர்ச்சிக்குத் தேவையான பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் ஓட்ஸில் உள்ளன. இவை, தலைமுடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர்வதற்கு, ஓட்ஸ் கஞ்சியை உணவாக உட்கொள்ளுங்கள்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
வறட்சியான சருமம், தலைமுடி, பொடுகு போன்றவை வைட்டமின்- ஏ குறைபாட்டாலும் வரக்கூடியவை. வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், செல் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், புரதம், தாமிரம், இரும்புச்சத்தும் உள்ளன. இவை, முடி கொட்டுவதைத் தவிர்க்க உதவுவதுடன், முடிக்கும் சருமத்துக்கும் ஆரோக்கியத்தைத் தருகின்றன.
சூரிய காந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. நல்ல சுவையுள்ளது; இதை மற்ற பருப்புகள்போலவே மென்று தின்னலாம். சூரியகாந்தி விதைகளில் துத்தநாகம், மக்னீசியம், பையோட்டின், வைட்டமின் பி, இ, புரோட்டீன், இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், கால்சியம், செலினியம் போன்ற தலைமுடியைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்துகள் உள்ளதால் முடி இழப்பை தடுப்பதோடு, தலைமுடியை வளமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
கேரட்
வைட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் நல்லது. தோல் மற்றும் முடியை பாதுகாக்கும்ம் தன்மை இதற்கு உண்டு. கேரட்டில் அதிக அளவு பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன. தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியைத் (சீபம்) தூண்டி, தலையில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
நட்ஸ் ட்ரை ஃப்ரூட்ஸ்
இவற்றில் அதிக அளவு துத்தநாகம், பயோட்டின், புரோட்டீன், இரும்புச்சத்து உள்ளன. குறிப்பாக, புரோட்டீன் தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். முடி உலர்ந்துபோகாமல் தடுக்கும்.
பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும். தோலுக்கு நல்ல நிறத்தையும் முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.