குழந்தைகளுக்கு ஏற்ற உணவுகள்

Spread the love

தாய்ப்பால் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த சிறந்த உணவாகும். ஒரு குழந்தைக்கு 4 மாதம் முடியும் வரை அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே தாய்ப்பாலிலிருந்து கிடைக்கின்றன. ஆனால் 4 மாதங்களுக்குப் பின்னர், அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டும் போதாது. வளரும் குழந்தைக்கு கூடுதலாக, மேலும் உணவு தேவைப்படுகிறது. குழந்தைக்கு கூடுதல் ஆகாரம் அளிக்கவில்லையெனில் வயதிற்கேற்ப வளர்ச்சி பெறாது. குழந்தையின் வளர்ச்சி தடைப்பட்டு விடும்.

திரவ உணவு

ஆரம்ப நிலையில், திரவ உணவை குழந்தைக்குப் புகட்ட வேண்டும். பசும்பால், வேக வைத்து கடைந்த உருளைக்கிழங்கு, அவரைப்பிஞ்சு, காரட், பசுங்கீரைகள் போன்றவற்றைக் கொடுக்கலாம். “குழந்தைக்குத் தரும் பாலில், சிறிதளவே தண்ணீர் கலக்கலாம். அதிகமாக தண்ணீர் சேர்த்தால் பாலின் அளவு குறைந்து விடும். பாலின் அளவு குறையும் போது, குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய சத்தும் குறைந்து விடுகுறது. குழந்தை 5 அல்லது 6 மாதங்கள் நிறைந்தவுடன், கூழ் போன்ற ஆகாரத்தைச் சாப்பிடும். தானிய வகைகள் தினை வகைகள் போன்றவற்றைக் கஞ்சியாகவோ, கூழாகவோ தயாரித்துக் கொடுக்கலாம்.

கூழ் தயாரிக்கும் போது, அதில் கொஞ்சம் பருப்பு வகைகளையும் மறவாமல் சேர்க்கவும். சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பருப்பு வகைகள் கொடுக்க விரும்புவதில்லை. இந்த பருப்பு வகைகள், குழந்தைக்கு வாயுவை உண்டாக்கும். வயிறு பருத்து விடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் பருப்பு வகைகள் கூழை ஊட்டச்சத்து நிறைந்ததாக ஆக்குகின்றன. அத்துடன், ஓரளவு அதிகமாக பருப்புக்களை சீரணிக்கும் சக்தி, குழந்தைகளுக்கு உண்டு.

குழந்தைக்குத் தயாரிக்கும் கூழில், பசுங்கீரை போன்ற காய்கறி வகைகளையும் சேர்க்கலாம். இத்தகைய பசுங்கீரை வகைகளில் எ.பி.சி, இரும்புச் சத்து, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளன. இவற்றை குழந்தைக்குப் புகட்டினால், குழந்தையின் கண்பார்வை நன்கு விளங்கும். ரத்தமும், எலும்பும் கூட ஆரோக்கியமானவையாக இருக்கும்.

கிச்சடி ஒரு சிறந்த சத்துள்ள தயாரிப்பாகும். குழந்தைகள் இந்த உணவை எளிதில் சீரணித்துவிடுகின்றன. ஒரு குழந்தைக்கு ஒரு நாளிற்கு, கீழ்க்காணும் தயாரிப்பு போதுமான உணவாகும்.

கிச்சடி

தேவையான பொருட்கள்

அரிசி               –50கிராம்

வறுத்த பாசிப்பருப்பு –25கிராம்

கீரை (முளைக்கீரை) –1கட்டு

உப்பு                -தேவையான அளவு

செய்முறை

அரிசியையும், பருப்பையும் சுத்தம் செய்து கழுவி, ஒன்றாகச் சேர்த்தே வேக விடவும். கீரையை வேக வைத்து, சுத்தமான ஒரு துணியால் வடிகட்டி விடவும். கீரையின் வடிகட்டிய நீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். சமைத்த அரிசி மற்றும் பருப்புடன், இந்த வடிகட்டிய சாரை ஒன்றாக சேர்க்கவும். இத்துடன் தேவையான உப்பைக் கலக்கவும். தயாரித்த அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கொடுக்கலாம்.

பழ உணவு

இது போக, வாழைப்பழங்கள் போன்ற மிருதுவான கனிந்த பழங்களை, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நன்கு கடையப்பட்ட பழங்கள் சிறந்த உணவாகும். இவற்றில் நிறைய சத்துக்கள் உள்ளன. குழந்தைகளாலும் எளிதில் சீரணிக்க முடிகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களின் சாறுகளையும், குழந்தைகளுக்குப் புகட்டி பழக்கப்படுத்தலாம். இவற்றில் பெருமளவுக்கு வைட்டமின் சிஉள்ளன.

இறைச்சி உணவு

குழந்தைக்கு ஒரு வயது முடிந்தவுடன், முட்டைகளையும், இறைச்சியையும் கொடுக்கலாம். துவக்கத்தில் முட்டையை கொஞ்சம் அரை வேக்காட்டில் தயாரித்துக் கொடுக்கலாம். இத்தகைய உணவுகளுக்கு ஆகும் செலவு உங்களுக்குக் கட்டுபடியானால், உங்கள் குழந்தைக்கு இத்தகைய உணவை தொடர்ந்து அளிக்கலாம்.

நாள்தோறும் இத்தகைய உணவுகளைத் தயார் செய்து கொண்டிருக்க, தாய்மார்களுக்கு போதிய கால அவகாசம் இல்லாமற் போகலாம். அப்போது திடீர் என்று தயாரித்து விடக் கூடிய உடனடி தயாரிப்புகளை செய்து வைத்துக் கொள்ளலாம். இதற்கு உடனடி தயாரிப்புப் பொடிகளை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். உணவு தானியங்கள், தினை வகைகள் கோதுமை, கேழ்வரகு, கம்பு போன்றவை மற்றும் பருப்பு வகைகள் கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு போன்றவை ஆகியவற்றை, முதலில் வறுத்துக் கொள்ளவும். பிறகு இவற்றைத் தனித்தனியாக அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடிகளை ஒன்றாகக் கலந்து சுத்தமான டப்பாக்களில் சேமித்து வைக்கலாம். ஒரு சில மாதங்களுக்கு இது கெடாமல் இருக்கும். உணவு புகட்டத் தேவைப்படும்தோதெல்லாம், இந்தப் பொடிகளைக் கொண்டு கூழ் தயாரித்து விடலாம்.

உடனடி உணவு தயாரிப்பு முறையை ராகினா என்று அழைக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு ஒரு தினத்துக்குப் போதுமான உணவாகும் இது.

ராகினா

தேவையான பொருட்கள்

கேழ்வரகு              –60கிராம்

வறுத்த கடலைப்பருப்பு –20கிராம்

சர்க்கரை               –50கிராம்

செய்முறை

ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். பொடி செய்யப்பட்ட பொருட்களை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். ஒன்றாகச் சேர்த்தவற்றை வேக வைக்கவும். இந்த கூழுடன் பாலையும் நீங்கள் சேர்ப்பதால் இந்தக் கூழ், மேலும் அதிகச் சத்து நிறைந்ததாகிறது. கேழ்வரகு இல்லையென்றால் கோதுமையையோ, கம்பையோ பயன்படுத்தலாம். கடலைப்பருப்பு கிடைக்கவில்லையென்றால் வேறு ஏதாவது பருப்பு வகைகளைப் பயன்படுத்தலாம்.

சில குறிப்புகள்

குழந்தைக்கான உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் கீழே தரப்படுகின்றன. இந்த விதிகளைப் பின்பற்றினால் குழந்தையை நோய் அணுக விடாமல் பாதுகாக்க முடியும்.

குழந்தை உணவைத் தயாரிப்பதற்கு முன்னால் கைகளை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.குழந்தையின் பாத்திரங்களையும், கோப்பைகளையும், கண்ணாடி டம்ளர்களையும் நன்கு அலம்பவும்.

குழந்தையின் உணவைத் தயாரிப்பதற்கு எப்பொழுதும் கொதித்து ஆறிய தண்ணீரையே பயன்படுத்தவும்.

கிராமப்பகுதிகளில் வாழும் பல தாய்மார்கள் தத்தம் சின்னக் குழந்தைகளுக்கு கூடுதலான ஆகாரம் கொடுப்பதில்லை. குழந்தைகளால் திட உணவையோ அல்லது ஓரளவு திட உணவையோ சீரணிக்க முடியாமல் போகலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இது ஒரு தவறான கருத்தாகும்.

குழந்தைக்குத் தரும் தாய்ப்பாருடன் கூடவே, மேலும் கூடுதலாக, உணவு அளிப்பதை, மெதுவாகப் படிப்படியாகத் துவக்க வேண்டும். ஆரம்பத்தில், இத்தகைய கூடுதல் உணவை, குழந்தை விரும்பாமலும் இருக்கலாம். ஆனால், குழந்தை இந்த உணவை ஏற்று, உண்ணத் தொடங்கும் வரை, அதனை ஊக்குவித்து, விரும்பச் செய்ய வேண்டும்.

ஒரு நேரத்தில், ஒரு குழந்தை கொஞ்சமாகத்தான் உணவு உட்கொள்ளும். ஆனால், இந்தக் கொஞ்ச உணவு, அதன் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் போதுமானது அல்ல. ஆகவே, ஒவ்வொரு நாளும், குழந்தைக்குத் தேவையான உணவை, அதற்கு அளித்தாக வேண்டும். எனவே, தினசரி 4-5 முறைகள் குழந்தைக்கு உணவூட்ட வேண்டும்.

உணவு நலம் மே 2011

குழந்தைகளுக்கு ஏற்ற உணவுகள், திரவ உணவு, சில குறிப்புகள், தாய்ப்பால், ஊட்டச்சத்து, தானிய வகைகள், தினை வகைகள், பருப்புவகை, பெற்றோர்கள், கண்பார்வை, ரத்தம், எலும்பு, ஆரோக்கியம், கிச்சடி, செய்முறை, அரிசி, வறுத்த பாசிப்பருப்பு, கீரை, உப்பு, பழ உணவு, வாழைப்பழம், கனிந்த பழங்கள், ஆரஞ்சு, சாத்துக்குடி  வைட்டமின், சி, இறைச்சி உணவு, முட்டை, இறைச்சி, உணவு, தானியங்கள், கோதுமை, கேழ்வரகு, கம்பு, பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு  ராகினா, செய்முறை, கேழ்வரகு, வறுத்த கடலைப்பருப்பு, சர்க்கரை,

குழந்தை, உணவுப்பொருட்கள், நோய், கைகள், குழந்தையின் பாத்திரங்கள், கோப்பைகள், கண்ணாடி டம்ளர், கிராமப்பகுதி, தாய்மார்கள், உடல் வளர்ச்சி, ஆரோக்கியம்,


Spread the love