நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனையும், குளுக்கோசையும் உடலில் இருக்கும் திசுக்கள் அனைத்திற்கும் கொண்டு சென்று கொடுத்து விட்டு, அங்குள்ள கழிவுகளையும், கார்பன் டை ஆக்ஸைடையும் திருப்பிக் கொண்டு வந்து வெளியேற்றுவது தான் இரத்தத்தின் முக்கிய பணியாகும். இதற்கு பெரிதும் பயன்படுவது இரத்த சிவப்பணுக்கள் ஆகும்.
சிவப்பு அணுவில் ஹீமோகுளோபின் என்ற சிகப்பு நிறமி தான் மேற்கூறிய பணியை சிறப்பாக செய்கிறது. இரத்த சோகை என்றால் என்ன? என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் கூறும் பதில், உடலில் இரத்தம் குறைவாக இருத்தல் என்கிறார்கள். இது உண்மை தான். உடலில் உள்ள இரத்தத்தின் அளவு குறைகின்ற பொழுது, அதில் காணப்படும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இதன் விளைவால், அதிலிருக்கும் ஹீமோகுளோபின் அளவும் குறைந்து இரத்தசோகை நோய் ஏற்படக் காரணமாகிறது.
இரத்த சிகப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அனீமியா என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனால் இரத்தம் எடுத்துச் செல்லும் ஆக்ஸிஜன் வாயுவின் அளவும் குறைந்து போகிறது. இதன் காரணமாக, இதயமானது இரத்தத்தை மேலும் வேகமாக பம்ப் செய்ய வேண்டிய அவசியமாகிறது. இதன் காரணமாக படபடப்பும், மார்புத் துடிப்பும் அதிகமாகிறது.
இரத்த சோகை அதிகமாகி இவ்வாறு இதயம் விரைந்து செயல்படுவதில் போதாமல், பற்றாக்குறையாக இருந்தால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உடலில் மந்தமான உணர்வு தோன்றும். தலைவலி, மயக்கம், நினைவுத் திறன் மங்குதல் அல்லது குறைதல், பதட்டம், எரிச்சல் ஏற்படும். காது அடைப்பது போலவும், கண்களில் பட்டாம் பூச்சி பறக்கும் உணர்வாகவும், விரைவில் களைப்படைந்து உடல் நிலை பாதிக்கப்படும் பசி உணர்வும் குறைந்து விடும்.
இந்தியாவில் இரத்த சோகை நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் தான். இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று எந்த அளவை வைத்து நாம் கணக்கிடுகிறோம் தெரியுமா? ஹீமோகுளோபின் அளவானது மனிதனின் உடலில் நூறு மைக்ரோ லிட்டரில் 12 கிராம் இருத்தல் வேண்டும். இந்த அளவிற்கும் குறைவாகக் காணப்பட்டால் இரத்த சோகை உள்ளது என்று கூறிவிடலாம். மருத்துவ பரிசோதனைகளில்,
ஒரு மனிதனை நேரடியாக பரிசோதிக்கும் பொழுது, கண் இமைகளைச் சிறிது தள்ளி உற்றுப் பார்க்கும் பொழுது தெரிந்து கொள்ளலாம். சிவப்பாக காணப்படாமல், வெளுப்பாக காணப்பட்டால் இரத்த சோகை எனலாம். அது போல, உள்ளங்கைகளை நன்றாக பிரித்து நீட்டிப் பார்த்தால், சிவப்பாக இருக்க வேண்டும். அதே போல உதடுகளும் சிவப்பாக தெரிய வேண்டும். சாதாரண நிலையில், ஒருவரை இரத்த சோகையில் உள்ளாரா என்பதை இவற்றை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம்.
இரத்த சோகை ஏற்படுவதற்குரிய காரணங்கள் என்ன?
மனித உடலில் இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் H12 மற்றும் சாப்பிடும் உணவில் போதுமான அளவு புரதச் சத்து இருப்பது அவசியம். மேற்கூறிய சத்துக்கள் போதுமான அளவு காணப்படவில்லையெனில் இரத்த சோகையால் ஒருவர் பாதிக்கப்படுவார். சிவப்பு அணுக்களில் உள்ள இரும்புச் சத்து பிரிக்கப்பட்டு மீண்டும், மீண்டும் உபயோக்கிக்ப்படுகிறது. இதுவே, புதிதாக ஹீமோகுளோபின் உருவாகக் காரணமாக உள்ளது.
இதனால் இரத்த குறைவு ஏற்படும் பொழுது, இழந்த இரத்தத்துடன் இரும்புச் சத்தைத் திரும்ப பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. உடல் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில் வெற்றிலைப் பாக்கு போடுதல், அளவுக்கு மீறி காபி, தேனீர் அருந்துதல், மது, சிகரெட் பிடித்தல், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், வறுத்த உணவுகளை உட்கொள்ளும் பொழுது இரத்த சோகைக்கு காரணமாகிறது.
பாக்கில் உள்ள அர்க்கா என்னும் வேதிப்பொருள் இரத்த உற்பத்தியைப் பாதிக்கிறது. எலும்பைச் சுற்றியுள்ள நிணம் செயல்படுவதை பாதிக்கிறது. நிணம் குறையும் பொழுது புற்று நோய் ஏற்படக் கூடிய சூழ்நிலையும் அமைகிறது. எலும்பை அரிக்கும் மென்பானங்களை அருந்துவதாலும் சோகை ஏற்படுகிறது. எலும்பைச் சுற்றியுள்ள நிணம் குறையவும் வாய்ப்பை மென்பானங்கள் ஏற்படுத்துகிறது.
மனிதன் ஒரு சில நோய்களால் பாதிக்கப்படும் பொழுதும், பாக்டிரியா கிருமிகளின் பாதிப்பின் காரணமாகவும், உட்கொள்ளும் ஒரு சில மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாகவும் இரத்த சோகை ஏற்படுகிறது. மேற்கூறிய காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதால் இரத்த சோகையை குணப்படுத்தலாம்.
கர்ப்பிணிப் பெண்களைப் பாதிக்கும் இரத்த சோகை
இந்தியாவிலும், வளர்ந்து வரும் நாடுகளிலும் தான் அதிக அளவில் கர்ப்பிணிப் பெண்கள் இரத்த சோகையின் காரணமாக உயிரிழக்கிறார்கள். ஆரோக்கியமாகக் காணப்படும் கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கூட சிறிதளவாவது கறுவுற்றுள்ள காலத்தில் இரத்த சோகை இருக்கத்தான் செய்கிறது. கர்ப்பக் காலத்தில் தாய்க்கும், தனது குழந்தைக்கும் என்று இருவருக்கும் தேவைப்படும் இரத்த அளவை தாயே தான் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதில் இரத்த சோகையும், சத்துக் குறைவு, உள்ள ஒரு பெண் கருவுற்றால் சோகை நோயின் தாக்கம் மேலும் அதிகரித்து விடுகிறது.
இதன் எதிரொலி அப்பெண்ணின் பிரசவத்தில் உணரலாம். இரத்த சோகையுள்ள கர்ப்பிணிப் பெண், பிரசவிக்கும் பொழுது மூச்சுத் திணறலும் அதனால் இதயம் பாதிக்கப்படுவதுடன், அதிக அளவு உதிரப் பெருக்கு ஏற்பட்டு தனது உயிரையும் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதன் காரணமாகத் தான் இரத்த சோகையைத் தவிர்க்க, அறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை கர்ப்பக் காலத்தில் பிரசவிக்கும் வரை செய்யப்படுகிறது. கர்ப்பத்தினுடைய மூன்று நிலைகளிலும் ஹீமோகுளோபின் பரிசோதனையை செய்து கொள்வது என பரிந்துரைக்கப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் அதிகப்படியான மசக்கையின் காரணமாக ஒரு சிலருக்கு இரத்த சோகை ஏற்படலாம். கர்ப்பமான முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை ஒன்றுமே சாப்பிடப் பிடிக்காமல் இருக்கும் காரணத்தினால் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைய சந்தர்ப்பம் உண்டு என்பதால் கர்ப்பிணிப் பெண்கள், அந்த நேரத்தில் ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாதவிலக்கின் போதும், பிரசவத்தின் போதும் இவ்வாறு இரத்த இழப்பு ஏற்படுகிறது, இதன் காரணமாகத் தான் கருவுற்ற பெண்கள், இளம் வயதுப் பெண்கள் இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறுகிறோம். பிறக்கும் குழந்தைகளுக்கு இது நல்லது. இரும்புச் சத்து அவர்கல் போதுமான அளவு பெறுவதற்கு மாத்திரைகளாகவோ, ஊசி மூலம் உடலில் செலுத்திக் கூடியதாகவோ இதனை அவர்களுக்கு வழங்கலாம்.
இரத்த சோகையைத் தவிர்க்க உதவும் உணவுகள்
அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளான வெங்காயம், உருளைக் கிழங்கு, கீரை இலைகள் நிறைந்த காய்கறிகளில் இரும்புச் சத்து அதிகமுள்ளது. பழங்கள், கீரைகள், இலைகள் நிறைந்த காய்கறிகளில் ஃபோலிக அமிலச் சத்து கிடைக்கிறது.
பால், பாலினால் தயாரிக்கப்படும் பால் சார்ந்த பொருட்கள், பருப்புகள், சோயாபீன்ஸ், கடலை, பொரிகடலைகளில் புரதச் சத்து கிடைக்கிறது. முட்டை, இறைச்சியில் ஈரம் போன்றவற்றில் இரும்புச் சத்து உள்ளது. மேற்கூறிய உணவுகளை கர்ப்பக் காலத்தில் உள்ள பெண்கள் சாப்பிடுவது மிகவும் அவசியமானது.
வெல்லம், பேரிச்சம் பழம், தேன். வேர்க்கடலை, முருங்கை கீரை முதலியவற்றை தொடர்ந்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து மற்றும் ஃபாலிக் அமிலம் உள்ள மாத்திரைகளை பிரசவ காலம் முழுவதும் தொடர்ந்து உட்கொள்வது நல்லது.
மேற்கூறிய சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் தனக்குப் பிறக்கும் குழந்தையின் தலை பெரிதாக இருப்பதுடன், பிரசவம் ஆவதும் எளிதாக அமையாது போகும் என்று தவறாக் நினைத்துக் கொள்ளும் பெண்கள் இருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் இரண்டாவது நிலையில் குடற்புழு நீக்க பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதனால் சத்துக்களை உறிஞ்சும் குடற்புழுக்கள் காணப்பட்டால் அவை வெளியேற்றப்படும்.