வேதம் சொல்லும் உணவின் சிறப்பு

Spread the love

உணவினால் தான் எல்லா பிராணங்களும் இயங்குகின்றன. உலகிலேயே பழமையான நூல் வேதங்கள் தான். நம் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வேதங்கள் சிந்தனைகளை தூண்டி வாழ்க்கையை வாழும் விதத்தை சொல்கிறது.

            வேதங்களின் சாராம்சத்தை விளக்கி கூறுபவை உபநிடதங்கள். மொத்தம் 108 உபநிடதங்களில், 14முக்கியமானதாக கருதப்படுகின்றன. அவற்றில் தைத்தீரிய உபநிடதம் ஒன்று. யஜுர் வேதத்தின் இருபிரிவில் ஒன்றான கிருஷ்ண யஜுர் வேதத்தில், உரைநடை வடிவில், தைத்தீரிய உபநிடதம் காணப்படுகிறது. தைத்தீரியம் என்பது தித்திரிப் பறவைகளை (சிட்டுக்குருவியை) குறிக்கும். வைசம்பாயன ரிஷியிடமிருந்து,சிட்டு குருவிகளின் வடிவில் இருந்து கொண்டு அவரின் மாணவர்கள் இந்த உபநிடதத்தை பயின்றதால், இந்தப் பெயர் வந்தது.

            தைத்தீரிய உபநிடத்தில் வாழ்க்கைக் கல்வி, மனிதன், கடவுள் என்று மூன்று பகுதிகள் உள்ளன. இதற்கு உரை எழுதிய பெரியோர்கள் ஆதி ஸ்ரீசங்கார், ஸ்ரீமத்வர், ஸ்ரீ வித்யாரண்யர் போன்றவர்கள்.

            இந்த உபநிடதத்தின் 2 ம் பகுதியில் உள்ளவைப்பற்றி சொல்லப்படுவதை பார்ப்போம்.

·           நம்முன் உறையும் ஆன்மாவாகிய கடவுளிடமிருந்து ஆகாயம் (வெளி) தோன்றியது. அதிலிருந்து காற்று; காற்றிலிருந்து நெருப்பு, அதிலிருந்து நீர்; நீரிலிருந்து பூமி, பூமியிலிருந்து செடி கொடிகள். செடி கொடிகளிடமிருந்து உண்டாவது உணவு. உணவிலிருந்து மனிதன் தோன்றினான்.

·           உணவிலிருந்தே ப்ரஜைகள் (மனிதர்கள்) தோன்றினர். பூமியில் உள்ள அனைத்தும் உணவிலிருந்து உண்டாகி, உணவாலேயே வாழ்ந்து, உணவுடனேயே கடைசியில் கலக்கின்றன.

·           உணவே உயிர்களின் ஆரம்பம். உணவே அனைத்துக்கும் மருந்து. கடைசியில் உணவே உயிர்களை உண்கின்றது.

மேலும் உணவைப் பற்றிய முக்கிய கருத்துகளை மூன்றாம் பகுதியில்

கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்.

            வருண மகரிஷியின் புதல்வரான பிருகு, தன் தந்தையிடம் “கடவுள் என்பவர் யார்?” என்று கேட்கிறார். “உணவு, பிராணன், கண், காது, மனம், பேச்சு ஆகியவையே கடவுள்” என்று கூறினார். இதைக் கேட்ட பிருகு, ‘உணவு எப்படி இறைவனாக முடியும்’ என்று குழம்பி, மறுபடியும் தந்தையிடம் கேட்கிறார். வருணர்” உயிரினங்கள் அனைத்தும் எவரிடமிருந்து பிறக்கின்றனவோ, பிறந்த பின் யாரால் வாழ்கின்றனவோ, இறந்த பின் யாரிடம் ஒடுங்குகின்றனவோ, அவரே கடவுள். அவரை அறிந்து கொள்” என்கிறார்.

            கடவுளை அறிய பிருகு தவத்தை மேற்கொள்கிறார். படிப்படியாக பிருகு ஐந்து நிலைகளை தாண்டி பிருகு உணவே கடவுள், பிராணனே கடவுள், மனமே கடவுள், புத்தியே கடவுள், ஆனந்தமே கடவுள் என்பதை அறிகிறார். தனது உணவு, அதனால் ஏற்படும் பிராணசக்தி, அதன் (உணவு) மூலம் உலகை அறிய உதவும் கண், காது, மனம், பேச்சு, இவை தான் பரம்பொருள். உணவைப் பற்றி மேலும் சில அரிய கருத்துகளை தைத்தீரிய உபநிடதம் சொல்கிறது.

·           உணவை தெய்வீகமாக போற்ற வேண்டும்.

·           உணவை பழிக்கக் கூடாது. உடலின் இயக்கத்துக்கு இன்றியமையாதது உணவு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

·           உடலுக்கு தேவையான அளவு உணவை உண்ண வேண்டும். உணவின் மீது விருப்பு, வெறுப்பு கூடாது.

·           உணவை ஏராளமாக உற்பத்தி செய்ய வேண்டும். இது மனிதர்களின் கடமை.

·           உணவு வேண்டி வரும் யாரையும் திருப்பி அனுப்பக் கூடாது. விருந்தினர்க்கு உணவளிப்பது நமது கடமை. அதிதிகள் எப்போது வந்தாலும் அவருக்கு உணவு சித்தமாக, தாராளமாக இருக்க வேண்டும்.

·           தைத்தீரிய உபநிடதம் “உண்பவர் தோன்றுவதற்கு முன்பே உணவு உண்டானது” என்கிறது. உதாரணமாக,குழந்தை பிறக்கும் முன்பே, தாய்ப்பால் தயாராக காத்திருக்கிறது.

·           உணவை சிறந்த முறையில் தயாரிப்பவனுக்கு சிறந்த முறையில் உணவு கிடைக்கிறது. ————– உணவை முறைப்படி உண்பவன் அது நன்கு செரித்து தனக்கு தேவையான சத்துக்களை கிடைக்கப் பெறுகிறான். முறையற்ற, ஒவ்வாத உணவுகளை உண்பவன் நோய்வாய்ப்பட்டு உணவாலேயே மரிக்கிறான்.

            ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு தோன்றிய இந்த உபநிடத்தின் உயர்ந்த கருத்துக்கள் தற்போதும் கடைப்பிடிக்கத்தக்கவை.  


Spread the love