பெண்கள் தங்கள் உடலை அன்றாடம் பேணி பாதுகாக்க வேண்டும். ஆண்களைப் போல் அல்லாது பெண்கள் மாதந்தோறும் மாதவிடாய், கருவுறுதல், கர்ப்பம் என்றும் தாய்மை, பாலூட்டுதல் மாதவிடாய் நிற்கும் சமயம் என பல பல பிரச்சனைகளை அன்றாட வாழ்க்கையில் சந்திக்க வேண்டியுள்ளது.
இதனை அனைத்து பெண்களும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களது அன்றாட வாழ்க்கையில் இதற்காக சில நிமிடங்கள் ஒதுக்கிட வேண்டும்.
வயதுக்கு வந்து உடல் தேறாத இளம் பெண் குழந்தைகளுக்கு ஊர வைத்த முளைக்கடலையை முட்டையின் மஞ்சள் கருவுடன் சேர்த்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் கலந்து கொடுத்து வந்தால் உடல் தேறிவிடும்.
இரத்த சோகையால் மாதவிடாய் ஒழுங்காக வராமல் இருந்தால் கொத்த மல்லிக்கீரை, புதினாக் கீரை, வெந்தயக் கீரை போன்றவற்றில் துவையல் அரைத்து கொடுத்து வந்தால் இரத்த சோகை நீங்கி மாதவிடாய் சீராகும்.
புதினா கீரை அதிகம் சேர்த்து வந்தால் மாதவிடாய் சமயங்களில் ஏற்படக்கூடிய வயிற்று வலி, இடுப்பு வலி, கால் வலி போன்றவை குறையும். கறிவேப்பிலை, சோயா, இஞ்சி, மாதுளம் பழம், கொள்ளு, உளுந்து, நல்லெண்ணெய் போன்றவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்து உபயோகித்து வந்தால் மாதவிடாய் கோளாறுகள் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மாதவிடாய் கோளாறுகள் நீண்ட நாட்களாக உள்ள பெண்கள் சோற்றுக்கற்றாழை இலையை எடுத்து அதன் நடுப்பகுதியான கூழினை தனியாக எடுத்து அதனை மிக்ஸியில் லேசாக அரைத்து சிறிது புதினா இலை சேர்த்து அறை எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து தேவைக்கு ஏற்ப சர்க்கரையோ, வெல்லமோ கலந்து சாப்பிட்டு வர மாதவிடாய் கோளாறுகள் அனைத்தும் அகலும். மாதவிடாயின் போது இரத்தப்போக்கு குறைவாக உள்ளவர்கள் பப்பாளிக்காயை சமைத்து உண்டு வந்தால் இரத்தப்போக்கு அதிகரிக்கும்.
ஆயுர்வேதம் .காம்