தடுப்பாற்றல் பெற

Spread the love

ஒரு முறை வந்து விட்டால் மறுமுறை இந்நோய்கள் வரமாட்டாது என்று நாம் திடமாக நம்பினோம். நமது நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை. இது எவ்வாறு சாத்தியமாயிற்று? இந்த நோய்களை எதிர்க்கும் Immunity எனப்படும் எதிர்ப்பாற்றலை நாம் பெற்று விட்டோம் என்பது தான் காரணம். இது போன்று நம்மைத் தாக்கிய பல நோய்களிடமிருந்தும் சிறுகவும் பெருகவும் பல விதமான நோய் எதிர்ப்பு சக்திகளை நாம் பெறுகிறோம்.

நோய்களை இயற்கையாக எதிர் கொண்டு அவற்றை எதிர்க்கின்ற தடுப்பு சக்தியைப் பெறுவது போல் செயற்கை முறையிலும் நோய்களை எதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும். இதை Immunization அல்லது தடுப்பாற்றல் பெறுதல் என்கின்றனர். ஆன்ட்டிஜென் (antigan) என்னும் புறப்பொருட்கள் உடலினுள் சேருகின்ற போது ஆன்ட்டிபாடீஸ் (antibodies) என்ற எதிர்ப்புப் பொருளை நமது உடல் உற்பத்தி செய்து அதன் மூலம் ஒவ்வாத புறப்பொருளை எதிர்க்கிறது. அப்போது நிகழ்கின்ற உடலின் இயல்புக்கு மாறான செயல்பாடுகளை அலர்ஜி அல்லது ஒவ்வாமை என்று வான்பிர்கே அழைத்தார்.

ஒரு நோய் தீவிரமாக உடலைத்தாக்குகின்ற போது அதனை எதிர்க்கின்ற வகையில் ஏராளமான எண்ணிக்கையில் ஆன்ட்டிபாடீஸ் உடலில் தோன்று கின்றன. பின்னர் அந்த முயற்சியிலே வெற்றி பெற்று நோய் குணமானதும் அந்த நோயை எதிர்த்த ஆன்ட்டி பாடீஸ் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விடுகின்றன என்றாலும் உடலில் சிறிய அளவில் இவை இருந்து கொண்டே இருக்கின்றன. பிறிதொரு முறை அந்நோய் தாக்க முயல்கின்ற போது இதே ஆன்ட்டி பாடீஸ்கள் கிளர்ந்தெழுந்து நோய்க்கிருமிகளை (ஆன்ட்டிஜென்) எதிர்த்து விரட்டி நோய் வரமால் செய்துவிடுகின்றன. நாம் இந்த நோயின் எதிர்ப்பு ஆற்றலை பரம்பரை வழியாகத் தாயிடமிருந்தும் நாமே நோயுற்று அதன்பிறகு பெற்றும், தடுப்பு மருந்துகளின் மூலம் பெற்றும் வளர்த்து கொள்கிறோம். இந்த ஆன்ட்டி பாடீஸ் பல நேரங்களில் நமக்குத் தெரியாமலே நோய்க் கிருமிகளையும், உடலுக்கு ஊறு செய்யும் பிற புறப்பொருள்களையும் போரிட்டு விரட்டி விடுகின்றன. சிற்சில வேளைகளில் புறப்பொருள் களினால் உடல் கூருணர்ச்சி மிகுந்து (Hyper sensitivity) தாங்க இயலாது போகின்ற போது உடலில் பல மாற்றங்கள் (தும்மல், இருமல், கண், மூக்கில் நீர்வடிதல், வீக்கம், அரிப்பு, சிவந்து போதல் போன்றவை) ஏற்படுகிறது. இதையே அலர்ஜி என்றனர். இதை உண்டுபண்ணும் ஆன்டிஜென்களை அலர் ஜென்ஸ் (Allergens) அல்லது ஒவ்வாமை என்றனர்.

இந்த ஒவ்வாமை உணர்வு அல்லது இயல்பு எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. ஒருவருக்கொருவர் பெரிதும் மாறுபடுகிறது. ஒரே உணவு ஒருவருக்கு ஒத்துக் கொள்கின்ற போது மற்றவருக்கு உடன்படாது போகிறது. பால், குளுக்கோஸ், லேக்டோஸ் போன்ற பால் பொருட்கள் குழந்தைகளுக்குச் சிறந்த உணவாகின்ற போது சில குழந்தை களுக்கு இது ஒவ்வாமல் வயிற்றுப்போக்கு உண்டாகிறது. சில குழந்தைகளுக்குக் கரப்பான் எனப்படும் அரிப்பு, தோலில் செம்மை நிறம் போன்றவற்றை ஏற்படுவதுடன் தோலில் நீர்வடியும் எக்ஸிமாவையும் உண்டு பண்ணலாம்.

ஒவ்வாமையைத் தூண்டுகின்ற பொருள்கள் காற்று, நீர், உணவு, ஊசி, மருந்துகள் போன்றவற்றின் மூலம் உடலை அடைகின்றன.

காற்று மூலம் வீட்டுத் தூசி, ஒட்டடை, பஞ்சுத் துகள்கள், மகரந்தப் பொடி, சிகைக்காய்த் தூள், பூனை, நாய், முயல் போன்ற வீட்டு விலங்குகளின் முடிகள், பறவைகளின் இறகு, அரிசி, கோதுமை போன்ற தானியங்களின் மாவு முதலியன உடலுள் புகுகின்ற ஒவ்வான்களாகும். முட்டை, மீன், நண்டு, தக்காளி, அன்னாசி, சிலவகைக் கிழங்குகள், காய்கறிகள், ஆகியவற்றாலும் ஒவ்வாமை ஏற்படலாம். எல்லோருக்கும் ஒன்றுபோல் இவ்வகைப் பொருட்களால் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. ஒருவருக்கு ஒத்துக்கொள்ளாத பொருள் பலருக்கு ஒத்துப்போய்விடலாம்.

சருமம்

ஒவ்வாமையினால் முதலில் பாதிக்கப் படுவதும் உணர்குறிகளை (Symptoms) முதலில் வெளிப்படுத்துவதும் சருமம் தான்.

1.    செம்மை படர்தல் (Reshes)

2.    டெர்மடைடிஸ் (Dermatitis)

3.    அரிப்பு/தடிப்பு (Urticaria)

4.    கரைப்பான்   (Eczcma)

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்படும் போது கீழ் காணும் கோளாறுகள் ஏற்படலாம். வயிற்றுப் போக்கு, வாந்தி/குமட்டல், இசிவு, வாயு பிரிதல், கண் சிவத்தல், அரிப்பு, நீர் வடிதல், தற்காலிக செவிகேளாமை, செவியில் அரிப்பு, சீழ் வடிதல், மூக்கு, தும்மல், சளி, மூச்சடைப்பு.

உணவு ஒவ்வாமை

உடலில் தோன்றும் பல உணர்குறி களுக்கு உணவு ஒவ்வாமை தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. சாதாரணமாகத் தீங்கில்லாத பல காய்கறிகள், உணவுப் பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையைத் தோற்றுவித்துள்ளன. உருளைக்கிழங்கு, தக்காளி, டீ, காபி போன்ற பொருட்கள் கூட ஒவ்வாமைக்குக் காரணமாக இருக்கக்கூடும். அதே போல் பால், பால் பொருட்கள், முட்டை போன்ற உணவு வகைகள் ஒவ்வாமையைத் தோற்றுவித்து ஆஸ்த்துமா, எக்ஸிமா, தும்மல், இருமல், வயிற்றுக்கோளாறுகள் போன்ற பல உணர்குறிகளைத் தோற்றுவித்துத் தொல்லை தரலாம்.

கோதுமைப் பண்டங்களில் உள்ள  (Gluten) குளுடன் என்னும் புரதப்பொருள் பலருக்கு ஒத்துக்கொள்வதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

காபி மற்றும் டீயில் உள்ள காபீன் என்னும் வேதி தலைவலி, கிறுகிறுப்பு, குமட்டல், மயக்கம் போன்ற தொல்லைகளை ஏற்படுத்தவும் கூடும்.

எனவே, ஒவ்வொருவரும் முயன்று தமக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் எவையெவை என்பதைத் தெரிந்துகொள்வதுடன் எவற்றால் தும்மல், அரிப்பு, வீக்கம் ஆகியவை வருகின்றன என்று கவனித்து அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வான்கள் தாக்கியவுடன் உடலில் ஹிஸ்டாமினும் (Histamine) செரோட்டானினும் (Serotonin) சுரக்கின்றன. அவை உடலைத் தூண்டி எதிர்ப்பாற்றலை உண்டாக்குகின்றன. சில சமயங்களில் இவ்வித ஆற்றல் மிக அதிகமாவதால் கடுமையான விளைவுகளை (Anaphylactic shock) ஏற்படுத்துவதும் உண்டு. இரத்தத்திலும் திசுக்களிலும்  (Ecsinophil) இயோசினோபில்கள் பெருகுகின்றன. தமனிகள் விரிந்து சுரப்பிகள் மிகுதியாகச் சுரந்து மூக்கின் உட்பகுதியும் தொண்டையும் வீங்கி விடுகின்றன. மூக்கின் உட்பகுதியில் கீழ் வளைவு எலும்பின் மேல்படலம் வெளிர் நிறமாகத் தெரியும். இருபக்க மூக்கும் அடைபடுவதால் நுகரும் திறன் குறைந்து விடும். மூக்கில் தும்மலாகத் தொடங்கி தொண்டை வீங்கி, நுரையீரலில் சளி சேர்ந்து மூச்சுவிடக் கடினமாவது ஒவ்வாமையின் வெளிப்பாடு.


Spread the love