நீரிழிவுடன் வாழலாம் வாங்க!

Spread the love

வரக்கூடாத வியாதிகளில், நீரிழிவும் ஒன்று என்பார்கள். ஆனால் தற்போதைய முன்னேறிய சிகிச்சை முறைகளாலும், விழிப்புணர்வாலும், நீரிழிவுடன் வாழலாம். எப்படி என்ற உங்களின் கேள்விக்கு, இதோ பதில்:-

தினசரி செய்ய வேண்டியவை:

உணவுக் கட்டுபாடுகளை கடைப்பிடிப்பது

உடற்பயிற்சி, போதிய உடலுழைப்பு இவற்றால் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது

நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்வது

இரத்த சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ளுதல்

இதற்கான சுலப வழி முறைகள்:-

உணவு:- நீரிழிவு நோய்க்கு கட்டுப்பாடான சமச்சீர் உணவின் அவசியம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஒரு நோயாளிக்கு ஒத்து வரும் உணவு, மற்றொரு நோயாளிக்கு ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எனவே உங்களுக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய உணவை நீங்கள் டாக்டர் மற்றும் டயட்டீசியனுடன் கலந்தாலோசித்து தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். உணவு, நீரிழிவு உண்டாக்கும் பல சிக்கல்களை ஓரளவு தடுக்கும் படி அமைய வேண்டும். முக்கியமாக இதயத்திற்கு இதமான உணவாக இருக்க வேண்டும். ரொட்டி, தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மாமிசம், பால் – பால் சார்ந்த உணவுகள், கொழுப்புகள் போன்ற உங்களுக்கு பழக்கமான பொது உணவுகளிலிருந்தே உங்களின் தினசரி உணவு திட்டத்தை வரையறுத்துக் கொள்ளலாம். இது உங்கள் குடும்பத்தினருக்கும் ஒத்துப் போகும் படி இருப்பதால், உங்களுக்கு என தனி உணவுகளை தயாரிக்கும் அவசியம் இல்லை. இந்த பொது உணவுகளிலிருந்து உங்களுக்கேற்ற உணவை, புத்திசாலித்தனமாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

•           உங்களுக்கு அதிக உடல் பருமனை உண்டாக்காத உணவை தேர்ந்தெடுங்கள்

•           உணவின் அளவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

•           உணவால் கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் அதிகம் ஆகாமல் செய்து கொள்ளுங்கள்.

உணவைப் பற்றிய சில யோசனைகள்:-

உணவுகளை திட்டமிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்

சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். வேளை தப்பி உண்பதை தவிர்க்கவும்.

உட்கொள்ளும் உணவு பாகங்களை தராசில் நிறுத்து சரியான அளவுகளை தெரிந்து கொண்டு உண்ணவும்.

கார்போஹைடிரேட், கொழுப்பு சேர்ந்த உணவுகளை அளவாக உட்கொள்ளவும்

உணவு நேரங்களின் நடுவே பசியெடுத்தால், தண்ணீர் குடிக்கவும்.

வயிறு முட்ட உண்ண வேண்டாம்

மதுகுடிப்பது கூடாது.

டைனிங் டேபிளில்’ (மேஜையில்) சாப்பிடவும்

காய்கறிகள், தானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்

உணவை மென்று சாப்பிடவும்

எப்போதும் கைவசம் சிறிது சர்க்கரை, சாக்லெட் போன்றவற்றை வைத்துக் கொள்ளவும். தாழ்நிலை சர்க்கரை ஏற்பட்டால் உடனே உட்கொள்ளவும்.

சமச்சீர் உணவுக் கலவையை உட்கொள்வது நன்மை பயக்கும் – கார்போஹைடிரேட்ஸ் (அளவாக) புரதம், கொழுப்பு (அளவாக) விட்டமின், தாதுப்பொருட்கள் – இவைகள் உணவில் தேவையான அளவு இருக்க வேண்டும்

உணவு மாற்றங்களை (தேவையானால்) தீடிரென்று கொண்டுவராதீர்கள். படிப்படியாக செய்யவும்

காய்கறி, பழங்களை (சிபாரிசு செய்யப்பட்ட), 5 தடவை கூட ஒரு நாளில் உட்கொள்ளலாம். இதனால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.

உப்புள்ள பதார்த்தங்கள் இவற்றை குறைக்கவும்.

அதிக உடல் பருமன், பல நோய்கள், குறிப்பாக டயாபடீஸ், உண்டாக காரணமாகிறது.

உடல் பருமனை சரியான அளவில் வைக்க:-

சிறு தட்டுக்களில் உண்ணவும். உணவின் அளவை குறைக்கவும்

காலை உணவை தவிர்க்க வேண்டாம்.

மெதுவாக உண்ணவும்

வேகவைத்த உணவுகள் நல்லது. பொறித்து, வறுத்த உணவுகள் வேண்டாம்.

காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

மசாலா, உணவுக்கு வாசனை, சுவையூட்டும் பொருட்கள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்லது என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி. இது பற்றி மேலும் ஆய்வுகள் தேவை.

சுறுசுறுப்பாக இருங்கள்:

‘சோம்பித்திரியேல்’ என்கிறது ஆத்திசூடி. உடலை, உள்ளத்தை வேலையின்றி வைக்காதீர்கள். “சோம்பர் எம்பவர் தேம்பித்திரிவர்” என்கிறது கொன்றை வேந்தன். யாதொரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக அலைபவர்கள் அல்லல் படுவார்கள். உடலுழைப்பும், உடற்பயிற்சியும் தினசரி இருக்க வேண்டும். ஆயுர்வேத மேதை சுஸ்ருதர் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, நீரிழிவு நோயாளிகள் 4 மைல் நடக்க வேண்டும், கிணறு வெட்டுவது போன்ற உடலுழைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். நடப்பது, நீச்சல், நடனம், சைக்கிள் ஓட்டுவது, விளையாட்டு இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை செயல்படுத்துங்கள். வீட்டு வேலைகள் தோட்ட வேலைகளை தினசரி செய்யவும். இதனால் விளையும் நன்மைகள்:-

•           சரியான உணவும், உடற்பயிற்சியும் சேர்ந்தால், நீரிழிவை (டைப் 2) தடுக்கும் வாய்ப்புகள் 58%.

•           உடற்பயிற்சி உங்கள் எடையை சரியான அளவில் வைக்க உதவும்.

•           இதயம், நுரையீரலுக்கு வலிமை கூட்டும்.

•           இன்சுலீனின் வேலையை ஊக்குவிக்கும்.

•           உடலுழைப்பு / வேலைகளால் சக்தி பெருகும்.

•           மன அழுத்தத்தை குறைக்கும்

உடற்பயிற்சி ஆரம்பிக்கும் முன், உங்களின் டாக்டருடன் கலந்து ஆலோசியுங்கள். நீரிழிவு நோயாளிகள், சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உயர் இரத்த அழுத்தம், கண்பாதிப்புகள் இவை உள்ளவர்கள் எடை தூக்குதல் போன்ற கனரக உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். யோகாவில் நீரிழிவு நோய்க்கென பிரத்யேக ஆசனங்கள் உள்ளன.

ஒரு நாளில் 30 நிமிடமாவது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, (ஏதாவது ஒரு வேலையில்) இவற்றில் உடலை ஈடுபடுத்துங்கள். இது வரை உடலை பயிற்சியின்றி வைத்திருந்தால், முதலில் 5-10 நிமிடங்களிலிருந்து ஆரம்பிக்கவும். போகப் போக நேரத்தை அதிகரிக்கவும். இரத்த சர்க்கரை 100 அல்லது 120 க்கு குறைவாக இருந்தால், உடற்பயிற்சிக்கு முன் சிற்றுண்டியை உட்கொள்ளவும். பயிற்சியின் போது தாழ் நிலை சர்க்கரை நிலை ஏற்பட்டால், குளூக்கோஸ் மாத்திரைகள், இனிப்பு, பழரசம் போன்றவைகளை உடனே உண்ணவும்.

உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனேயே பலன்களை எதிர்பார்க்காதீர்கள், ஒரு தடவை அரசமரத்தை சுற்றி வந்து அடிவயிற்றை தொட்டுக் கொண்ட பெண் போல. உடனேயே பலன்கள் புலப்படாது. சில வாரங்கள் போக வேண்டும். ஒரே மாதிரி உடற்பயிற்சிகள் “போரடித்தால்” மாற்றிக் கொள்ளவும். உடற்பயிற்ச்சியால் எலும்புகள், தசைகள், மூட்டுக்கள் இவை வலுவடையும். ஆனால் உடலை வருத்தி, உடல் பாதிப்புகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும், இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது.

உடற்பயிற்சி என்றவுடன் ஒரு பெரிய “ஜிம் மும்”, ட்ரெட்மில் போன்ற பெரிய பயிற்சி உபகரணங்களும் உங்கள் மனதில் தோன்றும். இதெல்லாம் தேவையில்லை. உடற்பயிற்சி என்றால் இருப்பது. அதாவது திட்டமிட்ட உடல் இயக்கம். நடப்பதே போதும். ஒரு நாளைக்கு 30-45 நிமிடங்கள், வாரத்தில் ஜந்து முறை பயிற்சிகள் செய்தாலே போதுமானது.

நீரிழிவு மருந்துகள்

டாக்டர் உங்களுக்கு கொடுத்த மருந்துகளை தினமும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். இந்த மருந்துகள் / மாத்திரைகளால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் டாக்டரிடம் சொல்லவும். உடல் எடை, பயிற்சிகள் மூலம் அல்லது வேறுகாரணங்களால் 5-10 கிலோ குறைந்தால் டாக்டரிடம் தெரிவிக்கவும். ஒரு வேளை மருந்துகள் குறைக்கப்படலாம். டைப் – 2 நோயாளிகள் இரத்த க்ளூகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகள் / மாத்திரைகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

இன்சுலீன் உபயோகம்: டைப் 1 நோயாளிகளுக்கு இன்சுலீன் மிக அவசியம். சில சந்தர்ப்பங்களில் டைப் 2 நோயாளிகளுக்கும் இன்சுலீன் தேவைப்படலாம். கணைய பாதிப்புகளால் இன்சுலீனை உடலால் உற்பத்தி செய்ய முடியாத போது, அல்லது போதுமான அளவு சுரக்காத போது, அல்லது குறைபாடுள்ள இன்சுலீன் சுரக்கையில், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இன்சுலீன் தான் உயிரைக் காப்பாற்றி நீரிழிவு நோயாளிகளை வாழ வைக்கிறது.

நான்கு வழிகளில் இன்சுலீனை எடுத்துக் கொள்ளலாம்.

ஊசி மூலமாக. சிரிஞ்ச், ப்ளஞ்சர், ஊசி இவைகளை உபயோகித்து, இன்சுலீன் உடலுள் செலுத்தப்படும். மிக மெல்லிய ஊசியை பயன்படுத்தவும். சிலர் இன்சுலீன் ‘பேனா’ வை பயன்படுத்துகிறார்கள். இது பேனா போல, ஊசி இன்சுலீன் மருந்து நிரம்பிய மருந்துக்குழலுடன் கிடைக்கிறது.

இன்சுலீன் ‘பம்ப்’ – இந்த சிறிய கருவியை சட்டைப் பையில் அல்லது இடுப்பு “பெல்ட்டில்” வைத்துக் கொள்ளலாம். இத்துடன் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் ட்யூபும், மிகச் சிறிய ஊசியும் இணைந்திருக்கும். சிறிய ஊசி தோலுக்குள் சொருகப்பட்டு, அதே நிலையில் பல நாட்கள் இருக்கும்.

இன்சுலீன் ஜெட் இஞ்ஜெக்டர் – இது ஊசியில்லாதது. இந்த கருவி போல இன்சுலீனை, அதிக அழுத்தத்தில், தோலில் தெளிக்கும்.

இன்சுலீன் இன்ஃபூஸர் – சிறிய ட்யூப் ஒன்று சர்மத்தின் அடியில் பொருத்தப்படும். இது பல நாள் பொருந்திய இடத்தில் இருக்கும். இதன் வழியே இன்சுலீன் செலுத்தப்படும்.

சில நீரிழிவு நோயாளிகள் வேறு சில மருந்துகளை ஊசி மூலம் எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கும் இன்சுலினுக்கும் சம்மந்தமில்லை. டைப் 2 நோயாளிகள், உணவு முறைகள், உடற்பயிற்சி இவற்றை சரிவர கடைப்பிடித்தாலே, மருந்துகளை தவிர்க்க முடியும்.

டைப் – 2 நீரிழிவு மருந்துகள் பல வகைகளில் கிடைக்கின்றன. சில வாய்வழியே உட்கொள்பவை. சில ஊசிமூலம் கொடுக்கப்படுபவை. இந்த மருந்துகள்:- (டைப் – 2 விற்கு)

அல்ஃபா க்ளுகோஸிடேஸ் தடுப்பிகள்

அமீலின் மிமெடிக்ஸ்

பிகுனாய்ட்ஸ்

டி.பி.பி. – 4 தடுப்பிகள்

இன்க்ரிடின் மிமெடிக்ஸ்

மெக்லிடைனிடிஸ்

ஸல்ஃபோநைலூரியாஸ்

தியாஸோலிடினெடியோன்ஸ்

ஒவ்வொரு மருந்தும் சில தனி செயல்பாடுகளை உடையவை.

உதாரணமாக சில மருந்துகள் கணையத்தை மேலும் அதிக இன்சுலீனை சுரக்க வைக்கின்றன. சில மருந்துகள், கல்லீரல், க்ளுகோஸ் தயாரிப்பதை தடுக்கின்றன. இதனால் உடல் செல்களுக்கு சர்க்கரை சக்தி சேர குறைந்த இன்சுலீன் போதும். மற்றும் சில மருந்துகள் வயிற்றின் என்சைம்களின் செயல்முறைகளை கட்டுப்படுத்துகின்றன.

மருந்துகளின் வரலாறு

பல வருடங்களாக ஸல்ஃபோநைலூரியாஸ் வகை மருந்துகள் தான் டைப் 2 நீரிழிவிற்கு, வாய் வழி மருந்தாக பயன்பட்டு வந்தன. இந்த மருந்துகள் கணையத்தை தூண்டி, அதிக இன்சுலீனை சுரக்க வைத்து, இரத்த சர்க்கரை அளவை குறைய வைத்தன. இந்த வகையில் தற்போது பயன்படுத்தப்படும் மருந்துகள் – கிளிப்ஸைட் மற்றும் க்ளைப்புரைட்

வருடம் 1990 ல், மெட்ஃபார்மின் அமெரிக்க தேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு அபார கண்டுபிடிப்பாக பாராட்டப்பட்ட மெட்ஃபார்மின், இரத்த சர்க்கரையை குறைக்கும் தன்மை உடையது. டைப் – 2 நீரிழிவு வியாதிக்கு ஏற்ற மருந்து. இன்றும் டைப் – 2 நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் முதன்மையானது. மெட்ஃபார்மின், ஸல்ஃபோநைலூரியாஸ் மருந்துகளுடன் சேர்த்து கொடுக்கலாம். பழைய கால மருந்துகளும் (மெட்ஃபார்மின், கிளிப்சைட் போன்றவை) புதிய மருந்துகளின் செயல்பாடுகளுக்கு சிறிதும் குறைந்தவைகளல்ல. இவற்றின் ஒப்பீடு கீழே கொடுக்கப்படுகிறது.

பா. மு


Spread the love
error: Content is protected !!