நம்மில் பலர் உடல் நலத்தை கவனிப்பதில்லை. நோய் நொடி வந்த பின்பு தான் கிச்சையை மேற்கொள்கிறோம். இத்தனைக்கும் நமது தேசத்து வைத்தியமான ஆயுர்வேதம் ‘வருமுன் காக்கும்‘ சிகிச்சைக்கு பிரசித்தி பெற்றது. அதன் சிறப்பு ஆரோக்கியமானவர்கள் கூட ஆயுர்வேதத்தால் தங்கள் ஆரோக்கியத்தை முதுமையிலும் தக்க வைத்துக் கொள்ளலாம். பணவசதி உள்ளவர்கள் கூட வருமுன் காக்கும் முயற்சிகளை மேற்கொள்வதில்லை. உதாரணமாக நீரிழிவு நோயுள்ள பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமென்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எத்தனை பேர் இதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்? உடலின் சில உறுப்புகளை நாம் கவனிப்பதேயில்லை, பிரச்சனை வரும் வரை. உதாரணம் – கால்கள், பற்கள்.
தொன்று தொட்டே உடலை அலட்சியம் செய்வது நமது பழக்கமாக இருந்திருக்கிறது. ‘காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா‘ என்ற துறவியல் கருத்துக்களுடன் தான். நாம் உடலை கருதுகிறோம். உடற் பயிற்சி செய்வது, உடலை திண்மையாக வைத்துக் கொள்வது முதலியவற்றை நாம் சமூகத்தில் சிறு பிரிவான “பயில்வான்” களின் வேலை என்று ஒதுக்கி விடுகிறோம்.
திருமந்திரத்தில் திருமூலர் உடலைப் பேணும் அவசியத்தை விளக்குகிறார். உடல் வெறும் உண்பதற்காகவும், புலன் இன்பங்களை துய்ப்பதற்காக மட்டுமல்ல, அது இறைவன் உறையும் ஆலயம். உள்ளுறையும் இறைவனுக்காக உடலை பராமரித்து பேணுவது அவசியம்.
நடைமுறையில் உடல் ஆரோக்கிய குறைவு ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை குறைக்கும். பெரிய வியாதிகள் வந்தால் வைத்திய செலவுகள் அதிகம். படும் அவதிகளும் அதிகம். நல்ல பழக்கங்களை மேற்கொண்டு, இயற்கை முறையில் நம் உடலை பாதுகாப்பது அறிவுள்ள செயல். இதற்கு ஆயுர்வேதம் பெரும் உதவி செய்யும். ரசாயனம், பஞ்சகர்மா எனும் ஆரோக்கியமான உடலை மேலும் ஆரோக்கியமாக்கும் வைத்திய சிகிச்சைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. நமது வாழ்க்கை முறையோடு ஒட்டி, இணைந்து செயல்படும் சிகிச்சை முறைகள் இவை. ஆயுர்வேதத்தை அணுகுங்கள். நிரந்தர ஆரோக்கியத்தை பெறலாம்.