நீங்கள் கேட்டவை

Spread the love

கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால் அது சேருவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்?

எந்த அளவிற்கு முறிவு ஏற்பட்டுள்ளது என்பதையும் முறிவு ஏற்பட்டவரின் வயதையும் பொருத்தது இது. சிறுவர்களது எலும்புகள் மிக விரைவாகச் சேர்ந்துவிடும். வயதில் முதிர்ந்தவர்களுக்கு எலும்வு முறிவு ஏற்படும் போது அவை சேராமலே போய் விடுவதும் உண்டு.

சாதாரணமாக கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் ஒரு மாதகாலம் கழுத்தில் தொட்டில் (Cast) கட்டி கையைத் தொங்கவிடவேண்டும். அடுத்த ஒரு மாதம் அந்தக் கையில் அழுத்தம் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முறிவு ஏற்பட்டது கால் பகுதியாக இருந்தால் 2 மாத காலம் கட்டுப் போட்டு இருக்க வேண்டும்.

நான் ஒரு பள்ளி மாணவி, வயது 15 எனக்கு அடிக்கடி கண்கள் சிவந்து போகின்றன. இது எதனால் ஏற்படுகிறது.

கண் சிவந்து போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தூசு துரும்புகள் கண்களில் பட்டு உறுத்தல், ஒவ்வாமை போன்றவற்றை ஏற்படுத்திக் கண்களைச் சிவக்கச் செய்யலாம். கண்வலி (Conjunctivitis) நுண்மத் தொற்றினால் ஏற்படும். ட்ரகோமா (Trachoma) ஆகியவற்றாலும் கண் சிவக்கலாம். கார்னியா (Cornea) எனப்படும் கருவிழியில் புண் இருந்தாலும் கிளாக்கோமா (Glaucoma) எனப்படும் கண் விழிநீர் அழுத்தம் இருந்தாலும் கண் சிவக்கலாம். கண் மருத்துவர் ஒருவரிடம் காட்டி ஆலோசனை பெறுவது நல்லது.

மூக்கடைப்பு எதனால் ஏற்படுகிறது? இதற்கு ஒரு மருத்துவம் சொல்லுங்கள். மூக்கடைப்பு, தடுமன், ஒவ்வாமை, உட்கொள்ளும் சில வகை மருந்துகள் சைனஸ் அழற்சி போன்ற பல காரணங்களால் ஏற்படலாம். சாதாரணமாக ஏற்படும் மூக்கடைப்பிற்கு சுத்தமான தண்ணீரில் சிறிதளவு உப்பைக் கலந்து உள்ளங்கையில் ஊற்றிக் கொண்டு மூக்கினால் உறிஞ்சி உள்ளிழுக்கலாம். இதனால் மூக்கிலுள்ள சீதச் சவ்வுகள் தளர்த்தப்பட்டு மூக்கடைப்புச் சரியாகும். உப்புப் போடாத சாதாரண தண்ணீரையும் இதற்குப் பயன்படுத்தலாம்.

சாதாரண தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் மருந்து எதுவும் போடாமல் வெறும் ஆவி பிடித்தாலும் மூக்கடைப்பு குணமாகும்.

எனக்கு வயது 64, அடிக்கடி கண்களில் புள்ளி புள்ளியாகப் பூச்சி பறப்பது போல் தெரிகிறது. இதை நிவர்த்திக்க முடியுமா?

வயது அதிகரிக்கின்ற போது சிலருக்கு இது போன்ற சில நுண்ணிய புள்ளிகள் கண் அசைவினை ஒட்டி இங்குமங்கும் ஓடக்கூடும். இதனால் தீங்கு எதுவும் நேராது. ஆனால் இப்புள்ளிகள் உருவில் பெரிதாகவும் அதிக எண்ணிக்கையிலும் தோன்றிக் கண் பார்வையை மறைக்கத் தொடங்கினால் அது விழித்திரை விடுபட்டு விலகி விட்டதால் ஏற்பட்டு இருக்கலாம். இது அபாயமான ஒரு நிலை. உடனே மருத்துவரைப் பார்த்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

என் மகளுக்கு 5 வயதாகிறது, எந்த நேரமும் மூக்கு ஒழுகிக் கொண்டே இருக்கிறது. மற்றபடி எந்தக் கோளாறும் இல்லை. இதற்கு உங்கள் அறிவுரை என்ன?

அலர்ஜிக் ரைனைட்டிஸ் (Allergic Rhinitis) எனப்படும் ஒவ்வாமையினால் ஏற்படும் மூக்கு ஒழுக்கு இது. சிலருக்கு இது அடிக்கடி தோன்றி மறையலாம்.

சில குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இருக்கலாம். வீட்டிலுள்ள தூசு, தும்புகளும், சுற்றுப்புறத்திலுள்ள செடி கொடிகளும், வீட்டு விலங்குகளின் கழிவு மற்றும் முடி போன்றவைகளும் இவ்வகை ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். மருத்துவர்களிடம் சென்றால் ஹிஸ்டமின் எதிர்ப்பிகளையும் ஒவ்வாமை எதிர்ப்பிகளையும் பரிந்துரைப்பார்கள். இவற்றால் சிறிது குணம் தெரியும். மருந்துகளை நிறுத்தியபின் மறுபடியும் மூக்கு ஒழுக ஆரம்பித்து விடும்.

முதலில் உங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வாமையை ஏற்படுத்தும் அலர்ஜன் எதுவென்று அறிந்து அதற்கான தடுப்பாற்றல் மருத்துவம் (Immuno therapy) செய்து கொள்ளுவது அவசியம்.

எனது 10 வயது மகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்வு வலிப்பு வந்து கீழே விழந்து விட்டாள். இதை எபிலெப்சி (CEpilepsy) என்று டாக்டர் சொல்கிறார். இது திரும்பவும் வருமா? தயவு செய்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

இது மூளையில் ஏற்படுகின்ற அளவிற்குகுந்த மின் அதிர்வினால் ஏற்படுவது. உடல் வலிப்பு, நடுக்கம், கண்கள் செருகுதல், நாக்கைக் கடித்துக் கொள்ளுதல், சில நேரங்களில் சிறுநீர் பிரிதல் போன்றவை ஏற்படக்கூடும். மூளையில் ஏற்பட்டுள்ள சிறு தழும்புகளாலும் கட்டிகளாலும் இது போல் ஏற்படலாம். திரும்ப திரும்ப வலிப்பு ஏற்பட்டால் தான் அது எபிலெப்சி என்று சொல்லலாம்.

வாழ்வில் முதல் முறையாக ஒருவருக்கு வலிப்பு வரும் போது அதை எபிலெப்சி என்று சொல்ல முடியாது. இதற்காகச் சில சோதனைகள் உள்ளன. (EEG/CT Scan/Blood Test/ CSF Exam) அவற்றைச் செய்து பாருங்கள். வலிப்பு நோய்க்கு (Tegreol. Sodium, Valporate, Phenytoin) போன்ற திறன்மிக்க மருந்துகள் தற்போது கிடைக்கின்றன. மருத்துவர் உதவியுடன் இம்மருந்துகளைச் சரியான அளவிஙல வராமல் தடுத்து விடலாம்.

ஒரு எச்சரிக்கை. வலிப்பு மருந்துகள் அளவிற்கு மிகுந்து கொடுக்கப்படும்போது மந்த நிலையும், தூக்கமும், கை நடுக்கமும், குளறுவதும் ஏற்படலாம். மருந்துகளைத் தேவைக்கேற்ப அளவைக் கூட்டியும் குறைத்தும் கொடுப்பது அவசியம்.

எனக்கு 32 வயதாகிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். திடீரென்று சென்ற ஒரு வருடகாலத்திற்குள் என் முகத்திலும் மார்பிலும் முடி முளைக்கத் தொடங்கியுள்ளது. எனக்கு இது சங்கடத்தையும் பயத்தையும் உண்டாக்குகிறது.

திடீரென்று முடி முளைக்கத் தொடங்கியிருக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம் என்று சோதித்து அறிவது முக்கியம். சில வேளைகளில் ஆண் ஹார்மோனைச் சுரக்க வல்ல கட்டிகள் (Tumour) ஏதாவது உங்களுடைய சினையகம் (Ovary) அல்லது அட்ரீனல் சுரப்பிகளில் வளரத் தொடங்கியிருக்கலாம். உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்து உடலின் ஹார்மோன் அளவுகளைக் கண்டறிய வேண்டும். டெஸ்ட்ரோஸ்டீரான் அளவு கூடுதலாக இருந்தால் அல்ட்ரா சவுண்ட் அல்லது ஸ்கேன் மூலம் கட்டி எங்கிருக்கிறது என்று கண்டு பிடிக்க வேண்டும்.

கட்டி எதுவும் இல்லையென்றால் சில வகை மருந்துகளைப் பயன்படுத்தி முடி வளர்ச்சியை தவிர்த்து விடலாம். முளைத்த முடியை எலெக்ட்ரோலிசிஸ் மூலம் நீக்கிவிடலாம்.

எனக்கு வயது 48. மாதாந்திர தீட்டு மிக அதிகமாகப் போகிறது. பரிசோதனைகள் செய்து பார்த்த டாக்டர் கர்ப்பப்பையில் கட்டி இருக்கிறது. எடுக்க வேண்டும் என்கிறார், ஆபரேஷன் இல்லாமல் இதைச் செய்ய முடியாதா?

உங்களுக்கு இருக்கின்ற கட்டி (Fibroid Polyp) ரொம்பவும் பெரிதாக இல்லாமல் இருந்தால் தற்போது புதிதாக வந்திருக்கும் Hysteroscopy என்னும் முறையால் எளிதாக எடுத்து விடலாம். வலி இல்லாத சிகிச்சை இது. உடலைக் கீறவும் தேவையில்லை. ஜெனரல் அனஸ்தீஷியா கொடுத்து ஹிஸ்ட்டரோஸ் கோப் கருவியை எலெக்ட்ரிக் லூப்புடன் கருப்பைக்குள் செலுத்தி கட்டியை சின்னத் துண்டுகளாக வெட்டி எடுத்து விடலாம். தக்க மருத்துவர் ஒருவரை அணுகுங்கள்.

எங்கள் மூன்று வயது மகள் இரவு நேரத்தில் ஆசன வாயில் பூச்சிக்கடிக்குது என்று சொல்லி அழுகிறாள். மெபக்ஸ் மருந்து ஒரு முறை கொடுத்தும் பயன் தெரியவில்லை?

Pin Worms எனப்படும் கீரைப் பூச்சிகள் குடலிலிருந்து இரவு வேளையில் ஆசனவாய் அருகில் வந்து முட்டைகள் இட்டுச் செல்லும். இதனால் ஏற்படும் நமச்சலைத் தான் உங்கள் குழந்தை பூச்சி கடிக்கிறது என்கிறாள். கீரைப் பூச்சிகளால் வாந்தி, தூக்கமின்மை, எடைக்குறைவு ஆசன வாயில் அரிப்பு போன்றவை உண்டாகலாம். இதற்கு மெபக்ஸ் ஒரு நல்ல மருந்து. அதைக் குறிப்பிட்ட அளவு மூன்று நாட்களுக்கு உங்கள் குழந்தையும் நீங்களும் சாப்பிட்டு வாருங்கள். சுற்றுப்புறத்தையும் உங்களது கைகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

சுய இன்பம் தவறானதா? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

நூற்றுக்கணக்கானவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் மற்றும் விலங்குகளிடையே காணப்படும் தொன்மையான பழக்கம் இது. இதனால் பெரும் தீங்குகள் எதுவும் விளைவதில்லை. இது பற்றிய குற்ற உணர்வு பலரிடம் காணப்படுகிறது. இது தேவையற்றது. இதனால் பிறப்புறுப்புக்குக் கேடு எதுவும் நேராது. மண வாழ்க்கை பாதிக்கப்பட மாட்டாது. உடல் நலம் குறையாது.


Spread the love